Sunday, October 01, 2006
மங்கலை செங்கலசம் முலையாள் (பாடல் 21)
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே
மங்கலை - மங்கல உருவானவளே. என்றும் சுமங்கலியே.
செங்கலசம் முலையாள் - செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவளே.
மலையாள் - மலைமகளே. இமயத்தரசன் மகளே.
வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில் - வருணனின் இருப்பிடமான கடல் தந்த சங்குகளால் ஆன வளையல்கள் அணிந்து அவை அங்கும் இங்கும் அலையும் செம்மையான கைகளை உடைய எல்லா கலைகளும் அறிந்த மயிலே
தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் - பாய்கின்ற கங்கையின் பொங்குகின்ற அலைகள் தங்கும் மேல்தூக்கி முடித்த சடையை உடையவனின் பகுதியானவளே
உடையாள் - எல்லோருக்கும் தலைவியே. எல்லோரையும் எல்லாவற்றையும் உடையவளே.
பிங்கலை - பொன்னிறத்தவளே.
நீலி - நீல நிறத்தவளே. கரு நிறத்தவளே.
செய்யாள் - சிவந்தவளே.
வெளியாள் - வெண்மை நிறம் கொண்டவளே.
பசும் பெண்கொடியே - பச்சை நிறம் கொண்ட பெண் கொடியே.
***
இந்தப் பாடல் முழுக்க முழுக்க தோத்திரமாகவே அன்னையில் புகழைப் பாடுவதாகவே அமைந்திருக்கிறது.
உலகத்தில் எத்தனையோ குணநலன்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிறம் தந்து உருவகித்துப் பேசுவது மரபு. அந்த எல்லா குணநலன்களும் அன்னையே; அவளிடமிருந்து தோன்றியவையே என்று குறிப்பால் உணர்த்தும் முகமாக அபிராமி பட்டர் அன்னையை 'பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே' என்கிறார் போலும்.
Subscribe to:
Post Comments (Atom)
46 comments:
நல்ல பதிவு
நன்றி
நன்றி சிவபாலன்.
மீண்டும் பதிவுலகில் அடி எடுத்து வைத்த எங்கள் தானைத்தலைவரை அகுமுக சார்பில் தாரை,தப்பட்டையுடன் வரவேற்கிறோம்.
வாழ்க அகுமுக.வளர்க அண்ணன் குமரனின் தமிழ் மற்றும் ஆன்மிகப்பணி
அப்பாடியோ, குமரன் வந்தாச்சு!
வாங்க குமரன் (எப்படி, உங்கப் பதிவிலேயே உங்களை வரவேற்கிறோம் பாருங்க!); விஜயதசமி அதுவுமா மீண்டும் வந்த உங்களுக்கு, விஜயம் தான் இனி!
//முலையாள் மலையாள்
புடையாள் உடையாள்//
என்று ஈற்றடியில் எதுகை மோனை வைத்தது, அருமை.
அன்னை நீலம், பொன், வெள்ளை, சிகப்பு, பச்சை என்று பல வண்ணங்களில் காட்சி தருகிறாளோ பட்டருக்கு!
நன்றி செல்வன். தேர்வெல்லாம் நல்லபடியாய் முடிந்ததா? பதிவு போட்டுட்டுத் தனிமடலில் சொன்னவுடனேயே வந்து அன்பாய் வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. :-)
புதரகத்துல இருக்கிற நமக்கெல்லாம் நாளைக்குத் தானே விஜயதசமி ரவிசங்கர்? இன்னைக்கு ஆயுத பூஜை/சரஸ்வதி பூஜை தானே?
ஆமாம். நீங்கள் சொன்னது போல் அடிகளின் இறுதியில் 'மலையாள், முலையாள்; புடையாள், உடையாள்' என்று எதுகை அணியுடன் வைத்து அழகுறத் தான் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடிக் கேட்டிருக்கிறீர்களா? இந்த இடங்களில் மிக அருமையாக இருக்கும்.
அந்தக் காலத்துலேயே இந்தக் காலத்திரைப்படங்களில் வருவது போல் அன்னை அபிராமி பட்டருக்குக் காட்சி தந்திருக்கிறாள் போலும்.
