Saturday, February 10, 2007
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே (பாடல் 30)
அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே
அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் - நான் ஒன்றும் அறியா சிறு குழந்தையாக இருக்கும் போதே நான் புண்ணிய பாவங்களைச் செய்து சுழலில் சிக்கிக் கொள்ளாமல் என்னைத் தடுத்து என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டு என்னை ஆண்டு கொண்டாய்.
கொண்டதல்ல என்கை நன்றே உனக்கு? - அப்படி என்னை அடிமையாகக் கொண்டுவிட்டு பின்னர் உன் உடைமையான என்னை இல்லை என்று சொல்வது உனக்கு ஏற்புடைத்தாகுமோ?
இனி நான் என் செயினும் - இனிமேல் நான் என் செய்தாலும்
நடுக்கடலுள் சென்றே விழினும் - அறிவில்லாமல் நடுக்கடலுள் சென்று விழுந்தாலும்
கரையேற்றுகை நின் திருவுளமோ - என்னைக் காத்துக் கரையேற்றுவது உன் திருவுள்ளம் தானே?!
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே - இறை என்னும் போது ஒன்றாகவும், அவரவர் தம் மனத்திற்கு ஏற்ற வகையில் வணங்கும் பல உருவங்களாகவும், இறைவனுக்கு உருவம் இல்லை என்று உருவமற்ற இறைவனை வணங்குபவர்களுக்கு அருவமாகவும் இருக்கும் என் அன்னை உமையவளே!
***
உன் உடைமையான நான் புலன் வழியே சென்று முட்டாள்த்தனமாக என்ன செய்தாலும், நடுக்கடலில் சென்று விழுந்தாலும் என்னைக் காக்க வேண்டியது உடையவளான உன் பொறுப்பு என்கிறார் பட்டர்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அடுத்தடுத்து வரும் ஆபத்துக்கள் நீங்கும்'.
நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே என்றதால் இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் 'அடுத்தடுத்து வரும் ஆபத்துகள் நீங்கும்' என்ற பலன் பொருத்தமானதே. நன்றி சிவமுருகன்.
பிறவி என்பது பெருங்கடல். அதில் ஓடங்கள் நாம். செலுத்துகிறவன் இறைவன். துடுப்பு நமது மனம். அந்த மனதின் வழியாக நல்வழியிலோ தீவழியிலோ செலுத்துகிறவன் அந்த நல்ல தீய வினைகளிலிருந்து நம்மைக் காப்பான். அதைத்தான் அபிராமி பட்டர் சொல்கிறார். இறைவன் காப்பான் என்ற நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் பிறவிக் கடலை நீந்திடலாம்.
நடுக்கடலுள் சென்றே விழினும் என்பதற்கு ஒரு நல்ல உவமையுடன் நன்கு விளக்கினீர்கள் இராகவன். இப்போது இன்னும் நன்றாகப் புரிகிறது. நன்றி.
//இறைவன் காப்பான் என்ற நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் பிறவிக் கடலை நீந்திடலாம்.//
கேட்கையில் சுலபமாக இருக்கிறது; ஆனால் நம்பிக்கை, absolute faith என்பது சுலபமான விஷயமில்லை. அதையும் அவள்தான் தர வேண்டும்.
உண்மை தான் கவிநயா. அவளே வழியும் அடையும் இறுதி நிலையுமாக இருக்கிறாள்.
Post a Comment