Friday, December 14, 2007

சிவகாமசுந்தரி சீறடிக்கே சாரும் தவம் வேண்டும் (பாடல் 68)


பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே


பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும் - உலகமும், நீரும், நெருப்பும், காற்றும், எங்கும் படர்ந்திருக்கும் ஆகாயமும்


ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் - இவற்றின் தன்மையாக நிற்கும் நறுமணம், சுவை, ஒளி, உணர்வு, ஒலி இவை எல்லாம் ஒன்றுபட்டுச்


சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே - சேரும் சிறிய திருவடிகளை உடைய எங்கள் தலைவி சிவகாம சுந்தரியின் திருவடியிலேயே


சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே - சார்ந்து நிற்கும் புண்ணியம்/பாக்கியம் உடையவர்கள் பெறாத செல்வம் எதுவும் இல்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஐம்பூதங்களாகவும் அவற்றின் தன்மைகளான ஐம்புலன் உணர்வுகளாகவும் ஒன்று பட்டு நிற்கும் அன்னையின் திருவடிகளை அடைந்த பின் இந்தப் பிரபஞ்சம் எல்லாமும் கிடைத்ததாகுமே. அதனால் தான் அவர் பெறாத தனம் பிறிதில்லை என்கிறார்.

***
அருஞ்சொற்பொருள்:

பார் - உலகம்
புனல் - நீர்
கனல் - நெருப்பு
கால் - காற்று
விசும்பு - ஆகாயம்
முருகு - நறுமணம்
ஊறு - உணர்வு (தொடுதல் உணர்வு)
சீறடி - சிறிய அழகிய திருவடி

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பாரெங்குமே என்று நிறைய இந்தப் பாடல் பாரும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தனமில்லையே என்று நிறைய அடுத்தப் பாடல் தனம்தரும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பாரும், ஊரும், சேரும், சாரும்

மோனை: பாரும் - புனலும் - படர்விசும்பும், ஊரும் - ஒளி - ஊறு - ஒலி - ஒன்றுபடச், சேரும் - சிவகாமசுந்தரி - சீறடிக்கே, சாரும் - தவம் - தனம்.

6 comments:

said...

அன்பு குமரா!
என்னிடம் உள்ள புத்தகத்தில் 'சீரடி' என உள்ளன. நீங்கள் 'சீறடி' எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
சீறடியை பிரிக்கும் போது சற்றுச் சிக்கலாக உள்ளது.
இப்பாடல் இயற்கைச் சக்தியின் வடிவே இறைவி எனக் கூறுகிறதெனக் கொள்கிறேன்.

said...

பஞ்ச பூதங்களிலும் அன்னையை காண்கிறார், அவ்வாறு அன்னையை உணர்வதால் அவருக்கு வேறு எதுவும் பெரியதாக கிடைப்பதற்கு அறியதாக தெரியவில்லை என்கிறார் இல்லையா குமரன்?.

said...

யோகன் ஐயா. அபிராமி பட்டர் 'சீறடி' என்ற சொல்லைப் பலமுறை அபிராமி அந்தாதியில் பாவித்திருக்கிறார். சிலப்பதிகாரத்திலும் பல தமிழ் இலக்கியங்களிலும் இந்தச் சொல்லைப் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் சிறிய அடி என்ற பொருளில் தான் வருகிறது. சில இடங்களில் பாடவேறுபாடாக அதே சொல்லைச் 'சீரடி' என்று குறித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். உங்களிடம் இருக்கும் புத்தகத்திலும் அதே போன்ற பாடவேறுபாடு இருக்கின்றது போலும்.

ஆமாம் ஐயா. நாம் இறைவி என்பதை இயற்கை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அந்த இயற்கை எல்லாம் அவள் திருவுருவமே என்று நாம் சொல்கிறோம்.

said...

உண்மை மௌலி. எல்லாமும் ஆகி நின்றவளைப் பெற்ற பிறகு எல்லாமும் பெற்றுவிடலாமே.

எதனைப் பெற்றபின் பெறுவதற்கு எதுவுமில்லையோ, எதனை அறிந்த பின் அறிவதற்கு எதுவுமில்லையோ, என்றெல்லாம் வேதாந்தமாகிய உபநிடதம் சொல்லிக் கொண்டு செல்வது இந்தப் பொருளைத் தானே.

said...

intha paadalai parayanam seithaal nilam, veedu selvam perugum

said...

மதங்கம் என்பதோர் இசைக்கருவி என அருந்திருக்கிறேன்