Thursday, January 26, 2006

132: *நட்சத்திரம்* - அதிசயம் ஆன வடிவுடையாள் (பாடல் 17)


அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே


அதிசயம் ஆன வடிவுடையாள் - அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள்.

அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி - அரவிந்தமாகிய தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள்

துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர் - அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர்.

தம் மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே - அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம்.

அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள். தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள். அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர். அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம்.

***

ஆனனம் - திருமுகம். எடுத்துக்காட்டுகள்: கஜானனன் - யானைமுகன்; ஷடானனன் - ஆறுமுகன்; பஞ்சானனன் - ஐந்துமுகன் (சிவன்).

சயம் - ஜெயம் - வெற்றி

அபசயம் - அபஜெயம் - தோல்வி

மதி சயம் - மதி ஜலம் - மதி நீர்

மதி சயம் - மதியை வெற்றி

19 comments:

said...

தை வெள்ளியில் அன்னையின் புகழ் பாடும் உங்கள் பதிவு சிறக்க அதிசயமான வடிவுடையாள் அருள் புரிக !

said...

வருகிறது!சீர்காழி கோவிந்தராஜன் வெண்கலக் குரலில் பாடியது நினைவிற்கு வருகிறது!புண்ணியமும் நன்றியும் உங்களுக்குத்தான்!

said...

"அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம்"

வலது பாகமா இடது பாகமா ? தி. ரா.ச

said...

அருமையான விளக்கம். இந்த விளக்கத்தில் சில சொற்களுக்கு நீங்கள் அளித்திருக்கும் பொருள் மிக நன்று. இனியும் இதுபோன்று முடிந்தவரை தாருங்கள்.

said...

வந்தேன் + போடேன்

said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி மணியன். ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்தது. தை வெள்ளியுமா? தெரியாமல் இருந்தது.

said...

நடேசன் சார். நானும் சீர்காழி பாடின அபிராமி அந்தாதிப் பாடல்களை அடிக்கடிக் கேட்பேன். அற்புதமாகப் பாடியிருப்பார்.

said...

வாம பாகம் என்றால் இடது பாகம் தான் தி.ரா.ச.

இணையத்தில் கிடைத்த அர்த்தநாரீஸ்வரர் படத்தையும் பதிவில் சேர்த்திருக்கிறேன். பாருங்கள்.

said...

முடிந்தவரை இந்த மாதிரி பொருள் தருகிறேன் இராகவன். நன்றி.

கார்த்திக் ஜெயந்த் உங்கள் + க்கு மிக்க நன்றி. :-)

said...

first time varen. Naanum madurai kaaran dhan ippo US la padichittu irukken.
Romba nalla muyarchi idhu..

Thanks for your efforts.

-vijay

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜய். தொடர்ந்து என் மற்ற வலைப்பூக்களையும் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நம்ம ஊர்க்காரரா வேற இருக்கீங்க. அதனால நிச்சயமா என் மற்ற வலைப்பக்கங்களையும் படிப்பீங்கன்னு நினைக்கிறேன். :-)

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'கன்னிகைக்ளுக்கு நல்ல வரன் கிடைக்கும்'.

said...

நன்றி சிவமுருகன்

said...

அன்பு குமரன்,
மதியும், சலமாகிய கங்கையும் தலையில் ஏறிக்கொண்டனர். அம்மை பார்த்தாள். உடனே இடப்பாகம் முழுவதையுமே எடுத்துக்கொண்டு விட்டார்.

said...

ஞானவெட்டியான் ஐயா. அருமையாக இருக்கிறது இந்த கருத்து. நகைச்சுவையாகவும் இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

said...

காமனைத் தன் கண்ணழலாலே சுட்டெரித்து வெற்றி கொண்டவர் சிவபெருமான். அந்தத்தோல்வி காமன் நெஞ்சில் அம்புபோல் பகையாக உறுத்திக்கொண்டேயிருந்தது.
பரமேஸ்வரன் தேவியை விளையாட்டாக கேலி செய்துவிட்டு, அவளின் ஊடலைத் தணிக்க தன் நெற்றி அவள் பாதத்தில் பட வணங்குகிறார். நெற்றிக்கண் தேவியின் பாதத்தில் படும்போது மன்மதன் தன் நெஞ்சினுள்ள நெடுநாள் பகையைத் தீர்த்துக்கொண்ட மகிழ்ச்சியில் 'கலீர்' 'கலீர்' என அவள் சிலம்புகள் மூலம் வெற்றியொலி எழுப்பி மகிழ்கிறான். (ஊடலில் பரமேஸ்வரன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி அல்லவா?).

- சௌந்தர்யலஹரி

said...

ஜெயச்ரி. நீங்கள் சொல்லும் சௌந்தர்யலஹரி பாடல்களின் பொருளைப் பார்க்கும் போது சீக்கிரம் எல்லாப் பாடல்களையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.

said...

//அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி //

இந்த வரி எனக்கு ரொம்பப் பிடித்தது. மன்மதனின் வெற்றி பற்றி ஜெயஸ்ரீ அவர்கள் சொன்னதும்! :)

said...

ஆமாம் கவிநயா. அருமையான வரி அது. ஜெயஸ்ரீ சமய இலக்கியங்களில் பெரும் புலமை பெற்றவர். தற்போது அவ்வளவாக வலைப்பக்கம் காணமுடிவதில்லை. வேலை மிகுதி என்று நினைக்கிறேன்.