கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே
கிளியே - அழகிய கிளி போன்றவளே!
கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே - உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அடியார்களின் மனத்தில் எப்போதும் இருந்து சுடர் விட்டு ஒளிரும் ஒளியே!
ஒளிரும் ஒளிக்கு இடமே - அப்படி ஒளிக்கும் ஒளிக்கு இடமானவளே!
எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே - எண்ணிப்பார்த்தால் சூன்யமாய் இருக்கும் வெட்ட வெளியானவளே!
வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே - வெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் (விண், மண், காற்று, தீ, நீர்) விரிந்து நின்ற தாயே! அபிராமியே!
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே - கருணையுள்ளவனும் எளியவனும் ஆன என் அறிவுக்கும் எட்டும் அளவாய் நீ நின்றது அதிசயமே! அது உன் கருணையன்றி வேறு என்ன?
அழகிய கிளி போன்றவளே! உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அடியார்களின் மனத்தில் எப்போதும் இருந்து சுடர் விட்டு ஒளிரும் ஒளியே! அப்படி ஒளிக்கும் ஒளிக்கு இடமானவளே! எண்ணிப்பார்த்தால் சூன்யமாய் இருக்கும் வெட்ட வெளியானவளே! வெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் (விண், மண், காற்று, தீ, நீர்) விரிந்து நின்ற தாயே! அபிராமியே! கருணையுள்ளவனும் எளியவனும் ஆன என் அறிவுக்கும் எட்டும் அளவாய் நீ நின்றது அதிசயமே! அது உன் கருணையன்றி வேறு என்ன?
Monday, January 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
அருமையான கருத்துக்கள்
மிக்க நன்றி என்னார் ஐயா. ஆமாம். நல்ல கருத்துக்களைத் தான் சொல்லியிருக்கிறார் அபிராமி பட்டர்.
குமரனுக்கு ஒரு கேள்வி. ஏன் அபிராமி பட்டர் கிளைஞர் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார்? இது குறித்து உங்கள் எண்ணம் என்ன?
எனக்குத் தெரியலையே இராகவன். ஏன் என்று சொல்லுங்கள்.
என்ன இராகவன். எனக்குத் தெரியலைன்னு சொன்னதைப் படிக்கலையா? கிளைஞர் என்று ஏன் சொல்கிறார் சொல்லுங்கள்.
அடடே! இத நான் கவனிக்கலையே!
குமரன், எனக்குத் தோணும் விளக்கத்தைச் சொல்றேன்.
கிளையென்றால் என்ன? ஒன்றிலிருந்து ஒன்று வருவது. அந்த ஒன்றிலிருந்து மற்றொன்று. இப்படி கிளைத்துக் கொண்டே இருக்கும். அதுபோல அன்னையைப் பற்றிய எண்ணம் கிளைத்துக் கொண்டே இருப்பவர்கள் கிளைஞர்கள்.
இளைஞர்கள் மனதில் ஒரு எண்ணம் உண்டானால் அது வேறொரு எண்ணத்திற்குத் தாவி...அங்கிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும். மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல. இதை free rein என்பார்கள். உஷா சொல்லும் கதைக்கலாம் வாங்க போல.
ஆனால் கிளைஞர்கள் அம்பிகையைப் பற்றிச் சிந்தித்தால் அது அம்பிகை பற்றிய இன்னொரு கிளையாகி...அது ஒரு கிளையாகி......புரிகிறதா நான் சொல்ல வருவது?
கிளர்ந்தல் நல்ல எண்ணங்கள் உருவாகுதல் அது எவர் மனத்தில் உருவகுமோ அவர்கள் கிளைஞர்.எனவே கிளியே, கிளர்ந்து, என்பதற்கு பொருந்தும் வகையில் கிளைஞ்ர் என்ற சொல்லைப்போட்டு இருக்கலாம்..என்பது என் கருத்து தி ரா ச
நல்ல விளக்கம் இராகவன். மிக்க நன்றி. எனக்குத் தோன்றவில்லை.
ஆமாம் தி.ரா.ச. நீங்கள் சொன்ன மாதிரி தான் எனக்கும் தோன்றியது.
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'முக்காலமும் உணரும் அற்றல் உண்டாகும்'.
நன்றி சிவமுருகன்
//கிளையென்றால் என்ன? ஒன்றிலிருந்து ஒன்று வருவது. அந்த ஒன்றிலிருந்து மற்றொன்று. இப்படி கிளைத்துக் கொண்டே இருக்கும். அதுபோல அன்னையைப் பற்றிய எண்ணம் கிளைத்துக் கொண்டே இருப்பவர்கள் கிளைஞர்கள்.//
இந்த விளக்கம் நன்றாக இருக்கிறது.
நன்றி கவிநயா.
Post a Comment