Wednesday, March 05, 2008

வஞ்சகரோடு இணங்க மாட்டேன்! (பாடல் 81)


சில நேரங்களில் சில மனிதர்கள் வஞ்சகர்கள் என்று தெரிந்திருந்த போதிலும் அவர்களுடன் இணங்கி இருக்க வேண்டிய நிலைமை உண்டாகிறது. சுயநலத்தால் எல்லோருமே அப்படி செய்வது அவரவர் அனுபவமாக இருக்கும். அன்னையின் அருளிருந்தால் அப்படி வஞ்சகரோடு இணங்கியிருக்க வேண்டிய தேவையிருக்காது என்பதை அபிராமி பட்டர் அருமையாகக் கூறுகிறார்.

அறிவு ஒன்றும் இல்லாதவன் நான். என் மேல் நீ வைத்த பெருங்கருணையை என்ன என்று சொல்லுவேன்? தெய்வங்களில் சிறந்தவளே. எல்லா தெய்வங்களும் நின் பரிவாரங்கள். நீயே என் மேல் கருணை கொண்டு விட்டதால் எதற்காகவும் எந்த நோக்கத்திற்காகவும் உலகத்தில் உன்னையன்றி மற்றவரை நான் வணங்க வேண்டியதில்லை; அதனால் வணங்கேன். அவர்களை நெஞ்சில் வாழ்த்தவும் தேவையில்லை; அதனால் வாழ்த்துகிலேன். வஞ்சகர்களோடு இணங்க வேண்டிய தேவையும் இல்லை; அதனால் இணங்கேன். தம்முடையது எல்லாம் அன்னையே உன்னுடையது என்று இருக்கிறார்களே சில மெய்யடியார்கள் அவர்கள் வெகு சிலரே; அப்படிப்பட்டவர்களோடு எந்தக் காரணத்தாலும் சண்டை போட மாட்டேன். பிணங்கேன்.

அணங்கே அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்றும் இலேன் என் கண் நீ வைத்த பேரளியே


அணங்கே - ஒரே தெய்வமே


அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால் - எல்லாத் தெய்வங்களும் உன் பரிவாரங்கள் ஆகையினால்


வணங்கேன் ஒருவரை - இன்னொருவரை வணங்க மாட்டேன்


வாழ்த்துகிலேன் நெஞ்சில் - நெஞ்சிலும் மற்றவரை வாழ்த்த மாட்டேன்


வஞ்சகரோடு இணங்கேன் - வஞ்சகர்களோடு இணங்க மாட்டேன்


எனது உனது என்று இருப்பார் சிலர் - தங்களுடையது எல்லாம் உன்னுடையது என்று இருப்பார்கள் சிலர்


யாவரொடும் பிணங்கேன் - அவர்கள் யாராயிருந்தாலும் அவர்களோடு பிணக்கு கொள்ள மாட்டேன்.


அறிவு ஒன்றும் இலேன் - அறிவு ஒன்றுமே இல்லாதவன் நான்

என் கண் நீ வைத்த பேரளியே - என் மேல் நீ வைத்தப் பெருங்கருணையை என்ன என்று போற்றுவேன்?

***


அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஆரணங்கே என்று நிறைய இந்தப் பாடல் அணங்கே என்று தொடங்கியது. இந்தப் பாடல் பேரளியே என்று நிறைய அடுத்தப் பாடல் அளியார் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: அணங்கே, வணங்கேன், இணங்கேன், பிணங்கேன்

மோனை: அணங்கே - அணங்குகள் - ஆகையினால், வணங்கேன் - வாழ்த்துகிலேன் - வஞ்சகரோடு, இணங்கேன் - எனது - என்றிருப்பார் - யாவரொடும், பிணங்கேன் - பேரளியே

4 comments:

said...

குமரா!
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்..எனும் ஔவை வாக்கு
நினைவு வருகிறது.
தாயவள் கடைவிழிப் பார்வைபட்டால்
இணங்கேன் ,வஞ்சரோடு.
கருணை செய்வாளா??

said...

மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா. அன்னையின் கருணை இருந்தால் ஒளவை சொன்ன வழி நடத்தல் மிக எளிதாக இருக்கும்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நன்னடத்தை உண்டாகும்'.

said...

பொருத்தமான பயன் சிவமுருகன். நன்றிகள்.