Wednesday, January 30, 2008

மூவரும் போற்றும் தேவி (பாடல் 74)


எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒரு பொருளைப் பெற்றவர்கள் வேறு ஒன்று பெற தனி முயற்சி செய்யவும் வேண்டுமா? மரத்தின் வளர்ச்சிக்கு நீர் வார்க்க நினைப்பவர்கள் மரத்தின் ஒவ்வொரு இலையிலும் பூவிலும் காயிலும் கனியிலும் காம்பிலும் நீரைத் தெளிக்காமல் மரத்தின் வேரில் தானே நீரை வார்ப்பார்கள். வேரில் இட்ட நீர் மரத்தின் எல்லா பகுதிக்கும் சென்று மரத்தைத் தழைக்க வைக்குமே. அப்படி எது வேண்டும் என்று நினைத்தாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒரு பொருளை வேண்டினால் நினைப்பவை எல்லாம் கிடைக்குமே. ஆனால் அதில் ஒரு பிரச்சனை உண்டு. எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒன்றை வேண்டி அதனைப் பற்றியதும் மற்ற எதுவுமே தனக்குப் பொருளில்லை என்ற நிலையை அல்லவா ஒருவர் அடைந்துவிடுகிறார்?! அந்த நிலையைத் தான் இங்கே அபிராமிபட்டர் பாடியிருக்கிறார்.

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்தும் தமனியக் காவினில் தங்குவரே?

நயனங்கள் மூன்றுடை நாதனும் - முக்கண் முதல்வனும்

வேதமும் - வேதங்களும்

நாரணனும் - எங்கும் நிறை நாராயணனும்

அயனும் - எல்லா உலகங்களையும் படைக்கும் பிரம்மனும்

பரவும் - போற்றும்

அபிராமவல்லி அடி இணையைப் - அபிராமவல்லியின் திருவடி இணைகளைப்


பயன் என்று கொண்டவர் - பெரும் பயன் என்று பற்றிக் கொண்டவர்கள்

பாவையர் ஆடவும் பாடவும் - தேவப் பெண்கள் பாடி ஆடி மகிழ்விக்க

பொன் சயனம் பொருந்தும் - பொன்னால் ஆன படுக்கையை உடைய

தமனியக் காவினில் தங்குவரே? - பாரிஜாதக் காட்டினில் தங்கி மகிழும் பயனை வேண்டுவாரோ?


மும்மூர்த்திகளே வணங்கும் திருவடிகளைப் பயன் என்று கொண்ட பின்னர் இந்திர போகமும் வேண்டாம் என்கிறார். அச்சுவை பெறினும் வேண்டேன் என்று மற்றொரு அருளாளர் சொன்னதைப் போல்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் நயனங்களே என்று நிறைய இந்தப் பாடல் நயனங்கள் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தங்குவரே என்று நிறைய அடுத்தப் பாடல் தங்குவர் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: நயனங்கள், அயனும், பயன், சயனம்

மோனை: நயனங்கள் - நாதனும் - நாரணனும், அயனும் - அபிராமவல்லி - அடியிணையை, பயன் - பாவை - பாடவும் - பொன், சயனம் - தமனிய - தங்குவரே.

8 comments:

said...

குமரா!
தமனியம் எனில் பொன், இங்கே பாரிஜாதம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
பாரிஜாதம்=பொன் என்பதா??
விளக்கவும்.

said...

யோகன் ஐயா. தமனியம் என்பதற்கு வன்னி, மருக்கொழுந்து, பாரிஜாதம் (தேவலோக மலர்) என்பவற்றோடு பொன் என்ற பொருளும் உண்டு. இங்கே பொன் சயனம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டதாலும் காவினில் என்றதாலும் பாரிஜாதம் என்ற பொருளை எடுத்துக் கொண்டேன்.

பொன் சயனம் உடைய பொற்காடு என்று கொண்டாலும் தட்டில்லை.

said...

பிறகு மீண்டும் வருகிறேன்.

said...

வேருக்கே வேர் ஆணிவேர் என்பர். அப்படிப்பட்ட ஆதி தாயை தொழுவதால், இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'செய்தொழில் தலைமை எய்யலாம்'.

said...

மீண்டும் வந்தீர்களா மௌலி? :-)

said...

மிகச்சரியாகச் சொன்னீர்கள் சிவமுருகன். நன்றிகள்.

said...

அன்னையின் திருவடிகள் பற்றியபின் வேறெதையும் நாடுமோ, மனம்?

//எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒரு பொருளை வேண்டினால் நினைப்பவை எல்லாம் கிடைக்குமே. ஆனால் அதில் ஒரு பிரச்சனை உண்டு. எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒன்றை வேண்டி அதனைப் பற்றியதும் மற்ற எதுவுமே தனக்குப் பொருளில்லை என்ற நிலையை அல்லவா ஒருவர் அடைந்துவிடுகிறார்?! //

இது பிரச்சனை இல்லையே, குமரன்! அதுதானே உன்னத நிலை! :)

said...

உண்மை தான் அக்கா. :-)