Friday, April 06, 2007

பனி மொழி வேதப் பரிபுரையே (பாடல் 42)இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே


இடங்கொண்டு விம்மி - தகுந்த இடத்தில் இருந்து கொண்டு பெருமிதத்தால் விம்மி

இணை கொண்டு - ஒன்றிற்கொன்று இணையென்னும்படியாக அமைந்து

இறுகி இளகி - இறுகியும் அதே நேரத்தில் மென்மையுடன் இளகியும்

முத்து வடங்கொண்ட - முத்து மாலையை அணிந்தும் இருக்கும்

கொங்கை மலை கொண்டு - மலைகள் என்னும் படியான கொங்கைகளைக் கொண்டு

இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட - நம் தலைவராம் சிவபெருமானின் எதற்கும் அசையாத வலிய நெஞ்சையும் உன் எண்ணத்திற்கு ஏற்ப ஆடம் படி செய்த

கொள்கை நலம் கொண்ட நாயகி - பிள்ளைகளான எங்களுக்கு அருள் செய்யும் நல்ல கொள்கை நலம் கொண்ட தலைவியே

நல் அரவின் படம் கொண்ட அல்குல் - நல்ல பாம்பு படமெடுத்ததைப் போல் இருக்கும் அல்குலைக் கொண்ட

பனி மொழி வேதப் பரிபுரையே - குளிர்ந்த பேச்சினையுடைய வேதங்களைக் காலில் சிலம்பாய் அணிந்தவளே.

**

அந்தாதித் தொடை: இடவே என்று சென்ற பாடல் நிறைந்தது; இந்தப் பாடல் இடம் கொண்டு என்று தொடங்கியது. இந்தப் பாடல் பரிபுரையே என முடிகிறது; அடுத்தப் பாடல் பரிபுரச் சீறடி என்று தொடங்குகிறது.

எதுகை: இடம் கொண்டு, வடம் கொண்ட, நடம் கொண்ட, வடம் கொண்ட என்று இரண்டிரண்டு எதுகைகளாக அமைத்திருக்கிறார்.

மோனை: இடம் - இணை - இறுகி - இளகி, வடம் - வலிய, ந்டம் - நலம் - நாயகி - நல், படம் - பனி - பரிபுரை.

மற்றைய அணிகள்:
கொண்டு/கொண்ட என்ற சொல்லை மீண்டும் மீண்டும் அழகுறப் பயன்படுத்தியுள்ளார்.
வலிய நெஞ்சைப் பொருதுவதற்கு மலை தானே வேண்டும். அதனையும் சொல்கிறார்.
இறுகி இளகி என்று முரண் தொடையைக் காட்டுகிறார்.
அம்மையின் அழகைப் போற்றும் இந்தப் பாடல் முழுதுமே அழகு.

23 comments:

said...

குமரன்,
அருமையான பாடல். அழகான விளக்கம். மிக்க நன்றிகள்.
பல தமிழ்ச் சொற்களையும் அறிந்து கொண்டேன். தொடருங்கள்.

said...

அபிராமியை நேரெ பார்ப்பது போல்த் தோன்றும் பாடல்.

நீங்கள் அளிக்கும் இலக்கண விளக்கமும் நன்றாக இருக்கிறது. குமரன்.
வெள்ளிக்கிழமை அபிராமியைக் காண்பது அருமை.

said...

///அம்மையின் அழகைப் போற்றும் இந்தப் பாடல் முழுதுமே அழகு.///

அதேபோல் நீங்கள் வரிக்கு வரி சொல்லிற்குச் சொல் கொடுத்த விளக்கமும் அழகுதான்!

நன்றி!

said...

உங்கள் பக்கத்தில், வலது பக்கத்தில் உள்ள லின்கில் உள்ள எழுத்துக்கள் ஃபயர் பாக்ச்ஸில் பூச்சியாக தெரிகிறது.
கொஞ்சம் பாருங்கள்.

said...

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே

ஆஹா! இந்த வரிகளை கேட்கும்போதே...எனக்கு ஒரு தனி ஆனந்தம் வரும். அருமை!

said...

இது குணா படத்தில் இடம்பெற்ற பாடல்.

said...

ராஜா இசையமைத்து கேட்ட மெட்டு இன்னும் மனதிலேயே இருக்கிறது. முழு அபிராமி அந்தாதிக்கு அவர் அப்படி இசையமைத்துத் தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

said...

மிக்க மகிழ்ச்சி வெற்றி. கொங்கை, அல்குல் போன்ற பழந்தமிழ் சொற்களை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவற்றை இந்தக் காலச் சொற்களில் சொன்னால் கெட்ட வார்த்தைகள் என்று புரிந்து கொள்வோம்.

said...

நன்றி வல்லி அம்மா. முடிந்த போது இடுகைகளை இடுகிறேன். நீங்கள் வழக்கம் போல் தொடர்ந்து வந்து அபிராமியின் புகழ்களைப் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லவேண்டும்.

said...

பாராட்டுகளுக்கு நன்றி வாத்தியார் ஐயா.

said...

ஆமாம் குமார். கொஞ்சம் நேரம் செலவழித்து அந்த பூச்சிகள் எழுத்துகளாகத் தெரியும் படி செய்ய வேண்டும். விரைவில் அதற்கேற்ற ஊக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஃபயர் ஃபாக்ஸில் மட்டுமில்லை ஐ.ஈ.விலும் அப்படித் தான் தெரிகின்றன.

said...

