Friday, July 20, 2007

மரணம் பிறவி இரண்டும் எய்தார் (பாடல் 51)


அரணம் பொருள் என்று அருள் ஒன்றும் இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே


அரணம் பொருள் என்று - தாங்கள் கட்டிய திரிபுரம் என்னும் தங்கம், வெள்ளி, இரும்பினால் ஆன கோட்டைகளை நிலையென்று நினைத்து

அருள் ஒன்றும் இலாத - யார் மேலும் கருணை என்பதே இல்லாமல் கொடுமைகள் செய்து திரிந்த

அசுரர் தங்கள் - திரிபுர அசுரர்களின்

முரண் அன்று அழிய - பகை முன்னொரு நாள் அழிந்து போகும் படி

முனிந்த பெம்மானும் - சினம் கொண்டு சிரித்து எரி கொளுத்திய சிவபெருமானும்

முகுந்தனுமே - அவருக்குத் துணையாக அம்பாகி நின்ற முகுந்தனும்

சரணம் சரணம் என நின்ற நாயகி - சரணம் சரணம் என்று அடிபணிய நிற்கும் தலைவியான அம்மையே!

தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே - அவள் தம் அடியவர்கள் மரணமில்லா பெருவாழ்வை எய்துவார்கள். இந்த உலகில் மீண்டும் இறப்பு, மீண்டும் பிறப்பு என்ற சுழலுக்குள் அகப்படமாட்டார்கள்.

***

அருஞ்சொற்பொருள்:

அரணம்: கோட்டை, மதில்
முரண்: முரண்பாடு, பகைமை
முனிதல்: சினம் கொள்ளுதல்

அந்தாதித் தொடை: சென்ற பாடல் அரண் நமக்கே என்று நிறைந்தது. இந்தப் பாடல் அரணம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வையகத்தே என்று முடிகிறது. அடுத்தப் பாடல் வையம் என்று தொடங்கும்.

எதுகை: அரணம், முரண், சரணம், மரணம்

மோனை: அரணம் - அருள் - அசுரர், முரண் - முனிந்த - முகுந்தனுமே, சரணம் - சரணம் - தன், இரண்டும் - இந்த.

17 comments:

said...

குமரா!
நம் பிறவிப் பெருங்கடல்...தவிர்ப்பவள்!
அபிராமி
சரணம், சரணமென்றால்....
நன்று

said...

அன்னையே சரணம் சரணம். உண்மை ஐயா.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'இம்மையில் பெருஞ்செல்வம் உண்டாகும்'.

said...

//மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே//

கொஞ்சம் விளக்குங்கள் குமரன்.
ஏன் "இந்த வையகத்தே" என்று சொல்ல வேண்டும்! அப்படி என்றால் மேலுலகப் பிறவிகள் உண்டு என்று பொருளாகி விடாதா?

சரணம் என்று வருவதால் கேட்டேன் குமரன்!

said...

நல்ல கேள்வி இரவிசங்கர். தெரிந்து கொண்டே கேட்கிறீர்களா தெரிந்து கொள்ளக் கேட்கிறீர்களா தெரியவில்லை. தெரிந்த வரை சொல்கிறேன்.

ஒரு ஜீவன் மேலுலகப் பிறவி பெற்றாலும் (தேவர், கந்தர்வர், கின்னரர், கிம்புருடர் இப்படி ஏதோ ஒன்று) முக்தி அடைய மானிடப் பிறவி பெறவேண்டும். செய்த நற்செயல்களின் பயன் தீர்ந்த பின் மேலுலகப் பிறவிகள் தீர்ந்து மீண்டும் மானிடப் பிறவி பெற்று 'இறையருளால்' அவளைச் சரணடைந்து பின்னரே முக்தி பெற முடியும். இங்கே 'இந்த வையகத்தே மரணமும் பிறப்பும் இனி இல்லை' என்றதால் மேலுலகப் பிறவிகளும் இல்லை என்று ஆயிற்று. மேலுலகப் பிறவி இருந்தால் மீண்டும் வையகத்திலும் பிறவி உண்டாக வேண்டும். இங்கே வையகத்தில் இனி பிறவி இல்லை என்றதால் மரணமிலாப் பெருவாழ்வு இங்கேயே கிட்டிவிடுகிறது என்று பொருள்.

சரியாக இருக்கிறதா?

said...

ஆமாம் சிவமுருகன். இம்மையிலேயே மரணமிலாப் பெருவாழ்வு கிட்டும் என்னும் போது 'இம்மையில் பெருஞ்செல்வம் கிட்டும்' என்றப் பாராயணப் பயன் மிகப் பொருத்தம். மிக்க நன்றி.

said...

//மேலுலகப் பிறவிகள் தீர்ந்து மீண்டும் மானிடப் பிறவி பெற்று 'இறையருளால்' அவளைச் சரணடைந்து பின்னரே முக்தி பெற முடியும்
சரியாக இருக்கிறதா?//

மிகவும் சரியாக உள்ளது குமரன்.
தேவராயினும், அசுரர் ஆயினும், எவராயினும்....முக்தி சித்திக்க மானுடம் வந்தே ஆக வேண்டும்!
(சில விதிவிலக்குகள் தவிர்த்து, அதுவும் இறைவன் சித்தத்தால்)

பாருங்கள், மானுடத்தின் பெருமையை! தேவர்/அசுரர் பாகுபாடு எல்லாம் போய் விடுகிறதே! மானுடத்தில் அனைவரும் சமம் ஆகி விடுகின்றனர்!

