Saturday, February 03, 2007

தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே (பாடல் 28)


சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே

சொல்லும் பொருளும் என - ஒவ்வொரு சொல்லிலும் அந்தச் சொல்லின் பொருள் எப்படி இயைந்து இணைந்து கூடி இருக்கிறதோ அது போல்

நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமள பூங்கொடியே - ஆனந்த நடனமாடும் உன் துணைவராம் சிவபெருமானுடன் இணைந்து ஓருடலாய் நிற்கும், மணம் வீசும் அழகிய பூங்கொடி போன்றவளே!

நின் புதுமலர்த்தாள் - அன்றலர்ந்த தாமரை போன்ற உனது இரு திருவடிகளை

அல்லும் பகலும் தொழும் அவர்க்கே - இரவும் பகலும் எப்போதும் தொழும் அடியார்களான அவர்களுக்கே

அழியா அரசும் - என்றும் அழியாத அரச போகமும்

செல்லும் தவநெறியும் - உன் திருவடிகளை அடைந்து முக்தி பெறும் வழியான தவநெறியும்

சிவலோகமும் சித்திக்குமே - அந்தத் தவத்தின் பயனான சிவலோக முக்தியும் கிடைக்கும்.

4 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'இகபர சுகங்களைப் பெறலாம்'.

said...

குமரன்,
பாடலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி.
ஆட்சேபனை இல்லையெனின் மேலே சிவமுருகன் சொல்லியுள்ள "இகபர" சுகம் என்றால் என்ன எனச் சொல்ல முடியுமா?

said...

'அழியா அரசும் சிவலோகமும் சித்திக்குமே' என்றதால் இந்தப் பாடலைப் பாடினால் இகபர சுகங்கள் கிடைக்கும் என்பது பொருத்தமே. நன்றி சிவமுருகன்.

said...

இதில் என்ன ஆட்சேபணை வெற்றி? உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் தாராளமாகக் கேளுங்கள். எனக்கு விடை தெரிந்தால் சொல்கிறேன். இல்லையேல் தெரிந்த மற்றவர்கள் சொல்லுவார்கள்.

இகம் என்றால் இவ்வுலக வாழ்க்கை. பரம் என்றால் இறையுலக வாழ்க்கை. இப்பிறப்பு, மறுபிறப்பு என்று கூட இகபரத்திற்கு விளக்கம் சொல்வார்கள். இகம் என்ற சொல்லும் பரம் என்ற சொல்லும் வடமொழியில் பயின்று வரும். ஆனால் அவை வடசொற்கள் தானா இல்லை தமிழ் அடிப்படையில் தோன்றிய சொற்களா என்று இராம.கி. ஐயாவிடம் தான் கேட்கவேண்டும். எனக்குத் தற்போது தெரிந்த வரை இஹம் (இங்கே) என்ற வடசொல்லின் தமிழ்வடிவம் இகம்; பரம் (அங்கே, பிற) என்பதும் வடசொல்.

ஆக இந்தப் பாடலில் அழியா அரசும் என்ற இவ்வுலக வாழ்க்கையில் சிறந்த சுகமும் சிவலோகம் என்ற பரவாழ்க்கையின் சிறந்த சுகமும் சொல்லப்பட்டதால் இந்தப் பாடலைப் பாராயணம் (திரும்பத் திரும்ப ஓதுதல்) செய்தால் இகபர சுகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.