வாங்க நாகை பாலமுரளி. அடியேனுடன் சேர்ந்து நீங்களும் இந்தப் பாடலை இசைத்து மகிழ்ந்ததற்கு நன்றி.

said...

ஆமாம் தங்கவேல். நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கு அந்த 'பார்த்த விழி பார்த்தபடி' பாடல் நினைவிற்கு வந்தது. பல முறை விரும்பிப் பார்த்த, கேட்ட பாடல்.

said...

கொத்ஸ். எஸ்.கே.கிட்ட கேளுங்க அதைப் பத்தி. இளையராஜா ஆழ்வார் பாசுரங்களை திருவாசகம் போல் இசைக்க விரும்புகிறார் என்று படித்திருக்கிறேன். அவர் அபிராமி அந்தாதியையும் அப்படி இசைத்தால் நன்றாக இருக்கும். இப்போது வரை அபிராமி அந்தாதி என்றால் சீர்காழியார் பாடியது தான் முதன்மையாக இருக்கிறது.

said...

படிக்கத் திகட்டும் என்று சொல்வார்களே அது இது தான் .
என்ன மொழி / கவி ஆளுமை !

said...

கார்த்திக்வேலு. எத்தனைப் படித்தாலும் திகட்டாது என்று சொல்வார்கள். நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்களே. ஓ. திகட்டும் அளவிற்குத் தித்திப்பாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா?! ஆமாம் அது உண்மை. இவை தித்திக்கும் தேன்பாகு. ஆனால் திகட்டாத தெள்ளமுது.

said...

"இடங்கொண்டு" என்பதற்கு, ஈசனின் இடது பக்கத்தைக் கொண்டு எனப் பொருள் கொள்ளலாமா?

உங்கள் அருட்பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

ராஜா

said...

இராஜகோபால். இடம் கொண்டு என்றவுடன் நானும் அப்படித் தான் நினைத்தேன். ஆனால் அடுத்து வந்த விம்மி என்ற சொல் தான் தகுந்த இடத்தில் என்ற பொருளைச் சொல்லலாம் என்று எண்ண வைத்தது.

தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

said...

குமரா!
முத்துவடம் - முத்துமாலை ; அரவின் வடம் - நல்ல பாம்பு படமெடுப்பதுபோல்; வடம் எனில் மொத்த கயிறு (தேர் வடம்) எனும் கருத்துமுண்டு. வடத்துக்கு;படமெனும் பொருளுமுண்டா?

said...

நல்ல கேள்வி கேட்டீர்கள் யோகன் ஐயா. படமெடுத்தப் பாம்பைப் போன்றது அழகிய பெண்ணின் அல்குல் என்ற உவமை இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது. இந்தப் பாடலில் நல் அரவின் படம் கொண்ட அல்குல் என்றும் ஒரு பாடம் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான் படித்த புத்தகத்தில் வடம் கொண்ட என்று தான் இருக்கிறது. நான் அதனை அப்படியே இட்டுவிட்டுப் பொருள் சொல்லும் போது படம் என்ற பொருளைச் சொல்லியிருக்கிறேன். படம் என்ற பாடமும் சரியாக இருக்கும் என்பதற்கு பனிமொழி பரிபுரை என்று வரும் மோனைச்சுவைச் சொற்களும் சொல்கின்றன.

said...

//அந்தாதித் தொடை: இடவே என்று சென்ற பாடல் நிறைந்தது; இந்தப் பாடல் இடம் கொண்டு என்று தொடங்கியது. இந்தப் பாடல் பரிபுரையே என முடிகிறது; அடுத்தப் பாடல் பரிபுரச் சீறடி என்று தொடங்குகிறது.

எதுகை: இடம் கொண்டு, வடம் கொண்ட, நடம் கொண்ட, வடம் கொண்ட என்று இரண்டிரண்டு எதுகைகளாக அமைத்திருக்கிறார்.

மோனை: இடம் - இணை - இறுகி - இளகி, வடம் - வலிய, ந்டம் - நலம் - நாயகி - நல், படம் - பனி - பரிபுரை.

மற்றைய அணிகள்:
கொண்டு/கொண்ட என்ற சொல்லை மீண்டும் மீண்டும் அழகுறப் பயன்படுத்தியுள்ளார்.
வலிய நெஞ்சைப் பொருதுவதற்கு மலை தானே வேண்டும். அதனையும் சொல்கிறார்.
இறுகி இளகி என்று முரண் தொடையைக் காட்டுகிறார்.
அம்மையின் அழகைப் போற்றும் இந்தப் பாடல் முழுதுமே அழகு. //

சங்கிலியால் பிணையப்பட்டு, எரிதழலால் பீடிக்கப்படும் போதும் எப்படி தான் இவ்வளவு செய்ய முடிகிறதோ. என்னே அவளருள்.

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'உலகம் நமக்கு வசியப்பட்டிருக்கும்'.

said...

இறைவனின் வலிய நெஞ்சை இறைவி வசியம் செய்தது போல் உலகமும் நமக்கு வசப்பட்டிருக்கும். நல்ல பலன் சிவமுருகன்.

said...

ஆம்