Thursday, March 01, 2007

பொருளே பொருள் முடிக்கும் போகமே (பாடல் 36)




பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

பொருளே - பொருட்செல்வமாகித் திகழ்பவளே!

பொருள் முடிக்கும் போகமே - அந்தப் பொருட் செல்வத்தால் அடையப்படும் போகங்களாகி நிற்பவளே!

அரும் போகம் செய்யும் மருளே - அந்த போகங்களை அனுபவிக்கும் போது ஏற்படும் மயக்கமாகித் திகழ்பவளே!

மருளில் வரும் தெருளே - அப்படி மயக்கம் வந்த பின் அதில் இருந்து விடுபடும் வண்ணம் ஏற்படும் தெளிவே!

என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது - என் மனதில் என்னை வஞ்சிக்கும் மாயை இருள் ஏதும் இன்றித் திகழும் படி ஒளிவெள்ளமாக உன் அருள் வந்தது. அதன் பெருமையை நான் எப்படி சொல்வது?

அறிகின்றிலேன் - சொல்லும் வழி அறியேன்.

அம்புயாதனத்து அம்பிகையே - தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகையே

***

பொருட் செல்வம் கெட்டதன்று. அந்தப் பொருட் செல்வத்தால் உலகில் நன்மை விளைகின்றது. ஆனால் அந்தப் பொருட் செல்வத்தை அந்த நல்ல வழியில் பயன்படுத்துவது எல்லோராலும் இயலாததொன்று. அந்தப் பொருட் செல்வத்தைப் போகத்தின் பால் செலவழிக்கவே எல்லார் மனமும் விழைகிறது. அப்படிப் பெறப்படும் போகங்களும் கெட்டதல்ல. இடைவிடாத மகிழ்வு (ஆனந்தம்) என்பதே எல்லோருடைய குறிக்கோளும். தனக்குள்ளேயே அந்த ஆனந்தம் இருப்பதாக அறிந்தவர் கூறுகின்றார்கள். ஆனால் பெரும்பான்மையினர் அந்த மகிழ்ச்சியைப் போகங்களில் தானே தேடுகிறோம். அந்த போகங்கள் அவைகளாகவே கெட்டவை இல்லை. ஆனால் அவை மருளை ஏற்படுத்துகின்றன. மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டால் பின்னர் பிழைப்பது அரிது. அன்னையின் அருள் தானே வந்தால் அன்றி அந்தச் சுழலில் அகப்பட்டவர் அகப்பட்டவரே. ஆனால் அதே நேரத்தில் அந்த மயக்கமே அன்னையின் அருளை இழுத்து வருவதற்கும் பல நேரங்களில் காரணமாக இருக்கிறது. கீதையின் முதல் அத்தியாயம் 'அர்ச்சுன விஷாத யோகம் - அருச்சுனனின் மயக்கம் என்ற யோகம்'. அருச்சுனனின் மயக்கம் எப்படி யோகமாக இருக்க முடியும் என்பதற்குப் பெரியவர்கள் சொல்லும் பொருள் இது தான் - அந்த மயக்கம் வந்ததால் தான் அவனால் கண்ணன் சொல்லும் நல்வார்த்தைகளை உணர்ந்து தெளிவு பெற முடிந்தது. அங்கேயும் மயக்கத்தில் இருந்து தெளிவு பிறந்தது. அருணகிரியாரும் போகத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து மயக்கம் உற்று அந்த மயக்கத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள விழைந்த போது தானே முருகனின் அருள் வந்து தெளிவு தந்தது. இப்படி பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அதனால் மயக்கமும் நல்லதே என்பது விளங்கிற்று. அந்த மயக்கத்தில் இருந்து தோன்றும் தெளிவும் நல்லதே. அந்தத் தெளிவு நம் முயற்சியால் ஏற்படுவதன்று. அன்னையின் அருளால் ஏற்படுவது. நல்லவரைக் காப்பதென்னவோ எளிது. ஆனால் கெட்டவரைக் காப்பது தானே பெருமை? மனத்தில் வஞ்சத்து இருள் கொண்டு இருந்த என்னிடம் அந்த இருள் நீங்கி ஒளி வெள்ளமாய்த் திகழும் படி செய்த அன்னையின் அருளையும் அந்த அருளின் பெருமையையும் சொல்லி முடியுமா?

17 comments:

said...

///அந்தப் பொருட் செல்வத்தைப் போகத்தின் பால் செலவழிக்கவே எல்லார் மனமும் விழைகிறது.///

பணம்,பணம்,பணம்!
இன்றைய சமூக அவலம் இதுதான்!
everyone is running after money!
90% மக்கள் பொருளை நினைப்பவர்கள்தான்
அருளைப் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை!
அதை நினைப்பதற்கும் நேரமில்லை!

கவிஞர் வாலி அவர்கள் எழுதியதுபோல
"மடி நிறையப் பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்!"
அதுதான் இன்றைய நிலை!