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று தான் ஒளவையும் சொன்னாள்!

வைகுந்தம் புகுவது "மண்ணவர்" விதியே என்று விதித்து அல்லவா சொல்கிறார் நம்மாழ்வார்! விண்ணவர் விதியே என்றெல்லாம் சொல்லவில்லை பாருங்கள்!

இதை நண்பர்கள் எல்லாரும் "அறிய" வேண்டும் என்பதால் தான் கேள்வியாய் கேட்டேன், குமரன்!
இதைச் சற்று "உணர்ந்து" கொண்டால் நம்மில் பல வேற்றுமைகளும் உயர்வு தாழ்வுகளும் நீங்கி விடும்!
அதையும் இறைவனே தந்தருளட்டும்!

ஆன்மீக விளையாட்டு விளையாடியதற்கு கோபித்துக் கொள்ளாதீர்கள்! :-)

said...

குமரன்,

பிறவி எங்கிருந்து வந்தது ? இல்லாமையிலிருந்து தானே பிறவியும் அதன் கர்ம வினையான பிறவிகளும் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன.

பிறவி இல்லாமை என்ற ஒரு நிலை இருந்தால் அது ஏன் முன்பு போலவே மீண்டும் பிறக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

கேள்வி புரியவில்லையா ? முக்தியில் இருந்து தானே முதல் பிறவி ஏற்பட்டு இருக்க வேண்டும் ?

இல்லாதிலிருந்து பிறந்து இல்லாதது (முக்தி) அடைந்தால் மீண்டும் பிறவாமை என்பது சாத்தியமே இல்லை என்கிறீர்களா ?

நான் பலரையும் கேட்டுப் பார்த்தேன்...உதட்டை பிதுக்குகிறார்கள்.

எனக்கென்னமோ பிறவு அறுப்பது என்பது சாத்தியமே இல்லை ... அது ஒரு கோட்பாடு மட்டுமே எனத் தெரிகிறது... இது என் கருத்து மட்டுமே.

உங்கள் கருத்து என்ன ?

said...

நானும் முதலில் உதட்டைப் பிதுக்குகிறேன் கோவியாரே. ஏன் உதட்டைப் பிதுக்குகிறேன் என்று பின்னர் சொல்கிறேன். அதற்குள் யாராவது வந்து உங்கள் கேள்விக்குப் பதில் சொன்னால் நான் தப்பித்தேன். :-)

said...

கோவி.கண்ணன். உங்கள் கேள்விக்கான பதிலை விரைவில் கூடலில் ஒரு தனி இடுகையாக இடுகிறேன்.

said...

அண்ணா,

மண்ணிக்கனும் இப்பாடலின் பலன் தவறாக சொல்லிவிட்டேன்.

சரியான பலன் தொடர்ந்து பாராயனம் செய்ய 'மோகம் நீங்கும்'.

இவ்வுலகின் மேலிருக்கும் பற்று (மோகம்) நீங்கும் என்ற பொருள்.

said...

கோவி. கண்ணனின் கேள்விக்குத் தனி இடுகை இடப்பட்டுள்ளது.

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_27.html

said...

பொருத்தமான பயன் தான் சிவமுருகன். அரணம் பொருள் என்று இருந்த திரிபுரரை அழித்ததைச் சொன்னதால் இவ்வுலகில் இருப்பவை நிலை என்றிருக்கும் மோக மயக்கம் இந்தப் பாடலைச் சொன்னால் நீங்கும் என்பது பொருத்தம்.

said...

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே. அவர் எந்த சாதியோ, மதமோ, இனமோ, மொழியோ கவலையில்லை. வைகுந்தம் புகுவது அனைவருக்கும் உரியது.

said...
This comment has been removed by a blog administrator.
said...

//மேலுலகப் பிறவிகள் தீர்ந்து மீண்டும் மானிடப் பிறவி பெற்று 'இறையருளால்' அவளைச் சரணடைந்து பின்னரே முக்தி பெற முடியும்//

அருமை! உங்கள் மேல் விளக்கங்களைக் கூடலில் சென்று படித்தேன், குமரன். நீங்கள் பூனை என்றால், நான் எங்கேயோ கரையோரமாய்த் திரியும் குட்டிக் குருவி. பாற்கடலைக் கண்ணால் பார்ப்பதே அரிதாக இருக்கிறது! மிக அழகான விளக்கங்கள். "எல்லாம் அவள் விருப்பப்படி" என்பதே என் சிற்றறிவுக்குப் போதுமானதாய் இருக்கிறது. பாலாஜியும் அழகாய்ச் சொன்னார், நெருப்பின் தன்மையை சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று.

said...

உண்மை தான் கவிநயா அக்கா. சொல்லிப் புரிவதில்லை இவை.