Saturday, April 07, 2007

இறைவர் செம்பாகத்து இருந்தவளே (பாடல் 43)பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே


பரிபுரச் சீறடிப் பாசாங்குசை - சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளை உடையவளே; பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே

பஞ்சபாணி - ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை (பாணங்களை) ஏந்தியவளே

இன்சொல் திரிபுரசுந்தரி - இனிய சொற்களையுடைய மூவுலகங்களிலும் அழகில் சிறந்தவளே

சிந்துர மேனியள் - சிந்துரத்தை மேனியெங்கும் அணிந்தவளே

தீமை நெஞ்சில் புரி புர வஞ்சரை - தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த திரிபுர அசுரர்களை அவர்கள்

அஞ்சக் குனி பொருப்புச் சிலைக் கை - அஞ்சும்படியாக மேருமலையால் ஆன வில்லை வளைத்தக் கையினை உடைய

எரிபுரை மேனி - எரியும் நெருப்பினை ஒத்த மேனியைக் கொண்ட

இறைவர் செம்பாகத்து இருந்தவளே - நம் தலைவராம் சிவபெருமானின் சரிபாதியாக இருந்தவளே

***

இறைவர் செம்பாகத்து இருந்தவளே என்று இறந்த காலத்தில் கூறியது காலம் காலமாக அவள் இறைவரின் செம்பாகத்தில் இருக்கிறாள் என்பதைக் காட்டுவதற்காக - மதுரையில் பிறந்த நாள் முதல் வாழ்ந்தவன் நான் என்று மதுரையில் தற்போதும் வாழ்கின்றவர் சொன்னால் அது அவர் என்றைக்கும் மதுரையில் வாழ்ந்தவர்; இப்போதும் வாழ்கின்றவர் என்ற பொருளை வழங்குவதைப் போல.

***

அருஞ்சொற்பொருள்:

பரிபுரம்: சிலம்பு
சீறடி: சிறிய அடி
பொருப்பு: மலை (இங்கே மேரு மலை)
சிலை: வில்
குனித்தல்: வளைத்தல்
எரி: நெருப்பு

அந்தாதித் தொடை: சென்ற பாடலை நிறைத்த பரிபுரையே என்ற சொல்லை ஒட்டி இந்தப் பாடல் பரிபுர என்று தொடங்கியது. இந்தப் பாடலை நிறைக்கும் இருந்தவளே என்ற சொல்லை ஒட்டி தவளே என்று தொடங்கும் அடுத்தப் பாடல்.

எதுகை: பரிபுர, திரிபுர, புரிபுர, எரிபுரை என்று இந்தப் பாடலிலும் இரண்டிரண்டு எதுகைகளாக இருக்கின்றன.

மோனை: பரிபுர - பாசாங்குசை - பஞ்ச - பாணி, திரிபுர - சிந்துர - தீமை (சகரமும் தகரமும் மோனைகளாக அமையும்), புரிபுர - பொருப்பு, எரிபுரை - இறைவர் - இருந்தவளே (எகரமும் இகரமும் மோனைகளாக அமையும்)

சுந்தரி சிந்துர என்ற இடத்திலும் வஞ்சரை அஞ்ச என்ற இடத்திலும் ஒரே ஓசைகள் வரும்படி அழகுடன் அமைந்திருக்கிறது.

10 comments:

said...

குமரன். இடது பக்கம் செம்மையான பக்கமா? வலது பக்கத்தை தானே நல்ல பக்கமாக சொல்வார்கள்?

said...

குமரா!
இந்தச் செம்பாகமென்பதை ;செம்மையான (சரி பாதி) அரைப் பாகம் எனக் கொள்ளக் கூடாதா?

said...

கிஷோர். உங்க கேள்விக்கு யோகன் ஐயா நல்ல பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள். நான் செம்மையான பாகம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் செம்பாகம் என்பதற்கு சரிபாதி என்றொரு பொருளும் இலக்கியத்தில் பயின்று வரும். அதனை ஐயா சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இடப்பக்கமோ வலப்பக்கமோ இரண்டுமே உடலின் பாகங்கள் தானே. அதில் ஏற்றத் தாழ்வு ஏன்? நம் ஊர் சாரணர்கள் இடது கையால் தானே கை குலுக்குவார்கள்? அதற்கு அவர்கள் சொன்ன விளக்கம் இதயம் இடப்பக்கத்தில் இருப்பதால் என்பது. :-)

அம்மை எந்தப் பக்கம் இருக்கிறாளோ அதுவே ஐயனின் செம்பாகம் என்றும் சொல்லலாம். :-)

said...

ஆம் யோகன் ஐயா. இந்தப் பாடலில் நீங்கள் சொன்னதே சரியான பொருள். 'செம்பாகத்து இருந்தவளே' என்றால் 'சரிபாதியாக இருந்தவளே' என்ற பொருளே சரி. இடுகையிலும் மாற்றிவிட்டேன்.

சென்ற பாடலிலும் 'படம்' என்பதே சரி என்று இன்னொரு புத்தகத்தைப் பார்த்து மாற்றிவிட்டேன்.

said...

வாம பாகம்,செம்பாகம் எதாயிருந்தால் என்ன அம்பாள் இருக்கும் இடம் செம்மையாக இருக்கும்.

அவளை இதயத்தில் இருத்தினால் போதும், நம் கவலை எல்லாம் தீரும்.
இதுவே பொருள்,அருள் எல்லாம் என்கிறார் பட்டர். இல்லையா குமரன்.?

said...

’தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை’ என்பதால் இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'தீமையெல்லாம் ஒழியும்'.

said...

உங்களைக் காணவில்லையே என்று எண்ணியிருந்தேன். பாடலைப் பாடுவதால் கிடைக்கும் பயனைச் சொன்னதற்கு நன்றி சிவமுருகன்.

said...

சரியாகச் சொன்னீர்கள் வல்லி அம்மா. அவள் அருளால் அவள் தாள் வணங்குவோம்.

said...

நல்ல பாடல். நல்ல விளக்கம்.

நீங்கள் இட்டிருக்கும் படம்..தஞ்சைப் பெரிய கோயிலின் சுற்று மண்டபத்து ஓவியம். அழகான ஓவியம். இன்று பெருமளவில் அழிந்து போனவைகளில் தப்பிப் பிழைத்தது. காண்கையில் மகிழ்ச்சி பொங்குகிறது.

செம்பாகத்திற்கு விளக்கத்தை எல்லாரும் மேலோட்டமாக அணுகியிருக்கிறீர்களோ என ஐயுறுகிறேன். நன்றாக அந்த வரியைப் படியுங்கள். எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

எரிகின்ற நெருப்பில் செம்மை எது? ஒளி. நெருப்பிற்கு உரிய பண்புகள் வெப்பமும் ஒளிச்சுடரும். வெப்பத்திற்கு நிறமில்லை. ஆனால் ஒளிச்சுடருக்கு? அது செம்மைதானே? அப்படி வெளிச்சமும் வெப்பமும் சேர்ந்திருப்பதுதான் அம்மையப்பன். பிரிக்க முடியாதது. இப்பொழுது செம்பாகம் என்பது எது என்று புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். "தரணியில் அரணிய" என்ற பாடலில் "எரிபுரை வடிவினள்" என்று அம்மையை விளிக்கிறார்.

said...

அருமையான விளக்கத்திற்கு நன்றி இராகவன்.