Thursday, January 10, 2008

எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே (பாடல் 72)


என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே

என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் - என் குறை தீர இங்கே நின்று உன்னைப் போற்றிப் பரவுகின்றேன்

இனி யான் பிறக்கின் - இனியும் எனக்கு ஒரு பிறவி வந்தால்

நின் குறையே அன்றி யார் குறை காண் - அது உன் குற்றமே அல்லாமல் வேறொருவர் குற்றமில்லை

இரு நீள் விசும்பின் - நீண்டு பரந்த வானத்தில் தோன்றும்

மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள் - மின்னலைக் காட்டிலும் மெல்லிய சிறந்த இடையினை உடையவளே

தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே - தனது குறைகள் எல்லாம் தீரும் படி எங்கள் சங்கரனார் தன் சடை மேல் வைத்து மகிழும் தாமரைப் பாதங்களையே

தாமரைப் பாதங்களையே ஏத்தி வணங்குகிறேன் என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் என் குறையே என்று நிறைய இந்தப் பாடல் என் குறை தீர என்று தொடங்கியது. இந்தப் பாடல் தாமரையே என்று நிறைய அடுத்தப் பாடல் தாமம் கடம்பு என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: என் குறை, நின் குறை, மின் குறை, தன் குறை

மோனை: என் குறை - ஏத்துகிறேன் - இனி - யான், நின் குறை - நீள்விசும்பின், மின்குறை - மெலிகின்ற - மெல்லியலாய், தன்குறை - தாமரையே

8 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பிறவிப்பிணி தீரும்'.

said...

'இனி யான் பிறக்கின் நின் குறையே' என்று சொன்னதால் 'பிறவிப்பிணி தீரும்' என்ற பாராயணப் பயன் பொருத்தம் சிவமுருகன்.

said...

குமரா!
எம் கோன் ,தன் குறை தீர ,தலையில் வைத்துப் போற்றும்
தானரையை, நம் குறைப் போற்றுவோம்.

said...

//இனி யான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண்//

அன்னையிடம் எவ்வளவு உரிமை பாருங்கள்.....

அருமை....

மீனாக்ஷியின் உற்சவங்களுக்கான எல்லா படங்களும் உங்களிடம் இருக்கும் போல?. சப்தாவரண படம் இருந்தால் தனிமடலில் அனுப்ப முடியுமா?.

said...

ஆமாம் யோகன் ஐயா. ஐயன் தன் குறை தீரப் போற்றும் திருவடித்தாமரைகளை எம் குறை தீர நாமும் போற்றுவோம்.

said...

சிவமுருகனிடம் இன்னும் நிறைய படங்கள் இருக்கின்ற்ன மௌலி. என்னிடம் இருப்பது மிகக்குறைவே.

சப்தாவரணம் என்றால் என்ன?

said...

Respected Sir,

I really don't know how to express my thanks for ur great work. I used to read "Abirami Anthathi" for a long time. Sometimes for some words/sentences i was not aware of the meaning. But while reading ur work, while coming to know the meaning of each and every word i feel how much pleasure this gives me. Thank u soooooooooooooooo much. I have been to Thirukadavoor twice. I hope i'm blssed to be there. Even I tried to find out the great poet's home, but failed.

My hearty wishes to ur parents and ofcourse to you. Writing a comment to ur post is my long time wish.

Annai Abirami always take care of u and ur family

Note: I have read "En Kanmani Thamarai" novel written by Thiru Balakumaran. It's also a great work. Usually we people know less about Abirami Battar's life. That story tries to tell more about him.

said...

மிக்க மகிழ்ச்சி மஞ்சரி. தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி.

பாலகுமாரனின் நாவலை நானும் படித்திருக்கிறேன்.

நன்றி. என் மற்ற பதிவுகளையும் பார்வையிடுமாறு வேண்டுகிறேன். என் ப்ரொபைல் பார்த்தால் என் மற்ற பதிவுகளின் பட்டியல் கிடைக்கும்.