நாடி நரம்பெல்லாம் தளர்ந்தபின்னே
தான் சேர்த்த பொருளால் தனனை
அரவணைக்கமுடியாது என்ற நிலை வரும்போதுதான் அவனுக்கு 'அருளைப்' பற்றிய
நினைவுவரும்!

கலி முற்றிவிட்டது!

said...

தங்கள் கருத்திற்கு நன்றி வாத்தியார் ஐயா. நீங்கள் சொன்னவை உண்மை. பணத்தின் பின் அலைந்து மருள் கொண்டு திரிகிறோம். தெருட்டும் வகை அன்னையில் அருள் வர வேண்டும்.

அரவிந்த ஆசிரம அன்னை சொன்ன ஒரு பொன்மொழி நினைவிற்கு வருகிறது. பணம் என்பது ஒரு பெரிய சக்தி (Force). அதனை முடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அந்தச் சக்தியைப் பெருக்கி நல்வழியில் அதனைச் செலவழிக்க வேண்டும். அந்த சக்தியால் இந்த உலகில் நடக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. அந்த சக்தி தெய்வீக சக்தியாகவும் மாறும்; அசுர சக்தியாகவும் மாறும். நம்மிடம் அந்த சக்தி இருக்கும் போது அதனை தெய்வீக சக்தியாக நல்ல வழியில் செலவழிக்க வேண்டும்.

said...

குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்கவேண்டும். குழப்பமாகிய மயக்கம் இல்லாதவர் இல்லை. பின் தெளிவு பிறக்கிறது. தெளிவின் நிலையே உணர்வின் தொடக்கம். உணர்வில் எல்லையே நினைவின் தொடக்கம்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'தொல்வினைகள் தொலைந்து போகும்'.

said...

//நல்லவரைக் காப்பதென்னவோ எளிது. ஆனால் கெட்டவரைக் காப்பது தானே பெருமை?//

குமரா!!
தாயல்லா?,அதுதான் அவள் எல்லோரையும் காக்கின்றாள்.
அடுத்து "அம்புயாதனத்து= தாமரை ஆசனம் எனில்; ஆதனம் என்பது ஆசனமா??,

said...

ஆம்.
ஆதனம்=ஆசனம், மனை, சீலை, பார்வை, விலாசம், நீளுதல், நிலைமை.

said...

//பொருட் செல்வம் கெட்டதன்று. அந்தப் பொருட் செல்வத்தால்//
இவைகளைப் படித்தபோது எனக்கு ஒரு கதை ஞாபத்திற்கு வருகிறது அதாவது,
ஒரு காட்டில் ஒரு சாது போகிறார் அப்பொழுது அங்கோ ஒரு பொற்குவியல் கிடக்கிறது அதைக் கண்டதும்,'அய்யோ எமன் எமன்' என ஓலமிட்டுக்கொண்டு ஓடுகிறார். இதைக் கேட்டு மூவர்,'என்ன?' என கேட்க அவர் அந்த பொற்குவியலைக் காட்டுகிறார்.
அப்பொடு அந்த மூவரும் இவருக்கு என்ன பைத்தியமா பிடித்துள்ளது என கூறிக்கொண்டு மூவரும் சமமாகப் பிரிக்க திட்டமிடுகிறார்கள் இதைப்பிரிக்க நேரம் அதிகம் ஆகும் ஆகவே ஒருவர் ஊருக்குள் சென்று உணவு பெற்று வரட்டும் மற்ற இருவர் மூன்று சமபாகமாகப் பிரிப்போம் என பரித்து வைத்தார்கள் சாப்பாடு வாங்க சென்றவர் தான் சாப்பிட்டு விட்டு மற்றவர்களுக்கு சாதம் வாங்கி அதில் நஞ்சை கலந்து கொடுத்துவிட்டு தான் ஒருவரே மூன்று பங்கையும்எடுதுக் கொள்ள திட்டமிட்டு வருகிறார். இந்த இருவரும் அந்த நபரை குகையின் உள்ளே நுளையும் போது போட்டு தாக்கிகொன்று விட்டு அந்தஉணவை உண்டு இருவரும் மடிகின்றனர் ஆக அதுதான் எமன் இதை எங்கோ எப்போவோ படித்த ஞபகம்

said...

குமரன், மிக நல்ல விளக்கம். அருமை. உங்கள் தெய்வீகப் பணி தொடரட்டும்.

நீங்கள் எழுதியிருப்பதில் போகம் என்பது ஒரு transitory state என்பது போல ஒரு கருத்து தொனிக்கிறது. துறவறத்தை லட்சியமாகக் கொண்டவனுக்கு இது சரி.

ஆனால், உண்மையான ஆன்ம ஞானம் பெற்ற ஞானிக்கு யோகம், போகம் இரண்டுமே ஒன்று தான். இதில் எந்த நிலையில் இருந்தாலும் அவன் எப்போதும் ஆத்மானுபவத்தில் தான் திளைத்திருப்பான்.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை
போகமும் திருவும் புணர்ப்பானை
என்றார் சுந்தரர்.

