Saturday, February 17, 2007

ஈசர் பாகத்து நேரிழையே (பாடல் 32)



ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே

ஆசைக்கடலில் அகப்பட்டு - ஆசையெனும் பெருங்கடலில் அகப்பட்டு

அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை - கொஞ்சமும் கருணையில்லாத கூற்றுவனின் (யமனின்) பாசக்கயிற்றால் கட்டப்பட்டு எல்லா துன்பங்களும் அடைய இருந்த என்னை

நின் பாதம் என்னும் வாசக் கமலம் - உன் திருவடிகள் என்னும் மணம் மிகுந்த தாமரைமலர்களை

தலை மேல் வலிய வைத்து - என் தலை மேல் நீயே வலிய வந்து வைத்து

ஆண்டு கொண்ட நேசத்தை - என்னை உன் அடியவனாக ஏற்றுக் கொண்ட உன் அன்பினை

என் சொல்லுகேன் - எப்படி புகழ்வேன்?

ஈசர் பாகத்து நேரிழையே - சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் அழகிய அம்மையே!

மிக எளிமையான பாடல்.

9 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அகால மரணமும் திமரணமும் உண்டாகாதிருக்கும்'.

அண்ணா,
கூற்றுவன் - யமன். இது காரணப்பெயரா அல்லது வேறு பெயரா? சற்று விளக்குவீர்களா?

நன்றி.

said...

அந்தகன் - யமனா?

யமனோ மந்தகனின் தமையனாயிற்றே!

said...

சிவமுருகன்,

அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை ஆண்டு கொண்டாய் என்றதால் இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் 'அகால மரணமும் அதி மரணமும் நிகழா' என்ற பயன் பொருத்தம்.

அந்தகன் என்றால் எமன். அவன் தம்பியின் பெயர் மந்தன். மந்தகன் இல்லை. அண்ணன் தம்பி சண்டையில் அண்ணன் தம்பியின் காலில் அடிக்க அவன் காலை விந்தி விந்தி மெதுவாக நடந்து வருவதால் அவன் மந்தன். அதனாலேயே ஒவ்வொரு இராசியிலும் அவன் இரண்டரை வருடங்கள் நடக்கிறான்; ஏழரை நாட்டான் என்ற பெயரையும் பெற்றான்.

said...

அபிராமி அந்தாதி வலைப்பதிவு காண மகிழ்ச்சி. நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியாது... (நான் வலைப்பதிவுகளுக்குப் புதியவர்) பதிவு எழுதும் ஆர்வம் வந்தால் அபிராமி அந்தாதிப் பதிவுகள் எழுதவேண்டும் என்று மனக் குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்தேன்! இன்று உங்கள் எழுத்தில் அந்தாதி விளக்கங்களைக் கண்டு மகிழ்கிறேன்.

சிறுவயதிலிருந்தே அபிராமி அந்தாதி மீது மிகவும் பிரத்தியேகமான ஒரு தனி ஈர்ப்பு உண்டு.

வியக்கவைக்கும், முதன்முதல் கேட்டதிலிருந்து இன்று வரை அலாதி சுகம் தரும்... ஒவ்வொரு முறை கேட்கும்போதும்.

கண்களை அகல விரிக்கவைக்கும், பெரும்பாலும் எளிய வார்த்தைகளையே கொண்டிருந்தால்லும் அவற்றிலுள்ள இலக்கியத் தரமும் வார்த்தை விளையாட்டும் கொஞ்சி விளையாடும் தமிழும் செழுமையான சொற்களும்.

இதுவரை எத்தனை பாடல்களைப் பதிவிட்டிருக்கிறீர்கள்? வரிசையாக வருகிறீர்களா அல்லது சிலசமயம் வரிசையிலிருந்து மாறுபட்டும் எழுதுகிறீர்களா? நேரமிருக்கும்போது வாசிக்கிறேன், நன்றி.

said...

சேதுக்கரசி. உங்களை என் பதிவுகள் சிலவற்றில் ஏற்கனவே பார்த்திருக்கிறேனே. என் ப்ரொபைல் பாருங்கள். என் எல்லாப் பதிவுகளையும் காணலாம்.

நானும் முதலில் தொடங்கிய வலைப்பதிவு 'அபிராமி அந்தாதி' தான். நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கும் பொருந்தும். பல நாட்களாக அபிராமி அந்தாதி பாடல்களின் இனிமையும் ஆழ்ந்த பொருளையும் அனுபவித்து அனுபவித்து அதனைப் பகிர்ந்து கொள்ள ஆள் கிடைக்காமல் வலைப்பதிவு பற்றி தெரிந்த போது அதனையே முதலில் எழுதத் தொடங்கினேன். இப்போதும் சிற்றுந்தில் (காரில்) நான் தனியே செல்லும் போது பெரும்பாலும் (90%) கேட்பது சீர்காழியார் பாடிய அபிராமி அந்தாதியைத் தான்.

வரிசையாகத் தான் எழுதிக் கொண்டு வருகிறேன். இத்துடன் 32 பாடல்கள் ஆகியிருக்கின்றன.

இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள். உங்களுக்கு அழைப்பு அனுப்புகிறேன். நீங்களும் இந்தப் பதிவில் எழுதலாம்.

said...

//இப்போதும் சிற்றுந்தில் (காரில்) நான் தனியே செல்லும் போது பெரும்பாலும் (90%) கேட்பது சீர்காழியார் பாடிய அபிராமி அந்தாதியைத் தான்.//

அதே :-)

அழைப்பு அனுப்புகிறேன் என்றதுக்கு மிக்க நன்றி... அபிராமி அந்தாதி விளக்கவுரைப் புத்தகங்கள் கையில் இல்லாததாலும் (பிரபல தொழிலதிபர் ஏ.சி. முத்தையா அவர்களின் மனைவி தேவகி முத்தையாவின் புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன்.. அதிகம் வாசித்ததில்லை) பதிவுகளுக்கு அதிக நேரம் ஒதுக்கமுடியாத தற்போதைய நேரமின்மையாலும் என்னால் பங்கேற்கமுடியாது என்று நினைக்கிறேன்... பதிவிடும் ஆர்வமும் இன்னும் அவ்வளவாக வரவில்லை என்பதும் ஒரு காரணம். (என் பதிவைப் பார்த்தீர்களா? :-))

said...

சேதுக்கரசி,

எஸ்.கே.வோட பாடங்கள் இடுகைகளிலும் இன்னொரு பதிவர் (அவர் பெயர் மறந்துவிட்டது) ஸ்டெம் செல்களைப் பற்றி எழுதியிருந்த இடுகைகளிலும் உங்கள் பின்னூட்டங்களைப் படித்து இவ்வளவு விவரமானவர் பதிவைப் படிக்கணுமேன்னு எத்தனை தடவை வந்து பார்த்து ஏமாந்திருப்பேன். :-)

ஏன் நீங்களும் பதிவிடக்கூடாது? பின்னூட்டங்கள் மட்டுமே இட்டுக் கொண்டிருந்து என் வற்புறுத்தலாம் பதிவிட வந்து இப்போது கலக்கிக் கொண்டிருப்பவர்களை நான் காட்டுகிறேன். அவர்களைப் பார்த்தாவது நீங்களும் பதிவிடுங்கள். :-)

said...

பதிவிடாததற்கு இரண்டொரு காரணங்கள் உண்டு. சரி, பதிவு எழுதினேன்னா அவசியம் சொல்றேன் :-)

said...

குமரா!
ஆம்! அழகான எளிமையான பாடல்.