Tuesday, February 05, 2008

கொங்கிவர் பூங்குழலாள் (பாடல் 75)


முதல் வார்த்தையில் பாராட்டிவிட்டு இரண்டாவது வார்த்தையில் சபிப்பதைப் போல் பாடியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் பாடலைப் பாருங்கள். உண்மையில் அந்த சாபமும் வாழ்த்து தான் என்பது கொஞ்சம் நெருங்கிப் பொருளைப் பார்த்தால் புரிகிறது.

தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் - பிறப்பிறப்பில்லாத அன்னையின் உலகத்தில் கற்பக மரத்தின் நிழலில் வாழுவார்கள்


தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை - குற்றம் நிறைந்த பிறவிகள் இன்றியும் பிறவிகள் இல்லாததால் பெற்றெடுக்கும் தாயர் இன்றியும் மண்ணில் மங்கிப் போவாரக்ள் (மீண்டும் பிறக்க மாட்டார்கள்)


மால் வரையும் - மலைக்க வைக்கும் பெரிய மலைகளையும்

பொங்கு உவர் ஆழியும் - அலைகளால் பொங்கும் உவர்ப்புச் சுவை கூடிய கடல்களையும்


ஈரேழ் புவனமும் - பதினான்கு உலகங்களையும்


பூத்த உந்திக் - தன் திருவயிற்றினில் பெற்ற உலக அன்னையாம்


கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே - தேன் சொரியும் பூக்களை அணிந்த கூந்தலையுடைய அபிராமி அன்னையின் திருமேனியைத் தொழுதவர்களே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தங்குவரே என்று நிறைய இந்தப் பாடல் தங்குவர் என்று தொடங்கியது. இந்தப் பாடல் குறித்தவரே என்று நிறைய அடுத்தப் பாடல் குறித்தேன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தங்குவர் - மங்குவர் - பொங்குவர் - கொங்கிவர்

மோனை: தங்குவர் - தாருவின் - தாயர், மங்குவர் - மண்ணில் - மால்வரையும், பொங்குவர் - புவனமும் - பூத்த, கொங்கிவர் - குழலாள் - குறித்தவரே.

4 comments:

said...

//தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை - குற்றம் நிறைந்த பிறவிகள் இன்றியும் பிறவிகள் இல்லாததால் பெற்றெடுக்கும் தாயர் இன்றியும் மண்ணில் மங்கிப் போவாரக்ள் (மீண்டும் பிறக்க மாட்டார்கள்) //

குமரா!
அருமையான பொருள்

said...

நன்றி யோகன் ஐயா.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'வலிமை மிக்க விதியையும் வெல்லலாம்'.

said...

பிறவிப் பிணி தீரும் என்று சொல்லியதால் 'வலிமை மிக்க விதியையும் வெல்லலாம்' என்ற பயன் பொருத்தமாக இருக்கிறது சிவமுருகன். நன்றிகள்.