ஓடி வந்து வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. :-)
எட்டு மாதங்கள் கழித்து வந்துள்ளீர்கள்
இனி எல்லாம் உங்களுக்கு எட்டும் தூரத்தில்தான்
அன்னை அபிராமியின் புகழைப் பாடிய அபிராமி பட்டரின் பாடலை விளக்கத்துடன் பதிவு செய்யும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
குமரன்,
முதலில்[first of all], சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் பதிவிட வந்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இனி பதிவு பற்றி:
அருமையான விளக்கவுரை.
//பிங்கலை - பொன்னிறத்தவளே.//
இன்று ஒரு புதிய சொல் அறிந்து கொண்டேன். அதுசரி, இந்தப் பிங்குக்கும் ஆங்கிலப் pink க்கும் எதுவித தொடர்பும் இல்லைத்தானே?:)
மிக்க நன்றி சுப்பையா ஐயா. இதற்கு முன் அபிராமி அந்தாதி வலைப்பூவில் எழுதி நீங்கள் சொன்னது போல் நிறைய நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் எதுவுமே எழுதாமல்/பதிக்காமல் இரு திங்கள் தான் இருந்தேன். மீண்டும் தொடங்கும் போது நவராத்திரி நேரமான இப்போது அன்னையின் புகழ் பாடி தொடங்குதல் முறை என்றெண்ணி அப்படியே தொடங்கியிருக்கிறேன்.
வெற்றி. வாழ்த்துகளுக்கும் நன்றிகளுக்கும் நன்றிகளும் வரவேற்புகளும் (Thanks. You are Welcome. ) :-)
பிங்கலம் என்பது பொன்னிறத்தைக் குறிக்கும் வடமொழிச்சொல். அதிலிருந்து தான் பிங்க் (Pink) என்னும் ஆங்கிலச்சொல் பிறந்ததா என்று இராம.கி. ஐயாவைத் தான் கேட்கவேண்டும். அவர் பண்டுவத்தின் பின் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். பழைய உடல் நலம் பெற்ற பின் கேட்போம்.
விஜயதசமி நன்னாளில் மீண்டும் வந்தமைக்கு நன்றி.
காலத்தினால் மறைக்க மறக்க இயலாத அற்புதம்!!
வாழ்த்துக்கள்.
குமரன்
//வருணச் சங்கு//
என்றால் பல வண்ணங்களையுடைய சங்கு என நான் நினைத்தேன்
//செய்யாள் - சிவந்தவளே.
வெளியாள் - வெண்மை நிறம் கொண்டவளே.
//
"செய்யாள்" என்பதற்கு சிவந்தவள் என்பதைவிட "செம்மையயானவள்",
சார்பற்ற செம்பார்வை கொண்டாள் என்பது
பொருத்தமான பொருளாக அமையும். அதேபோல,
"வெளியாள்" என்பது பூப்பந்து தாண்டி கங்கு கரை இன்றிக் கிடக்கும் வெளி முழுதும் விரவி நிற்பவளே என்பதும் பொருத்தமான பொருள் ஆகும்.
பிங்கலை = பொன்போல ஒளிர்பவளே!
(பொன் பொல் ஒளிர்வது வேறு, பொன் நிறம் என்பது வேறு)
பசும் = இளம் என்று சொல்லலாம்.'
"பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே!" என்பது,
"பூப்பந்து உலாவும் அண்ட வெளி எங்கும்
சக்தியாய் நீக்கமற நிறைந்து, சார்பற்ற செம்பார்வை கொண்டு பொன்போல் ஒளிரும் நீல மேனி அன்னையவள் இளம் பச்சைக் கொடியின் மென்மையும் குணமும் கொண்டவள்"
என்று பொருள் கொள்ளலாம். இன்னும் ஆழமாகச் சென்றால் அபிராமியை குழந்தை ஒத்து சொல்வதற்கு இணையாக பொருள்படும்.
தாங்கள் எடுத்திட்டமைக்குப் பாராட்டுக்கள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அன்புக் குமரா!
