Sunday, January 28, 2007

சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே (பாடல் 27)




உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே

உடைத்தனை வஞ்சப்பிறவியை - என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான ஆசை, சினம், மயக்கம், பேராசை, செருக்கு, வெறுப்பு ஆகியவற்றை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணிப்பை உடைத்தாய்.

உள்ளம் உருகும் அன்பு படைத்தனை - உன்னையும் உன் அன்பையும் எண்ணி எண்ணி உருகும் அன்பினை என்னுள் உண்டாக்கினாய்.

பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை - தாமரை போன்றை உன் இரு திருவடிகளையே பணிந்து கொண்டிருக்கும் பணியே பணியாய் எனக்கு அளித்தாய்.

நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை - என் உள்ளத்தே இருந்த அழுக்குகளை எல்லாம் உன் அருள் எனும் நீரால் துடைத்தாய்.

சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே - அழகியே! இப்படி அடியேனை தானாக வந்து ஆட்கொண்ட உன் அருளை என்னவென்று புகழுவேன்?

8 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மனநோய் தீரும்'.

said...

அன்பு குமரா,
//என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான ஆசை, சினம், மயக்கம், பேராசை, செருக்கு, வெறுப்பு ஆகியவற்றை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணிப்பை உடைத்தாய்.//

"என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான ஆசை, சினம், மயக்கம், பேராசை, செருக்கு, வெறுப்பு ஆகியவற்றை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணியை உடைத்தாய்" என்றுதானே வரும்?

said...

'நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை' என்றதால் இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் மனநோய் தீரும் என்பது பொருத்தமே. நான், எனது என்று இருப்பது அல்லவோ மனநோய்களிலேயே பெரிய மனநோய்.

நன்றி சிவமுருகன்.

said...

ஞானவெட்டியான் ஐயா. பட்டர் 'உடைத்தனை வஞ்சப்பிறவியை' என்பதோடு நிறுத்திக் கொண்டார். அதனால் பிறவிப்பிணி என்றாலும் சரி பிறவிப்பிணிப்பு என்றாலும் சரி என்று எண்ணுகிறேன். சான்றோர் மொழிகளில் இரண்டையும் படித்திருக்கிறேன். உடைத்தனை என்றதால் பிணிப்பு முதலில் தோன்றி அந்தப் பொருளை எழுதிவிட்டேன்.

said...

குமரன்,
அருமையான பாடலும் விளக்கமும்.
உடைத்தனை
படைத்தனை
அடைத்தனை
துடைத்தனை

ஆகா, தமிழ் வார்த்தைகளில் ஜாலம் காட்டுகிறார்.:)) படிக்கச் சுவைக்கிறது.
நன்றி.

said...

உண்மை தான் வெற்றி. இப்படிப்பட்ட வார்த்தை விளையாட்டுகள் நிறைய அபிராமி அந்தாதியில் பார்க்கலாம்.

said...

//நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை //

எனக்கு ரொம்பப் பிடித்த வரி இது. அவள் அருள் இல்லையென்றால் அவ்வளவு அழுக்கும் அவ்வளவு சீக்கிரம் போகுமா?

said...

உண்மை தான் கவிநயா.