Friday, December 29, 2006
கொடியே இளவஞ்சிக் கொம்பே (பாடல் 22)
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
கொடியே - கொடி போன்றவளே!
இளவஞ்சிக் கொம்பே - இளமையான வஞ்சிக் கொம்பே!
எனக்கு வம்பே பழுத்த படியே - தகுதியில்லாத எனக்குத் தானே காலமில்லாத காலத்தில் பழுத்த பழம் போல் அருள் செய்தவளே!
மறையின் பரிமளமே - வேதங்களின் மணமே!
பனி மால் இமயப் பிடியே - பனி உருகும் இமயத்தில் இருக்கும் பெண் யானையே!
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே - பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற அன்னையே!
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே - அடியேன் இப்பிறவி முடிந்து இறந்த பின் மீண்டும் இங்கே வந்து பிறக்காத படி உன் அடி நிழலைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
குமரன்,என்னால் கேட்க முடியாத பாடலை இங்கே படிக்கப் போட்டுவிட்டீர்கள்.
அபிராமியைச் சீர்காழி அழைத்துக் கேட்க வேண்டும்.
அம்மே.... என்று விளிக்கும்போது அம்மா வந்து இருப்பார் என்றுதான் நம்புகிறேன்.
எங்கள் எல்லோரிடமிருந்தும் உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//அம்மே//
அம்மே நாராயணா, தேவீ நாராயணா என்ற கேரளத்து வழக்கம் அப்படியே நினைவுக்கு வருகிறது! பட்டரும் இவ்வண்ணமே யோசித்திருப்பாரோ!
//பனி மால் இமயப் பிடியே//
மால் = மயக்கல், மறைத்தல்
பனி மூடி மறைக்கும் இமயம் என்றும் பொருள் வரும் குமரன்!
பனி மலையில் அவ்வளவாக யானைகள் இருக்காது! ஆனால் உமையவள் இமவான் மகள் அல்லவா? அவளுக்கு, அந்த மென் பிடிக்கு இந்தப் பனி எம்மாத்திரம்?
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பிறவி பிணி தீரும்'.
வல்லி அம்மா. புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ஆமாம் அம்மா. இப்போது தான் காரில் சீர்காழி பாடிய அந்தாதியைக் கேட்டுக் கொண்டே வீட்டிற்கு வந்தேன்.
பட்டரின் காலத்தில் கேரளம் சேர நாட்டாகத் தானே இருந்திருக்கும் இரவிசங்கர். அம்மே என்பது தமிழ்ச் சொல். இப்போது மலையாளத்தில் மட்டும் இருக்கிறது.
மால் என்றால் மயக்கம் என்ற பொருள் படித்திருக்கிறேன் இரவி. ஆனால் அதற்கும் அடிப்படையான பொருள் உருகுதல் என்பதே. மால் கொண்டான் என்றால் உருகி மயங்கினான் என்று பொருள் சொல்லலாம்.
சிவமுருகன். பாடலைப் படிப்பதால் வரும் பயனைச் சொன்னதற்கு நன்றிகள்.
Post a Comment