வந்து விட்டீர்கள்; நான் இப்போ தினமும் 20 அபிராமி அந்தாதி; என் நித்திய வழிபாட்டில் சேர்த்துள்ளதால்; இப் பொருள் எனக்கு; உதவுகிறது;மகிழ்வே!!!
நீலிக்கண்ணீர்-என்பதன் காரணமென்ன????; புதிய சொல்லுகள் தெரியவருகிறது. பழைய எந்த இலக்கியவடிவத்திலும்,சமஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கவே!!செய்யும்..;;போல் உள்ளது.
பக்தி இலக்கியத்தில் சற்றுத் தூக்கலாக இருக்கிறது.
யோகன் பாரிஸ்
குமரன்,
விடுப்பு நல்லபடியாக இருந்ததா? வரவு நல்வரவாகுக ;)
ரங்கா.
வருக வருக குமரன்.அன்னை அபிராமியின் பாட்டுடன் வந்து அசத்தி விட்டீர்கள்.னம்து உடம்பில் ஒடும் நாடிகளில் முக்கியமானது பிங்களை நாடி அது இல்லயென்றால் உடல் வேறு உயிர் வேறு. அதனாலும் பிங்களை என்றும் கூறி இருக்கலாம்.
குமர வருக
தமிழ்ச் சமர வருக
வெற்றித் திருநாளில் வருக
அன்னை புகழ் சிறக்க வருக
வருக வருக வருக
நல்லதொரு நாளில் நல்லதொரு பாடலும் விளக்கமும்.
ருசித்து ருசித்துப் பாடிய பாவலன் நோவிலன் ஆயினன். அந்தப் பாவலன் நாலவன் பொருள் காட்ட காவலன் பெயருடைக் குமரன் வந்தீர்.
குமரன் இங்கு ஒரு ஐயம். பாடலைப் படிக்கையில் எழுந்த எண்ணம் உங்கள் விளக்கத்தோடு சற்று வேறுபடவே சொல்ல விழைகிறேன்.
புரிசடையோன் புடையாள் உடையாள் என்பதற்கான விளக்கமே அது.
புரிசடையோன் - நீள்முடிகளைப் பிரித்து அரித்துக் கூட்டிய சடைமுடியோனுக்கு
புடையாள் - துணை கொண்டவளாக (புடை சூழ என்ற சொற்றொடரை நினைவிற் கொள்க)
உடையாள் - உடையவளே
புரிசடையோன் புடையாள் உடையாள் - இப்படித் தோன்றுகிறது. அதை நீங்கள் அறியக் கூறிவிட்டேன்.
மிக்க நன்றி நடேசன் ஐயா.
என்னார் ஐயா. வண்ணச் சங்கு என்றிருந்தால் நீங்கள் சொன்னப் பொருளைக் கொள்ளலாம். ஆனால் இங்கே வருணச் சங்கு என்று தானே சொல்லியிருக்கிறார்.
'வருணன் மேய பெரு மணல் உலகமும்' என்று தமிழிலக்கியங்கள் சொல்கின்றனவே அந்த வருணனைத் தான் இந்தப்பாடலில் சொல்லியிருக்கிறார் என்றெண்ணுகிறேன்.
பாடல் அடிகளின் பொருளை விரித்துச் சொன்னதற்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நாக.இளங்கோவன். தொடர்ந்து என் எல்லாப் பதிவுகளையும் படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.
பூமிப்பந்து உலாவும் அண்ட வெளி எங்கும் சக்தியாய் நீக்கமற நிறைந்து (வெளியாள்), சார்பற்ற செம்பார்வை கொண்டு (செய்யாள்) பொன் போல் ஒளிரும் (பிங்கலை) நீல மேனி அன்னையவள் (நீலி) இளம் பச்சைக் கொடியின் மென்மையும் குணமும் கொண்டவள் (பசும் பெண் கொடியே). ஆகா. மிக அருமையாகச் சிறப்பாக எல்லாச் சொற்களும் பொருந்தி வரும்படி பொருள் உரைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி.
அபிராமியைக் குழந்தையை ஒத்துச் சொல்லும் பொருளையும் கூறுங்கள்.
