Monday, February 18, 2008

நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவோம் (பாடல் 77)


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே


பயிரவி - கொடியவர்களுக்கு அச்சம் தரும் வடிவை உடையவளே


பஞ்சமி - ஐந்து தொழில்கள் உடையவளே


பாசாங்குசை - பாசமும் அங்குசமும் ஏந்தியவளே


பஞ்சபாணி - ஐந்து மலர்க்கணைகள் தாங்கியவளே


வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி - வஞ்சகர்களின் உயிரை காணிக்கையாக ஏற்று உண்ணும் உயர் சண்டிகையே


காளி - மகாகாளியே


ஒளிரும் கலா வயிரவி - ஒளிவீசும் கலைகளைத் தருபவளே


மண்டலி - சூரிய, சந்திர மண்டலங்களிலும் வழிபடுவோர் உருவாக்கும் சக்கர மண்டலங்களிலும் வசிப்பவளே


மாலினி - மாலைகள் சூடியவளே


சூலி - சூலத்தை ஏந்தியவளே


வராகி - வராக உரு கொண்டவளே


என்றே - என்றென்றே அடியார்கள்


செயிர் அவி நான்மறை சேர் - குற்றங்குறைகளைத் தீர்க்கும் நான்மறைகளில் கூறப்பட்ட


திருநாமங்கள் செப்புவரே - உனது திருநாமங்களைச் சொல்லுவார்கள்.

இந்தப் பாடல் ஒரு நாமாவளியாகவே அமைந்திருக்கிறது. புரிந்த வரையில் பொருள் சொல்லியிருக்கிறேன். சரியான பொருள் சொல்லவில்லை என்றால் திருத்துங்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பயிரவியே என்று நிறைய இந்தப் பாடல் பயிரவி என்று தொடங்கியது. இந்தப் பாடல் செப்புவரே என்று நிறைய அடுத்தப் பாடல் செப்பும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பயிரவி, உயிரவி, வயிரவி, செயிரவி

மோனை: பயிரவி - பஞ்சமி - பாசாங்குசை - பஞ்சபாணி, உயிரவி - உண்ணும் - உயர்சண்டி - ஒளிரும், வயிரவி - வராகி, செயிரவி - சேர் - செப்புவரே.

4 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பகைவைகளால் உண்டாகும் அச்சம் நீங்கும்'.

said...

வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி என்றதால் இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் 'பகைவர்களால் உண்டாகும் அச்சம் நீங்கும்' என்பது பொருத்தம் சிவமுருகன். மிக்க நன்றி.

said...

குமரா!
இந்தச் 'சண்டி' என்பதற்கும்;சண்டித்தனம்,சண்டியன்
எனும் சொல்வழக்குக்கும் ஏதாவது
தொடர்புண்டா??

said...

சண்டி என்ற சொல் இரு இடங்களில் வழங்கப்படுகின்றன ஐயா.

1. சண்டி என்பது துர்க்கையைக் குறிக்கும் போது நற்குணமுள்ளவரைக் குறிக்கிறது. தொடர்புடைய சொல் சண்டேசுவரன். சில இடங்களில் அவரை சண்டிகேசுவரர் என்றும் சொல்வதைக் கவனித்திருக்கலாம்.

2. சண்டி என்ற சொல் கொடியவர், பிணக்கிடுபவர், மானமற்றவர், பிடிவாதமுடையவர் போன்ற பொருட்களிலும் வழங்குகிறது. அப்போது சண்டித்தனம், சண்டியன் போன்ற சொற்களுடன் தொடர்பு உடையதாக அமைகிறது.