
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி - இவளுடைய அழகிற்கு ஒப்புமையாக யாரும் எதுவும் இல்லாதபடி பெரும் பேரழகு கொண்டிருக்கும் தலைவி
அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் - அரிய திருமறைகள் இவளது திருப்பாதங்களைத் தொடர்ந்து எப்போதும் போற்றுவதால் அவற்றின் புகழ்ச்சியில் பழகிப் பழகி சிவந்த தாமரைப்பாதங்கள் உடையவள்
பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்க - குளிர்ந்த நிலவின் குழந்தையை (இளம்பிறையை) திருமுடியில் தாங்கியிருக்கும் மென்மையான பச்சை நிறத்தவளாக அன்னை இருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே - உலக வாழ்க்கையில் எதையோ இழந்து நின்றாலும் அந்த இழவை நினைந்து இரங்காமல் இருப்பாய் நெஞ்சே; அன்னையிருக்க ஒரு குறையும் உனக்கு இல்லை.
மனத்தில் ஏதேனும் குறை ஏற்படும் போது இந்தப் பாடலைப் படிக்கலாம் போலிருக்கிறது.
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் பேரழகே என்று நிறைய இந்தப் பாடல் அழகுக்கு என்று தொடங்கியது. இந்தப் பாடல் என் குறையே என்று நிறைய அடுத்தப் பாடல் என் குறை தீர என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.
எதுகை: அழகுக்கு, பழகி, குழவி, இழவுற்று
மோனை: அழகுக்கு - அருமறைகள்; பழகி - பதாம்புயத்தாள் - பனிமாமதியின், குழவி - கோமளயாமளை - கொம்பிருக்க, இழவுற்று - இரங்கேல் - என்குறையே