Thursday, February 15, 2007
ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை (பாடல் 31)
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து - உமையன்னையும் சிவபெருமானும் ஒரே உருவாக வந்து
இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் - இங்கே இந்த உலகிலேயே மிக கீழான என்னையும் அவர்களுக்கு அன்பு செய்யும் படி அருள் புரிந்தார்கள்
இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை - இனி நான் எண்ணி பின்பற்ற வேண்டிய சமயங்களும் இல்லை (இறை அருள் பெறுவதற்கு பக்தி செய்ய வேண்டுமா, ஞானவழியில் செல்வதா, யோகவழியில் செல்வதா, கருமவழியில் செல்வதா என்று எண்ணிப்பார்க்கத் தேவையில்லை)
ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை - (பிறப்பிறப்புச் சுழலில் இருந்து விடுபட்டுவிட்டதால் இனி எனக்குப் பிறவிகள் இல்லை. அதனால்) என்னை பெற்றெடுக்க ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே - அழகிய தோள் உடைய பெண்கள் மேல் வைத்த ஆசையும் தானாகவே அமைதியுற்றது.
***
அம்மையும் அப்பனுமாக ஒரே உருவமாக வந்து அவர்கள் அருளால் அவர்கள் தாளை வணங்க வைத்துவிட்டதால் இனி எந்த வழியில் செல்ல வேண்டும் என்று நான் எண்ணிக் குழம்ப வேண்டாம்; அவர்களே அவர்களின் கருணையால் வழியைக் காட்டிவிட்டார்கள்; பிறப்பிறப்புப் பிணியும் தீர்ந்தது; பெண்களின் மேல் வைத்த ஆசையும் (பெண்களுக்கு ஆண்கள் மேல் வைத்த ஆசை) தானாக அமைதியுற்றது; அதனால் புதிதாகவும் எந்த பந்த பாசமும் தோன்றாது.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அபிராமியே அன்னை ஆன பிறகு இன்னோரு தாயார் இருக்க ஏது வழி.?
அமைதி பெற ,சம்சார பந்தம் தொல்லை கொடுக்காமல் இருக்க இந்தப் பாடலைப் படிக்க சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
நன்றி குமரன்.
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மறுமையில் இன்பம் உண்டாகும்'.
உண்மை வல்லியம்மா. அபிராமியே அன்னை ஆனபின் பின்னர் வேறொரு அன்னை அமையாதே. நீங்கள் சொன்ன பலனும் சரி. பதிவு இட்டவுடன் வந்து படித்ததற்கு நன்றி.
ஆமாம் சிவமுருகன். ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை என்றதால் மறுமையில் இன்பம் என்ற பயன் பொருத்தமானது. பதிவு இட்டவுடன் வந்து படிப்பதற்கு மிக்க நன்றி.
Post a Comment