யோகத்தில் இருந்தால் என்ன போகத்தில் இருந்தால் என்ன
ஆசையுற்றிருந்தால் என்ன
ஆசையற்றிருந்தால் என்ன
பிரம்மத்தில் எவனது சித்தம் லயித்திருக்கிறதோ அவன்
மகிழ்கிறான் மகிழ்கிறான் மகிழ்ந்தே இருக்கிறான்
- ஆதிசங்கரர்
(யோகரதோ வா என்ற பாடல் - பஜ கோவிந்தம்)

said...

கீதையின் குரலை உங்கள் பின்னூட்டத்தில் கேட்கிறேன் ஞானவெட்டியான் ஐயா. கண்ணனும் கீதையில் நீங்கள் சொன்னதை ஒட்டிச் சொன்னதாக நினைவு.

said...

'என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி...' என்றதால் 'தொல்வினைகள் தொலைந்து போகும்' என்ற பயன் பொருத்தமானது. நன்றி சிவமுருகன்.

said...

ஆமாம் யோகன் ஐயா. ஆதனம் என்றால் ஆசனம். சிம்மாசனம் என்பதைக் கோதையும் சிங்காதனம் என்கிறாளே திருப்பாவையில். ஞானவெட்டியான் ஐயாவும் அதனை நிகண்டின் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார்.

said...

மிக நல்ல கதை என்னார் ஐயா. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

said...

ஜடாயு ஐயா. போகம் தற்காலிக நிலை என்று குறித்ததாகத் தோன்றவில்லையே. போகம் நல்லதே; அதனால் மருள் தோன்றுகிறது; மருளைப் பழிக்காமல் போகத்தைப் பழிக்கிறோம் என்பது போன்று தானே சொல்லியிருக்கிறேன்.

நான் சொன்னது விடுதலையை விரும்பும் முமுட்சுவிற்கோ ஞானிகளுக்கோ இல்லை. அடியேனைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு. ஞானிகளுக்கு நீங்கள் சொன்னது மிகப் பொருத்தம். யோக ரதோ வா போக ரதோ வா என்று அடியேனின் பஜ கோவிந்தம் பதிவில் பொருள் சொன்னது நினைவிற்கு வருகிறது.

said...

போகத்தை அனுபவிக்க உதவும் பொருளை அள்ளி வழங்குபவளும் அவளே, பொருளாகவும் பொருளால் பெறப்படும் போகமாகவும் இருப்பவளும் அவளே. அதிகமான போகத்தில் ஈடுபடும்போது அதுதான் உண்மைப்பொருள் என்ற மாயை (மருள் ) உண்டாகும்.

"பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு" -திருக்குறள்.

அந்த மாயயும் அவளே .அந்த மாயையை ஏற்படுத்துபவளும் அவளே.

"மஹா போகா " என்றும் "மஹா மாயா" "ஸர்வ மோஹினி" என்றும் அறியப்படுபவள்.

மருளால் அகம் பேரிருளானது. அந்த இருளைப் போக்கி மெய்யுணர்வளிக்கும் அருட்பெருஞ்சுடரும் அவளே.

"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு"

said...

குமரன், பாடலை மிகவும் ரசித்தேன். அது சொல்லும் பொருளையுந்தான். அதை நீங்கள் சொல்லும் விதத்தையுந்தான்.

கடவுள் என்பது அனைத்தையும் கடந்து உள்ளிருக்கிறதல்லவா. அப்படியானால் ஒவ்வொரு பொருளாகவும்..அதன் பண்பாகவும்..அந்தப் பண்பின் பயனாகவும்..அந்தப் பயணின் விளைவாகத் துய்க்கும் இன்பமாகவும்....அந்த இன்பத்தின் விளைவாக எழும் எண்ணமாகவும்...அந்தன் எண்ணத்தின் வழி கிடைக்கும் நல்வழியாகவும் இருப்பது கடவுளே. அதைப் பொருளை மட்டும் வைத்து அழகாக விளக்கியிருக்கிறார். இப்படி ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாமே என்றுதான் "யாதுமாகி நின்றாய் காளி" என்றான் பாரதி.

said...

ஜெயஸ்ரீ,

பொருத்தமான திருக்குறட்பாக்களையும் லலிதையின் பெயர்களையும் சொல்லி மனமகிழ்ச்சி ஏற்படுத்திவிட்டீர்கள். மிக்க நன்றி.

said...

சரி தான் இராகவன். நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்; அல்லது நீங்கும் என்று உறுதி சொன்ன பாட்டுக்கொரு புலவனின் வரிகள் தானே பல பொருட்களை உணர்த்தியது.

ஒன்றுக்கொன்றாக எல்லாவற்றிற்கும் உள்ள தொடர்பையும் அவற்றில் கரந்துறையும் இறைவனையும் கீதை, குறள் எனப் பல நூல்களிலும் சொல்லியிருக்கிறார்களே.