மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து - மனிதர்களும் தேவர்களும் என்றும் வாழும் முனிவர்களும் வந்து
சென்னி குனிதரும் - தலையால் வணங்கும்
சேவடிக் கோமளமே - சிறப்பு மிகுந்த சிவந்த பாதங்களை உடைய மென்மையானவளே (கோமளவல்லியே)
கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த - கொன்றைப்பூ அணிந்த நீண்ட சடைமுடியில் குளிர்ச்சி தரும் நிலவும் பாம்பும் கங்கையும் அணிந்துள்ள
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே - புனிதராம் உன் கணவரும் நீயும் என் புத்தியில் எந்நாளும் இருந்து அருளவேண்டும்.
மனிதர்களும் தேவர்களும் மரணமில்லாத பெருவாழ்வு வாழும் முனிவர்களும் வந்து தங்கள் தலையால் வணங்கும் சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே. நீண்ட சடைமுடியில் குளிர்ச்சி தரும் நிலவும் பாம்பும் கங்கையும் கொன்றைப்பூவும் அணிந்துள்ள புனிதராம் சிவபெருமானும் நீயும் என் மனதில் எந்நாளும் இருந்து அருளவேண்டும்.
Thursday, October 20, 2005
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
இந்தப் பாட்டை நான்காவது முறையாக பதிக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தால் காணாமல் போய்விட்டது. இந்த முறையாவது நிலைத்து நிற்கிறதா பார்க்கலாம்.
பாட்டு உங்கள் பொருளுரையோடு படிப்பதற்க்கு நல்லா இருக்கு. தொடருங்கள். தினமும் ஒரு பாடல் போட்டால் நல்லா இருக்குமே!
நன்றாக இருக்கிறது குமரன்.
கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
இந்த வரிகளைப் படிக்கையில் எனக்கு அருணகிரியின் ஒரு வரி நினைவிற்கு வருகிறது.
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் என்று சொல்கிறார்.
ஆற்றை - கங்கையைப்
பணியை - பாம்பை
இதழியை - கொன்றையை
தும்பையை - தும்பை மலரை
அம்புலியின் கீற்றை - பிறைச் சந்திரனை
புனைந்த பெருமான் - சூடிக்கொண்டுள்ள இறைவனின்
குமாரன் - குமாரனே முருகா!
இலக்கிய ஒற்றுமை என்று இதைச் சொல்லலாம்.
ராகவன்,
உங்களுக்கு மிக நல்ல இலக்கியப் பரிச்சயம் இருக்கிறது என்பது இங்கு நீங்கள் கூறியுள்ள அருணகிரியாரின் பாடலின் மூலமே தெரிகிறது. உங்கள் கருத்துகளுக்கு நன்றி. ஒவ்வொரு பதிவையும் படித்து உங்கள் கருத்தினைத் தவறாமல் கூறுங்கள்.
உங்கள் 'இனியது கேட்கின்' வலைப்பதிவில் என் கருத்தினை விட்டிருந்தேன். பார்த்தீர்களா?
கந்தரலங்காரத்திற்குப் பிறகு நீங்கள் திருப்புகழ் பாடல்கள் பற்றி எழுதவேண்டும்.
நன்றியுடன்
குமரன்.
நன்றி குமரன். கந்தரலங்காரத்திற்குப் பிறகு கந்தர் அநுபூதி. பிறகு திருப்புகழ் என்று வரிசை வைத்திருக்கிறேன். முருகன் அருள் இருந்தால் அனைத்தும் நடக்கும்.
நன்றி சிவா...தினம் ஒரு பாடல் எழுதமுடியாது. வாரம் ஒரு பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன்.
ராகவன், நீங்கள் எழுதப் போகும் கந்தன் பாடல்களுக்கான விளக்கங்கள் பார்ப்பதற்குக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
அபிராமி அந்தாதி - பொருள் விளக்கத் தொடர் மிக அருமை! தொடர்ந்து எழுதுங்கள் அன்பரே!
நன்றி வாசுதேவன் லட்சுமணன். அடுத்த பதிவு நாளை இடப்போகிறேன். அடிக்கடி வந்து படித்து குறை இருந்தால் சொல்ல வேண்டும்.
எனதருமைக் குமரன்,
எத்தனை கைகளய்யா உமக்கு? எம்பெருமான் முருகன் அருளாலே திரும்பிய பக்கமெலாம் உந்தன் ஆன்மீகப் பதிவுகள்! உண்மையைச் சொல்கிறேன். கோ.ராகவன் அவர்களுக்கு அடுத்து நான் பார்க்கும் அருமையான ஆன்மீகப் பதிவர் தாங்கள். வாழ்த்துக்கள் தோழரே!
அன்புடன்,
மூர்த்தி.
http://www.muthamilmantram.com
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி மூர்த்தி. முத்தமிழ் மன்றத்தை அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி. முருகன் அருள் முன்னிற்கட்டும்.
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'உயர் பதவிகள் அடையலாம்'.
நன்றி சிவமுருகன்
குமரன்,
"கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த " என்ற வரிகளைப் பார்க்கும்போது திருஞானசம்பந்தரின் கோளறு திருப்பதிகம் நினைவுக்கு வருகிறது..
"பொன்பொதி மத்த மாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்.."
"மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்"
"ஒப்பிள மதியும் அப்பும் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்"
"மத்தமும் மதியும் நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்.."
"பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ( 9 பாடல்கள் என நினைக்கிறென்) இப்படி ஒரு வரி வரும்"
இன்னுமொரு இலக்கிய ஒற்றுமை...
"அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி" - திருப்புகழ்
(அருகம்புல்லும் பிறை நிலவும், ஊமத்தைபூவும், அலைதெறிக்கும் கங்கை நதியும் வண்டாடும் கொன்றை மலரும் அணிந்த)
ஜெயச்ரி. அருமையான உதாரணங்கள் கொடுத்திருக்கிறீர்கள் மிக்க நன்றி. உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் 'கோளறு பதிகத்'திற்கு வருங்காலத்தில் பொருள் சொல்லலாம் என்று ஒரு தனி வலைப்பூவைத் தொடங்கிவிட்டேன். :-)
உங்களுக்கு மிக நல்ல தமிழ் அறிவு இருக்கிறதே. நீங்கள் ஏன் இன்னும் ஒரு வலைப்பூ தொடங்கி பதிவுகள் போடுவதில்லை?
உங்கள் கனிவான பாராட்டுக்கு மிக்க நன்றி குமரன். பள்ளியிலும் கல்லூரியிலும் மிக விரும்பிப் படித்த பாடம் தமிழ். இதுவரை எதுவும் எழுதியதில்லை. பல மாதங்களாக உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். பின்னூட்டம் இடும் தைரியமே இப்போதுதான் வந்துள்ளது. நேரம் கிடைக்கும்போது வலைப்பதிவு தொடங்க முயல்கிறேன். மறுபடியும் நன்றி.
கோளறு பதிகம் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Post a Comment