இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே
அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே - அத்தனாம் (தந்தையாம்) சிவபெருமானுடைய சித்தம் எல்லாம் குழையும் படி செய்யும் மணம் வீசும் குவிந்த முலையை உடைய இளையவளே! மென்மையானவளே!
உன்னையே அன்னையே என்பன் - உன்னையே என் அன்னை என்பேன்.
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது - நான் இழைக்கும் (செய்யும், செய்த, செய்யப் போகும்) நல்வினைத் தீவினைகளுக்கேற்ப எனை தண்டிக்கும் கால தேவன் (எமன்) நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் போது
உழைக்கும் போது - அப்போது உயிரும் உடலும் ஊசலாடி நான் மரண வேதனையில் துன்புறும் போது
ஓடி வந்தே (வந்து) அஞ்சல் என்பாய் - என் முன்னே ஓடி வந்தே அஞ்சாதே என்று சொல்வாய்.
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார் பட்டரும் பட்டர் பிரானைப் போல.
14 comments:
இப்பாடலை தொடர்ந்து பாராயணம் செய்தால் 'மரண அவஸ்தையிலும் அம்பிகையின் நினைவு அகலாதிருக்கும்'.
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் என்றதால் 'மரண அவஸ்தையிலும் அம்பிகையின் நினைவு அகலாதிருக்கும்' என்ற பலன் பொருத்தமானது சிவமுருகன். மிக்க நன்றி.
குமரன் சார்,
பதிவுக்கு நன்றி
நன்றி சிவபாலன்
அன்பு குமரா,
//அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே - அத்தனாம் (தந்தையாம்) சிவபெருமானுடைய சித்தம் எல்லாம் குழையும் படி செய்யும் மணம் வீசும் குவிந்த முலையை உடைய இளையவளே! மென்மையானவளே!
//
அத்தனின் சித்தம் குவிமுலையால் கலங்குவதில்லை. எப்போதும் சித்தம் கலங்குவதில்லை.
ஈண்டு(இங்கு) குழைதல் என்பதற்கு "நெகிழ்ந்து ஒன்றாதல்" எனப்பொருள் கொள்ளவேண்டும்.
நெகிழ்ந்து ஒன்றானதால்தானே அம்மையப்பன் ஆகினான்?
எந்நேரமும் அவள் நினைவு மாறா
உளமெனக்குத் தருவாய் என
அவளையே வேண்டுவதல்லாமல்
வேறென்ன வேண்டும் என் மனமே!
வலிமை மிகுந்த வரிகள்.பட்டரின் திட புத்தி நாக்கும் கிடைக்க அபிராமியைத் தான் வேண்ட வேண்டும்.நன்றி குமரன்.
உண்மை ஞானவெட்டியான் ஐயா. அத்தனின் சித்தம் கலங்குவதில்லை. நல்ல வேளையாக விளக்கம் தரும் போதும் குழைவதாகத் தான் எழுத வைத்திருக்கிறாள் அன்னை. ஆனால் கலங்குவதாகவும் பொருள் கொள்ள வாய்ப்பிருப்பதால் நீங்கள் குழைதல் என்பதற்கு நெகிழ்ந்து குழைந்து ஒன்றாதல் என்ற விளக்கத்தைத் தந்தது மிகச் சரி. மிக்க நன்றி ஐயா.
காமேஸ்வரனும் காமதகனனும் ஆன இறைவன் சித்தம் குவிமுலையால் கலங்குவதில்லை.
உண்மை எஸ்.கே. அவளை வணங்க அவளருளே வேண்டும்.
உண்மை வல்லி அம்மா. பட்டரின் திடபுத்தி நமக்கும் கிடைக்க அன்னை அருள வேண்டும்.
"அத்தர் சித்தம் "
குமரா!
இப்பாடல் படிக்கும் போது இந்த "அத்தர்" எனும் சொல் புரியாதிருந்தது;
இப்போ புரிந்தது நன்றி!
ஐயா. நேற்று வரை நானும் இந்த 'அத்தர்' என்ற சொல் வாசனைத் திரவியத்தைத் தான் குறிக்கிறது என்று நினைத்திருந்தேன். இன்னொரு பதிவில் 'யாழினி அத்தன்' என்றொரு வலைப்பதிவர் பின்னூட்டம் இட்டிருந்தார். அவர் பெயரைப் பார்த்த பிறகு தான் அத்தர் என்றால் அப்பர் என்ற பொருள் விளங்கியது. அன்னையின் அருள்.
என்ன குமரன்? பித்தா பிறை சூடி பாடல் மறந்து விட்டதா? அத்தா தெரிந்திருக்குமே!
ஞானவெட்டியான் ஐயாவின் கருத்துதான் என் கருத்தும். நீங்களும் திருத்தியிருக்கின்றீர்கள். ஆகையால் ஞானவெட்டியான் ஐயாவின் பின்னூட்டம் முதலில் புரியவில்லை. பிறகு புரிந்தது.
ஒரு ஐயம். யாமளை என்றால் இளையவள்..அதாவது இளமையானவள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இதற்கும் சியாமளாவிற்கும் எதுவும் தொடர்புண்டா? சியாமளம் என்பது நிறத்தைக் குறிக்கும் என்று தெரியும். ஆனாலும் அதற்கும் இதற்கும் தொடர்புண்டா என்று கேட்கிறேன்.
அத்தன், அச்சன் இரண்டும் மிக நன்றாகத் தெரியும் இராகவன். ஆனால் களபம் என்ற சொல் அத்தர் என்ற நறுமணப்பொருளை நினைக்க வைத்துவிட்டது. அவ்வளவு தான்.
நான் பதிவில் எதையுமே திருத்தவில்லையே. தொடக்கத்திலேயே 'குழையும்' என்று தான் எழுதியிருந்தேன். அதனை யாராவது 'கலங்கும்' என்று பொருள் கொண்டுவிடுவார்கள் என்றெண்ணி ஐயா மேல் விளக்கம் சொல்லியிருந்தார். அதனை நானும் ஆமென்றேன். இப்போது நீங்களும் ஆமென்றிருக்கிறீர்கள்.
சியாமளையும் யாமளையும் வெவ்வேறு என்றே நினைக்கிறேன் இராகவன். நீங்கள் சொன்னதைப் போல் சியாமளை என்றால் பச்சை நிறத்தவள் என்று பொருள். யாமளா என்றால் பருவத்தில் இருப்பவள் (பருவப்பெண்) என்று பொருள்.
Post a Comment