Wednesday, January 10, 2007

இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே! (பாடல் 25)



பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் - உன் அடியவர்களின் பின்னால் திரிந்து அவர்களை அடி பணிந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து என் பிறப்பிறப்புத் துன்பத்தை அறுத்துக் கொள்ளும் பாக்கியத்தை பலகாலமாக செய்தத் தவங்களின் பயனால் அடைந்தேன்.

முதல் மூவருக்கும் அன்னே - முதல் மூவரான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே!

உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே - அபிராமி அன்னை என நிற்கும் உலகத் துன்பங்களுக்கெல்லாம் கிடைத்தற்கு அரிய மருந்தே
என்னே - என்னே உன் பெருமைகள்.

இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே - இனியும் உன்னை நான் மறக்காமல் தொழுது கொண்டிருப்பேன்.

6 comments:

said...

குமரன் ,
மனம் கலக்கமாக இருக்கும்போதும்,இல்லை

அபிராமியை மறந்துவிடுவேனோ என்ற பயம் வரும்போதும் அவளைத் தேடுவது வழக்கமாகி விட்டது.
உங்கள் பதிவு மூலம் மறவாமை எனக்கு வாய்க்க வேண்டும்.
நன்றி.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நினைத்த காரியம் இடயீறின்றி ஈடேறும்'.

said...

வல்லியம்மா. உங்களுக்கு மட்டும் இன்றி எல்லோருக்கும் அந்த நிலை வாய்க்க வேண்டும்.

said...

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் என்றதால் இந்தப் பாடலைப் பாடுவதால் நினைத்தக் காரியம் நிறைவேறும் என்ற பலன் பொருத்தமானதே. நன்றி சிவமுருகன்.

said...

//மனம் கலக்கமாக இருக்கும்போதும்,இல்லை
அபிராமியை மறந்துவிடுவேனோ என்ற பயம் வரும்போதும் அவளைத் தேடுவது வழக்கமாகி விட்டது.//

படுக்கப் போகும்முன் அன்னை நினைவாகப் போகணும். மனசு அலைஞ்சுகிட்டே இருந்தது. அதான் எழுந்து மறுபடி அபிராமியைப் பார்க்க வந்தேன்... அதே காரணத்தை இங்க பார்த்ததும் ஆச்சர்யமாப் போச்சு. உங்களுக்கு மிகுந்த நன்றிகள், குமரன்!

said...

வல்லியம்மாவைப் போன்றே உங்களுக்கும் அன்னையின் மேல் பாசம் இருப்பது தெரிகிறது கவிநயா. அதனால் தான் இப்படிப்பட்ட அனுபவங்கள். நன்றி.