Saturday, April 21, 2007

வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் (பாடல் 47)



வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே


வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே - என்றும் நிலைத்து வாழும் வகையை என் மனத்தில் கண்டு கொண்டேன்

ஒருவர் வீழும் படி அன்று - அந்த வழியைக் கண்டவர் யாரும் அழிவதில்லை

விள்ளும் படி அன்று - அந்த வழியைக் கண்டவர்கள் மற்றவர்களுக்கு அதனைச் சொல்லுவதும் எளிதில்லை

வேலை நிலம் ஏழும் - கடலால் சூழப்பட்ட ஏழு தீவுகளும்

பருவரை எட்டும் - எட்டு உயர்ந்த மலைகளும்

எட்டாமல் - எட்டாமல் (அப்பாலுக்கு அப்பாலாய்)

இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே - இரவில் வரும் நிலவென்னும் சுடர், பகலில் வரும் பகலவன் என்னும் சுடர் இவ்விரண்டு சுடர்களிலும் ஒளியாக நின்று சுடர்கின்றது அந்தப் பேரொளி.

***

நிலையான பேரின்ப வாழ்வை அடையும் வழியை அன்னையின் அருளால் கண்டு கொண்டவர் அந்தப் பேரொளி உலகங்களுக்கெல்லாம் எட்டாமல் சுடரிரண்டிலும் சுடர்கின்றது என்று மட்டுமே சொல்ல முடிகிறது என்கிறார்.

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்ற முதுமொழியையும் அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்ற ஆன்றோர் மொழியையும் சூரிய சந்திர மண்டலத்தில் வசிப்பவள் என்ற வேதமொழியையும் இந்தப் பாடலில் காணமுடிகின்றது.

***

அருஞ்சொற்பொருள்:

விள்ளுதல் - பிரித்துப் பிரித்து விளக்கமாகச் சொல்லுதல்

வேலை - கடல்

பரு வரை - பெரிய (பருத்த) மலை

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வாழ்த்துவனே என்று நிறைந்தது. இந்தப் பாடல் வாழும்படி என்று தொடங்கியது. இந்தப் பாடல் சுடர்கின்றதே என்று நிறைந்தது. அடுத்தப் பாடல் சுடரும் என்று தொடங்கும்.

எதுகை: வாழும், வீழும், ஏழும், சூழும்

மோனை: வாழும் - ஒன்று - மனத்தே - ஒருவர், வீழும் - விள்ளும் - வேலை, ஏழும் - எட்டும் - எட்டாமல் - இரவு, சூழும் - சுடர்க்கு - சுடர்கின்றதே.

வாழும்படி - வீழும்படி, எட்டும் - எட்டாமல், இரவு பகல், போன்ற இடங்களில் முரண் தொடை அமைந்துள்ளது.

18 comments:

said...

"வீழும் படி அன்று விள்ளும் படி அன்று "

அற்புதம் குமரன்

said...

மிக்க நன்றி சங்கர் அண்ணா. (அண்ணான்னு கூப்பிடலாம்ல?)

said...

அன்னையைக் காணும்படி செய்வதும் அவள் பொறுப்பே.
அருமையான படம் குமரன்.
அன்னையும் அவள் வாகனமும் அழகோ அழகு.

said...

ஆமாம் அம்மா. மிக நல்ல படம். அவள் அருள்.

said...

குமரன்,
பதிவுக்கு நன்றி. உங்களின் "அருஞ்சொற்பொருட்கள்" முலம் பல தமிழ்ச் சொற்களை அறிய முடிகிறது.

பதிவைச் சில தினங்களுக்கு முன் படித்திருந்தும், பஞ்சியால்[சோம்பல்] பின்னூட்டம் எழுதவில்லை.

இன்னும் தொடருங்கள்.

said...

நன்றி வெற்றி. பஞ்சியால் பலமுறை பலரின் பதிவுகளில் படித்துவிட்டுப் பின்னூட்டம் இடாமல் விட்டிருக்கிறேன். :-)

said...

அருமை. பொழிப்புரை மாதிரி குடுத்துட்டீங்க. இலக்கிய நயம் பாராட்டல் பாநயம் பாராட்டல் மாதிரி விளக்கம். நல்லாயிருக்கு.

பஞ்சி பஞ்சிச் சாவார்னு
அவர் பஞ்சாத பொழுதில்லை அவனியிலே

இது எப்படியிருக்கு? :-)

said...

பாராட்டிற்கு நன்றி இராகவன். பஞ்சுவது பஞ்சாமை பேதைமை. இது எப்படி இருக்கு? :-)

தமிழ்மணத்துல எல்லோரும் பட்டை போடறப்ப பஞ்சிப் பேசாம இருந்தேன். வெற்றி பஞ்சாம ஏதோ சொன்னார். நானும் அது தான் நானும் சொல்றேன்னு சொல்லிட்டேன். :-)

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'யோகசித்தி பெறலாம்'.

said...

வாழும்படி கண்டு கொண்டேன் என்றதால் 'யோக சித்தி கிட்டும்' என்ற பயன் பொருத்தம். நன்றி சிவமுருகன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

can i get link to download the mp3 of abirami andhadhi

said...

Sriya,

Please search in www.raagaa.com for Abirami anthaadhi.

said...

The seven chakras and the Sun and the Moon (Day and Night) the Naadi...and beyond the unreachable 8th thuriyaateetham!!!

The reason for living is the ONE... :)

said...

Good explanation. Thanks Cevu.