Saturday, February 24, 2007
ஞாயிறும் திங்களுமே (பாடல் 34)
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு - தன் திருவடிகளை வந்தடைந்த அடியார்களுக்கு அன்னையின் பரிவோடு வானுலகம் தந்து
தான் போய் இருக்கும் - (அன்னை அபிராமி) என்றும் இருக்கும் (இடங்கள்):
சதுர்முகமும் - வேதங்களை ஓதி உலகங்களை எல்லாம் படைக்கும் நான்முகனின் திருமுகங்கள் (கலைமகளாக).
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் - நறுந்தேன் நிரம்பிய மலர்களால் ஆன மாலைகளும் பெரிய மாணிக்க மாலைகளும் விளங்கும் திருமாலின் நெஞ்சகமும் (திருமகளாக)
பாகமும் - சிவபெருமானின் உடலில் ஒரு பாகமும்
பொற் செந்தேன் மலரும் - பொன்னிறத்துடன் நறுந்தேனை உடைய தாமரை மலரும்
அலர் கதிர் ஞாயிறும் - அன்றாடம் சுடர் வீசித் திகழும் கதிரவனும்
திங்களுமே - நிலவுமே.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
குமரன் சார்,
பதிவுக்கு நன்றி
நன்றி சிவபாலன்
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பயிர் செய்ய ஏற்ற சிறந்த நிலபுலங்கள் கிடைக்கும்'.
அம்மை இருக்கும் இடங்களைச் சொல்வதால் நிலபுலன்கள் கிடைக்கும் என்று பலனா? இருக்கலாம். அதே நேரத்தில் பயிர்களும் அன்னையின் வடிவம் என்ற பொருளும் கிடைக்கிறது. நன்றி சிவமுருகன்.
அடியாருக்கு வானுலகம் - முக்தி ப்ரதாயினி
சதுர்முகமும் - காயத்ரி
மேலும் சந்திர சேகரி என்ற பெயரும் உண்டு, சந்திர சேகரனின் மனையாள் என்பதால் மட்டுமல்ல, லலிதாம்பிகையும் சந்திரனை அணிந்தவள் என்பதால்.
முக்திப்பிரதாயினி என்பதைச் சரியாகச் சொன்னீர்கள் மௌலி ஐயா. சந்திரசேகரி என்பதும் சரியே. படத்தில் பாருங்கள் அன்னை புவனேஸ்வரி சந்திரசேகரியாக இருக்கிறாள்.
காயத்ரி தேவி பஞ்சமுகி இல்லையா மௌலி ஐயா?
Post a Comment