Sunday, March 09, 2008
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே (பாடல் 82)
இறைச்சக்தி உருவமற்றது. அதற்கு உருவம் ஏற்படுத்திக் கொண்டு வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பக்தர்கள். என்னே இவர்களின் அறிவீனம்? - இப்படியெல்லாம் தத்துவ ஆராய்ச்சி செய்து மிகப்பெரியவர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்பவர்கள் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ உருவமற்ற இறைசக்தியை வணங்குவது உயர்கல்வியைப் போன்றது; உருவத்தில் இறைசக்தியை வணங்குதல் தொடக்கக் கல்வியைப் போன்றது; அவரவர் ஆன்மிக முன்னேற்றத்திற்கு ஏற்ப இறைசக்தியை வணங்கிக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். இது சரி தானா, உண்மை தானா என்று எப்படி எனக்குத் தெரியும்? இந்தப் பாடலில் அபிராமி பட்டரோ வேறு மாதிரி சொல்கிறார். அன்னையின் திருவுருவத்தை நினைக்கும் போதெல்லாம் ஆன்மிக அனுபவங்களில் மிக உயர்ந்த அனுபவம் கிட்டுகிறதாம். உருவத்தை வணங்கும் இவர் தொடக்ககல்வி நிலையில் இருக்கிறாரா உயர்கல்வி நிலையில் இருக்கிறாரா அனைத்துக் கல்வியையும் கற்று மிகத் தேர்ந்தவராக இருக்கிறாரா தெரியவில்லை.
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு
வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே - வண்டுகள் தேனினை உண்ண மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே.
அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற - எல்லா உலகங்களும் உன்னிலிருந்து வீசும் ஒளியாக நின்றது.
ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும் - அப்படிப்பட்ட ஒளி வீசும் உன் திருமேனியை நினைக்கும் போதெல்லாம்
களியாகி - பெருமகிழ்ச்சி பெருகி
அந்தக்கரணங்கள் விம்மி - உள்ளுறுப்புகள் எல்லாம் விம்மி
கரை புரண்டு - உள்ளே பெருகிய மகிழ்ச்சி கரை புரண்டு
வெளியாய்விடில் - வெளியேயும் பெருகி நிற்கின்றது.
எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே - உனது பேரறிவினை எப்படி மறப்பேன்
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் பேரளியே என்று நிறைய இந்தப் பாடல் அளியார் என்று தொடங்கியது. இந்தப் பாடல் விரகே என்று நிறைய அடுத்தப் பாடல் விரவும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.
எதுகை: அளியார், ஒளியாக, களியாகி, வெளியாய்
மோனை: அளியார் - ஆரணங்கே - அகிலாண்டமும், ஒளியாக - ஒளிர் - உள்ளுந்தொறும்,
களியாகி -கரணங்கள் - கரைபுரண்டு, வெளியாய் - விரகினையே.
அருஞ்சொற்பொருள்:
அளி - கருணை (சென்ற பாடலில் பயன்படுத்திய பொருள்), வண்டு (இந்தப் பாடலில் பயன்படுத்திய பொருள்)
விரகு - பேரறிவு.
***
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'கவனசக்தி பெருகும்'.
உள்ளுந்தொறும் என்றதால் 'கவன சக்தி பெருகும்' என்ற பொருள் பொருத்தமானது சிவமுருகன். நன்றிகள்.
//ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு//
அப்பேர்ப்பட்ட நிலைக்கு அவர் எவ்வளவு தவம் செய்திருத்தல் வேண்டும்! இறைசக்தி பற்றிய உங்கள் விளக்கம் அருமை, குமரன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று, இது.
நன்றி கவிநயா அக்கா.
Post a Comment