Sunday, January 28, 2007

கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே (பாடல் 26)



ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம் - உன்னை என்றும் போற்றிப் புகழ்பவர்கள் யார் என்று கேட்டால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிகின்ற மும்மூர்த்திகளான பிரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள்.

கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே - மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே!

மணம் நாறும் நின் தாளிணைக்கு - தேவர்களில் எல்லாம் சிறந்தவர்களான மும்மூர்த்திகளாலும் போற்றிப் புகழப்பட்டு அந்தப் புகழ் மணம் கமழும் உன் இணைத்தாள்களுக்கு

என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே - என் நாவில் இருந்து தோன்றிய கீழான சொற்கள் புகழ்ச்சியாகப் போனது நல்ல நகைச்சுவை.

முதல் மூவரும் போற்றும் திருவடிகளுக்கு கீழான எனது பாடல்களும் அணிகலன்களாகப் போனது தான் என்ன வியப்பு? அன்னையின் எளிவந்த தன்மை தான் என்னே? என்று வியக்கிறார் பட்டர்.

6 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'சொல்வன்மையும் செல்வாக்கும் பெருகும்'

said...

'என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே' என்றதால் இப்பாடலைப் பாராயணம் செய்தால் 'சொல்வன்மை பெருகும்' என்ற பயன் பொருத்தமானதே.

மிக்க நன்றி சிவமுருகன்.

said...

குமரன்,
நல்ல ஒரு பாடலும் அருமையான விளக்கமும். மிக்க நன்றி. இப் பாடல் எக் காலப்பகுதியில் இயற்றப்பட்டது?

/* கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே - மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே! */

கடம்ப மரம் பற்றிச் சொல்லியுள்ளதால் கேட்கிறேன். நண்பர் இராகவனும் கடம்பமரம் பற்றி இலக்கியங்களிலும் பழம் பாடல்களிலும் சொல்லப்பட்டிருக்கிறதி என்று சொன்னார். எனக்கு இந்தக் கடம்பமரம் பற்றி எம் முன்னோர் சொன்ன பல தகவல்களை அறிய ஆவல். நீங்களோ அல்லது இராகவனோ நேரம் கிடைக்கும் போது இது பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என அன்புக்கோரிக்கை ஒன்றை உங்கள் முன் வைக்கிறேன். நான் பல தடவைகள் பல இடங்களில் சொன்னது போல், கடம்பமரத்திற்கும் எம் ஊருக்கும் ஒரு தொடர்பு.

said...

நல்ல கேள்விகள் வெற்றி. இந்த அபிராமி அந்தாதி என்ற நூறு பாடல்கள் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமி பட்டர் என்னும் பெருந்தகையால் இயற்றப்பட்டவை.

கடம்ப மரத்தைப் பற்றி பல இலக்கியங்களிலும் சொல்லப்பட்டிருப்பது உண்மை தான். நேரம் கிடைக்கும் போது கடம்பமரத்தைப் பற்றி உள்ள இலக்கியத் தகவல்களை கொடுக்கிறேன்.

said...

//என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே //

எனக்கு ரொம்பப் பிடிச்சது. பட்டரே இப்படிச் சொன்னா நானெல்லாம் எங்க போறது?

said...

உன்மை தான் கவிநயா. ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனாலும் அவள் பெருமைகளைச் சொல்லி முடியாது. நாம் எல்லாம் எந்த மூலைக்கு என்று தோன்றுவதை நம் சார்பாக அடிகள் சொல்லிவிட்டார்.