Sunday, January 27, 2008

அம்மை நாமம் திரிபுரை (பாடல் 73)


கடம்ப மாலை முருகப் பெருமானுக்கும் கடம்பவனம் அம்மைக்கும் என்று கேட்டிருக்கிறோம். அம்மை கடம்பமாலையும் அணிந்தவள் என்கிறாள் பட்டர் இந்தப் பாடலில்.

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே


தாமம் கடம்பு - நீ அணியும் மாலை கடம்ப மாலை


படை பஞ்சபாணம் - நீ ஏந்திய படை ஐந்து மலர்க்கணைகள்

தனுக் கரும்பு - வில்லோ கரும்பு வில்

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது - உன்னை வணங்கும் பக்தர்கள் உன்னை ஏத்தும் பொழுது நள்ளிரவு

எமக்கு என்று வைத்த சேமம் திருவடி - எமக்கு என்று நீ வைத்திருக்கும் பாதுகாப்பு / செல்வம் உன் திருவடிகள்

செங்கைகள் நான்கு - செம்மையுடைய திருக்கைகள் நான்கு

ஒளி செம்மை - உன் திருமேனி ஒளி செம்மை

அம்மை நாமம் திரிபுரை - அம்மையே உன் திருநாமம் திரிபுரசுந்தரி

ஒன்றோடு இரண்டு நயனங்களே - திருக்கண்களோ நெற்றிக்கண் ஒன்றோடு சேர்த்து மூன்று நயனங்கள்.

***


அந்தாதித் தொடை: சென்ற பாடல் தாமரையே என்று நிறைய இந்தப் பாடல் தாமம் கடம்பு என்று தொடங்கியது. இந்தப் பாடல் நயனங்களே என்று நிறைய அடுத்தப் பாடல் நயனங்கள் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தாமம், யாமம், சேமம், நாமம்

மோனை: தாமம் - தனுக்கரும்பு, யாமம் - ஏத்தும் - எமக்கு - என்று, சேமம் - செங்கைகள் - செம்மை, நாமம் - நயனங்களே.

6 comments:

said...

"கதம்பவன வாசினி, முனிகதம்ப காதம்பனி, தினம் பஜித பூஜிதாம்"

said...

என்ன மௌலி பெயர்களை மட்டும் கூறியிருக்கிறீர்கள்? நானே புரிந்து கொள்வேன் என்று நினைத்துவிட்டீர்களா? அடியேன் சிறிய ஞானத்தன். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.

said...

குமரா!
அம்பிகைக்கும் நெற்றிக்கண் உண்டா?
அல்லது மாதொருபாகன் உருவில் இறைவனின் நெற்றிக் கண் அம்மைக்கும் உரியதாவதால் ,இப்படிப் பாடுகிறாரா?

said...

ஆமாம் ஐயா. அன்னைக்கு நெற்றிக் கண் உண்டு. உடனே எனக்கு நினைவிற்கு வரும் சுலோகம் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் தியான சுலோகம்.

சிந்தூராருண விக்ரஹாம் த்ரிநயனாம் என்று தொடங்கும். குங்குமம் போல் சிவந்த செங்கதிர் மேனியை உடையவள் (உதிக்கின்ற செங்கதிர் நினைவிற்கு வருகின்றதல்லவா?) மூன்று கண்களை உடையவள் என்று சொல்லும் சுலோகம் அது.

said...

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு என்று குறிப்பிடுவதால் இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பெண்களுக்கு கர்ப்பம் உண்டாகும்'.

said...

சரியாகச் சொன்னீர்கள் சிவமுருகன். மதனவேளுக்குரிய கரும்புவில்லையும் மலர்க்கணைகளையும் அம்மை தாங்குகிறாள் என்று இந்தப் பாடல் சொல்வதால் மன்மத உருவினளான அவளின் திருவருளால் தாய்மைப்பேறு கிட்டும் என்ற பயன் பொருத்தமானதே.