படித்தேன்...ரசித்தேன்...மகிழ்ந்தேன்...பக்தியில் திளைத்தேன்....
நன்றி...குமரன்
அன்பு யோகன் ஐயா. உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாய் இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
நீலி என்று ஒரு வித மோகினிப் பேயைச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதிலிருந்து தோன்றியது தான் நீலிக்கண்ணீர் என்பது என்றெண்ணுகிறேன். ஆனால் சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.
வடமொழியின் தாக்கம் சங்கப் பாடல்களிலேயே இருக்கிறாற்போல் தோன்றுகிறது ஐயா. நீங்கள் சொன்னது போல் பக்தி, ஆன்மிகம், தத்துவம் இவற்றில் கொடுக்கல் வாங்கல் மிக அதிகமாய் நடந்ததால் வடமொழிச் சொற்களும் வடமொழி போல் தோன்றும் தமிழ்ச்சொற்களும் மிகுதியாக இருக்கின்றன.
நன்றி ரங்கா அண்ணா. விடுப்பு மிக நன்றாக இருந்தது. சில நன்மைகளும் விளைந்தன. அவற்றைப் பற்றி கூடலில் அடுத்தப் பதிவாக இடுகிறேன்.
ஆமாம் திராச. இடை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளைப் பற்றியும் தத்துவ இலக்கியங்களில் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் பிங்கலை என்ற நாடியின் உருவாக அன்னை இருப்பதாலும் அவளை பிங்கலை என்று அழைத்திருக்கலாம்.
வரவேற்புக் கவிதைக்கு நன்றி இராகவன். :-)
நீங்கள் சொன்ன விளக்கமும் நன்று இராகவன். புரிசடையோனைத் துணையாக உடையவள் என்ற பொருளும் நன்றாக இருக்கிறது. உங்கள் விளக்கத்தைப் படித்த பிறகு இன்னொரு விளக்கமும் தோன்றுகிறது. புரிசடையோனை துணையாகக் கொண்டவள் என்பதை 'புரிசடையோன் புடையாள்' என்றும் அவனைத் தனக்கு உரிமையாக உடையாள் என்பதனையும் தன்னை உரியவனாக உடையாள் என்பதனையும் உடையாள் என்றும் சொல்லியிருப்பாரோ? :-)
மிக்க நன்றி அன்புடன்...ச.சங்கர்.
மீண்டும் வருக.
பாடலும் தங்கள் பொருளும் அருமை. சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்ததுபோல் பின்னூட்ட விளக்கங்களும் அழகு சேர்க்கின்றன.
வாங்க வாங்க,
sabbatical எல்லாம் முடிந்து ப்ரஷ்ஷாக வந்திருக்கிறீர்கள் தானே?
இனிமையான பாடல். அதற்கு அருமையான விளக்கமும் பின்னூட்டங்களும்.
நன்றி.
அண்ணா மீண்டும் வருக (Welcome back).
அருமையான பாடல், அருமையான விளக்கம், அதற்க்கு இராகவன் அவர்கள் தந்த வேறு பொருளும் அருமை.
இந்த பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அம்பிகைக்குச் செய்த அபசார தோஷம் நீங்கும்'.
அன்பு குமரன்,
இங்கு வெளியாள் என்பது நிறத்தோடு இணைத்து சொல்லப்படுவது தான். பிங்கலை, நீலம்,சிவப்பு, வெள்ளை அல்லது நிறமற்ற தன்மை, பச்சை என்பது அவளது ஐந்து தன்மைகளையும், ஐந்து விதமாக ஐந்து நிலைகளில் அவள் நமக்கு வெளிப்படுவதைக் குறிக்கிறது.
சிவப்பாக அவள் அருணா; வெள்ளையாக ச்வேதா; பச்சையாக ஹரிணி;நீலமாக நீலி;க்ருஷ்ணை; மஞ்சளாக, பொன்னிறமாக ஸ்வர்ணா.
கடலாகப்பட்டது ஒவ்வொரு இடத்தில் அவ்விடத்தின் சூழ்நிலைகளுக்கேற்ப தென்படுவது போல இவளது காட்சி.
