Tuesday, October 11, 2005

செறிந்தேன் உனது திருவடிக்கே! (பாடல் 3)

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!

இந்தப் பாடலின் பொருள் எளிதாய் விளங்க பாடலைக் கீழ்கண்டவாறு மாற்றி எழுதலாம்.

நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் நரகில் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே வெருவிப் பிறிந்தேன். (நான்) அறிந்தேன் எவரும் அறியா மறையை. அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே!

நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் - மனிதர்கள் தங்கள் முன் வினைப் (கருமப்) பயனால், அதனால் ஏற்பட்ட வாசனைகளால் நிரம்பிய மனம் கொண்டு, உன்னிடம் அன்பு கொண்ட அடியவர் பெருமையை எண்ணி அவர்களைப் பணிந்து உன் அருள் பெறும் வழியைப் பார்க்காமல்

நரகில் மறிந்தே விழும் - தீய செயல்கள் செய்து நரகத்தில் கூட்டம் கூட்டமாய் சென்று விழும்

நரகுக்கு உறவாய மனிதரையே - நரகத்திற்கு உறவுக் கூட்டம் போல் இருக்கும் மனிதர்களை

வெருவிப் பிறிந்தேன் - (நான்) வெறுத்து (அவர் மேல் கோபம் கொண்டு) அவர்களை விட்டு விலகி விட்டேன்.

அறிந்தேன் எவரும் அறியா மறையை - யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை நான் அறிந்து கொண்டேன். (அது உன் திருவடியை அடைவதே மிக எளிதான வழி என்பது).

அறிந்து கொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே - அன்பர்கள் (அடியவர்கள்) விரும்பும் அனைத்தும் அருளும் செல்வமே (திருவே) - அந்த ரகசியத்தை நான் அறிந்து கொண்டு உனது திருவடிக்கே சரணமாக (அடைக்கலமாக) அடைந்தேன்.

அடியவர் விரும்பும் அனைத்தும் அருளும் திருவே! யாரும் அறியா மறைப்பொருளை நான் உன் அருளால் அறிந்து கொண்டு உன் திருவடிக்கே சரணம் என அடைந்தேன். கருமப்பயனால் உன் அடியவர் பெருமையை அறியாத நரகத்தில் விழக் கூட்டம் கூட்டமாய் (ஆட்டு மந்தையைப் போல்) இருக்கும் மனிதர்களை நான் வெறுத்து விலகிவிட்டேன்.

10 comments:

said...

அந்தாதி விளக்கம் - போன பாடல் 'அறிந்தனமே' என்று முடிந்தது. இந்தப் பாடல் 'அறிந்தேன்' என்று தொடங்குகிறது.

said...

மரிப்பார் வெறும் கர்மிகளே என்பார் அருணகிரிநாத ஸ்வாமிகள். 'கரும நெஞ்சால் வீண் நரகத்தில் விழுவார்' என்கிறார் அபிராமி பட்டர். பக்தியற்ற கரும-காண்ட உயர்வை முன்வைக்கும் மீமாஸ்ச கண்டனம் இதில் உள்ளதா? எனில் மத்திய காலத்திற்கு பிற்பட்ட நூற்றாண்டுகளிலும் சமய உலகில் கர்மிகளுக்கு அத்தனை செல்வாக்கு இருந்ததா? 'கரும நெஞ்சால்' எனும் பதம் இவ்விதமும் சிந்திக்க தூண்டுகிறதே!

said...

நீலகண்டன், மிக நல்ல விளக்கம். எனக்கு இது தோன்றவில்லை.

எனக்குத் தெரிந்து பூர்வ மீமாம்ஸகர் ஆதி சங்கரர் காலத்திலேயே செல்வாக்கு இழந்துவிட்டனர். அதனால் அபிராமி பட்டர் கர்ம மீமாம்ஸகரை இங்கு கண்டிப்பதாய் கொள்வதற்கு காரணம் இல்லை. 'கரும' என்பதன் வேறு பொருளான 'வினைப்பயனை'யே பொருளாய் இங்கு கொண்டுள்ளேன்.

ஆனால் 'கரும நெஞ்சம்' என்னும் பதம் நீங்கள் சொல்வது போல் இது கரும காண்ட கண்டனமோ என்று சிந்திக்க வைக்கிறது.

said...

Kumaran
I went for abirami andhadhi class and took exam on both songs and the pathauari. I had two hour written exam on meaning. We had to sing songs based on either the end of the song or beginning whichever the judge gives. We were tested for 30 minutes. I won the first prize with scholarship 100rs(each year) for4 years until I took 11th exam. It is nice to read them again except that we also studied the deeper explanation based on some shivaites philosophy. I dont remember now

said...

Kumar, you are doing great work. Keep the good work up. Be back often.

Thekkikattan.

said...

Good Job. Why no recent postings...

said...

அருமையாக இருக்கிறது குமரன். இன்றுதான் இதைப் பார்த்தேன். நல்ல தமிழ் நூல்களுக்கு அருமையான விளக்கங்கள். இனித் தொடர்ந்து படிக்கிறேன். நல்ல தமிழ்த் தொண்டு. எனது வாழ்த்துகள்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'குடும்ப பந்தம் நீங்கும்'.

said...

நன்றி சிவமுருகன்

said...

அருமை! அபிராமியே அருள்வாய்!