//நீலி என்று ஒரு வித மோகினிப் பேயைச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதிலிருந்து தோன்றியது தான் நீலிக்கண்ணீர் என்பது என்றெண்ணுகிறேன். ஆனால் சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம் //
குமரன்!
முதலில் தங்கள் வருகைக்கும் பதிவுக்குமான வாழ்த்துக்கள்.
மேலே சொல்லியுள்ள விளக்கம் சரியென்றே நினைக்கின்றேன். நீலி பற்றி நானும் அவ்விதமே அறிந்துள்ளேன்.
நன்றி!
vaNakkam,
I enjoy your posts. Thanks for your wonderful service.
piN^gala is reddish-brown. You can think of copper or brass color. If I not mistaken, brass vessels are called in thamizh as piN^gala pAththiram. When in doubt you can refer to apte or Monier-Williams dictionary (both are online).
For gold color, suvarNa (svarNa) or hiraNya-varNa etc. are used.
For example (from mahAnarAyanopaniShad), in the verse R^itagum satyam, umA-maheshvara svarupAm is described as kR^iShNa piN^galaam. In the same section, parameshvara is again saluted as
namo hiraNyabahave hiraNyavarNAya, hiraNyarUpAya hiraNyapataye.ambikApataya umApataye namo namaH
When it comes to color, thirvAsagam celebrates him as niRangal Or ainduDaiyAn and in laitAsahasranAmam, she is praised as sarvavarNopa shobhitA (while praising her in sahasrAra). You can interpret piN^gala considering it as a nadi also.
I will post the links of your messages to ambaa-L (a mailing list on Yahoo Groups). May be once you are done with whole work, you can comile it as a PDF book.
Thanks again.
With best wishes,
Ravi
www.ambaa.org
குமரன்,
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாடலின் சுவையில் பல முறை படிக்கவும் இசைக்கவும் செய்யும் பாடல் இது. பார்த்து ரசித்தேன்.
அவள் "உடையாள் பிங்கலை நீலி செய்யாள்" -
அதாவது, உடையோர்களின் சொத்துக்களை கருக்க விடமாட்டாள்.
அதாவது, தங்களின் இந்த தமிழழகை பயனற முடக்காமல் மீண்டும் பதிக்க கொண்டு வந்துவிட்டாள். அவள் மாட்சியே அருமை!!!
நன்றி
உண்மை தான் ஜெயஸ்ரீ. சர்க்கரைப் பந்தலில் தேன் மாரியைப் போல் தான் இருக்கின்றன பின்னூட்டங்கள்.
ஹா. வலிக்குதே. வேறொன்னுமில்லை இராமநாதன். உங்க பின்னூட்டத்தைப் பாத்துட்டு இது கனவா நனவான்னு தெரியலை. அதான் கிள்ளிப் பாத்துக்கிட்டேன். :-) நம்ம பதிவுக்கெல்லாம் கூட வரத் தொடங்கிட்டீங்களே? எவ்வளவு நாள் இருக்கும் உங்க பின்னூட்டம் வந்து? :-)
நான் எப்பவுமே ப்ரஷ் தாங்க. நீங்க தான் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைன்னு எட்டிப் பாக்கறீங்க. :-)
பாடலைப் படிப்பதால் வரும் பயனைப் பற்றி நீங்கள் ஒரு நூல் அனுப்பியிருந்தீங்க இல்ல? மறந்துட்டேன் சிவமுருகன். நீங்க மறக்காம அதனைப் பின்னூட்டத்தில் சொன்னதற்கு நன்றி.
நம்ம ஊரெல்லாம் எப்படி இருக்கு? இப்ப எங்கே இருக்கீங்க? சென்னையா பெங்களூருவா?
Really a nice job done by Kumaran, thanks for his efforts in bringing out the glory of mother. First I saw sivamurugan's blospot ans impressed withthat I also started my own blog "kailashi.blogspot.com".
Thank you both and let your service continue, may Mother Parvati, bless you .
Next posting I willbe able to do in Tamil. This time I havenot installed the tamil font because of my PC prob.
Muruganandam
//பாடலைப் படிப்பதால் வரும் பயனைப் பற்றி நீங்கள் ஒரு நூல் அனுப்பியிருந்தீங்க இல்ல? மறந்துட்டேன் சிவமுருகன்.//
பரவாயில்லை
//நீங்க மறக்காம அதனைப் பின்னூட்டத்தில் சொன்னதற்கு நன்றி.//
நானே இடுகிறேன். நன்றி எல்லாம் எதற்க்கு.
//நம்ம ஊரெல்லாம் எப்படி இருக்கு?//
ரொம்ப நல்லா இருக்கு. அங்க என்ன கொரச்சல் எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள். ஏதோ காய்ச்சல் பரவுகிறது, தற்போது கட்டுக்குள் உள்ளது. மீண்டும் தீபாவளிக்கு மதுரை செல்கிறேன்.
//இப்ப எங்கே இருக்கீங்க? சென்னையா பெங்களூருவா? //
இப்ப சிங்கார சென்னை.
மிக நன்றாக விளக்கினீர்கள் காழியூரன் ஐயா. சிவப்பாக அருணா; வெள்ளையாக ச்வேதா; பச்சையாக ஹரிணி; நீலமாக நீலி, க்ருஷ்ணை; மஞ்சளாக, பொன்னிறமாக ஸ்வர்ணா. அங்கே சொன்னது இங்கும் இங்கே சொன்னது அங்கும் இருக்கின்றன பாருங்கள். செந்தமிழும் ஆரியமும் இருகண்கள் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதனால் தான். இங்கே புரியாததை அங்கே படித்துப் புரிந்து கொள்ளலாம்; அங்கே புரியாததை இங்கே படித்துப் புரிந்து கொள்ளலாம். 'தெளியாத மறை நிலங்கள் தெளிந்தோமே' என்று வேதாந்த தேசிகனும் பிரபந்தங்களைப் பற்றிச் சொல்கிறாரே.
கடலின் வெளிப்பாடுகள் போல் அவளின் வெளிப்பாடுகள். பொருத்தம். மிக்க நன்றி ஐயா.
வாழ்த்துகளுக்கு நன்றி மலைநாடர். நீலிக்கண்ணீர் பற்றியக் கருத்தினை மீண்டும் சொன்னதற்கு நன்றி.
அன்பு இரவி,
வணக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி. பிங்கலப் பாத்திரம் என்று நான் கேள்விபட்டதில்லை. வெங்கலப் பாத்திரம் தெரியும்.
வேத உபனிடதங்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் தந்தமைக்கு நன்றி. உங்கள் குழுமத்தில் இடுவதற்கும் மிக்க நன்றி. பிடிஎஃப் கோப்பாக மாற்றும் எண்ணம் இருக்கிறது. அன்னையின் அருளால் விரைவில் எழுதி முடித்துவிட்டுப் பின்னர் செய்கிறேன்.
மிக்க நன்றி ஜயராமன். பிங்கலை என்றால் சொத்து என்று எப்படி பொருள் கொண்டீர்கள்? அப்படி ஒரு பொருள் இருக்கிறதா?
தங்களின் பதிவுகளை விரைவில் படிக்கிறேன் முருகானந்தம்.
சிங்காரச் சென்னைக்கு வந்த நோக்கம் விரைவில் நிறைவேறட்டும் சிவமுருகன்.
அன்னையை அன்பாகவும் அழகாகவும் மட்டுமே உணர முடிகிறது என் சிற்றறிவால், அதுகூட கடுகளவுதான் ... அவளைப்பற்றி வேறொன்றும் அறியேன். உங்கள் பதிவுகளைப் படிக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.
//சிவப்பாக அவள் அருணா; வெள்ளையாக ச்வேதா; பச்சையாக ஹரிணி;நீலமாக நீலி;க்ருஷ்ணை; மஞ்சளாக, பொன்னிறமாக ஸ்வர்ணா.//
பின்னூட்டங்கள் அனைத்தும் உங்கள் விளக்கத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றன, குமரன்! நீங்கள் கொடுத்து வைத்தவர்தான் :)
உண்மை தான் கவிநயா. நல்லதொரு அடியார் குழாம் இங்கே இருக்கிறது.
Post a Comment