Saturday, March 03, 2007

திரு உடையானிடம் சேர்பவளே (பாடல் 37)



கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே


கைக்கே அணிவது கன்னலும் பூவும் - கைகளுக்கு அணிகலங்களாக நீ அணிந்து கொள்வது கரும்பும் பூக்களும்

கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை - தாமரை போன்ற திருமேனிக்கு அணிகலங்களாக அணிவது வெண்ணிற முத்துமாலைகள்

விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் - நல்ல பாம்பின் படம் எடுத்த தலையைப் போல் இருக்கும் இடைக்கு அணிந்து கொள்வது பலவிதமான மாணிக்கங்களால் ஆன மாலைகளும் பட்டுத்துணியும்

எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே - எட்டுத் திக்குகளையே (திசைகளையே) ஆடையாக அணிந்து கொண்டிருக்கும் எல்லா செல்வங்களையும் உடைய (ஐஸ்வர்யம் உடையவன் ஈஸ்வரன்) சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே.

14 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நவரத்தினம் அடையும் நல்லூழ் பெறலாம்'.

said...

'விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும்' என்றதால் இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் 'நவரத்தினம் அடையும் நல்லூழ் பெறலாம்' என்ற பயன் பொருத்தம். நன்றி சிவமுருகன்.

said...

குமரா!
கன்னல் -கரும்பு இன்றே தெரிந்தது;ஏனையவை புரிந்தது நன்று.

said...

/இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நவரத்தினம் அடையும் நல்லூழ் பெறலாம்'.
/

செப்பிடுவோம்.

said...

நன்றி யோகன் ஐயா. கன்னல் மொழி என்று இளையர்கள் பேசும் மொழியைச் சொல்வார்களே.

said...

செப்புங்கள் குறும்பன். நன்றி.

said...

அருளும் பொருளும் தருவாள் அபிராமி.
சீர்காழி குரல் கேட்கிறது. குமரன் இந்த சேவைக்கு என்ன பரிசு தெருவது.
இணையத்தில் அபிராமியைப் பார்ப்பதால் இன்னும் அமைதி.

said...

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி வல்லி அம்மா.

said...

தங்களது கடந்த இரண்டு பதிவுகளையும் இன்றுதான் படிக்க முடிந்தது. அருமை.

கடந்த 1 வாரம் மதுரை விஜெயம். அன்னை மீனாஷி, திருப்பரம் குன்றம் தரிசனம் எல்லாம் ஆயிற்று.

பஞ்ச ப்ரேதாசீன தோற்றத்தில் அன்னை படம் மிக அருமை. அதனை பார்த்ததும் "கரும்பும், கணை 5ந்தும், பாசாங்குசமும்" என்ற பாடல் மனதில் தோன்றியது.

said...

மதுரைப்பயணமும் மீனாட்சி, திருமுருகன் தரிசனமும் நன்கு அமைந்ததில் மகிழ்ச்சி மௌலி ஐயா.

பஞ்சப்ரேதாசனத் தோற்றத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்குங்கள் ஐயா. ஏன் நீங்கள் வலைப்பதியத் தொடங்கக் கூடாது? லலிதா சகஸ்ரநாமத்திலிருந்து தொடங்கலாமே?!

said...

கைக்கே அணிவது கன்னலும் பூவும் - மனமாகிய கரும்பு வில்லும் , பஞ்சதன்மாத்திரைகளான (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து மூலப்பொருட்கள்) ஐந்து மலரம்புகளும் அன்னையின் கரங்களில் அணியாக விளங்குகின்றன.


"மனோரூபேக்ஷு கோதண்டா பஞ்சதன்மாத்ர ஸாயகா" - லலிதா ஸ்ஹஸ்ரநாமம்

விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் - பன்மணிக்கோவை என்பது பல வடங்களாலான மேகலையை குறிக்கும்

ரத்ன கிங்கிணி மேகலா - லலிதா சஹஸ்ரநாமம்

said...

குமரன் இந்தப் பாடலைப் படிக்கையில் இன்னொரு பாடல் நினைவிற்கு வந்தது. அருணகிரிதான். எனக்கு வேறென்ன தெரியும்? ஆலுக்கணிகலம் வெண்டலை மாலை. அது போல இங்கு அம்மைக்கு. அம்மைக்கு மட்டும்.

கன்னல் என்பது கரும்புதான். கன்னல் சுவை என்பது இனிப்பு. கன்னல் என்றாலே இனிப்பல்ல. கன்னல் சுவை என்றால் கரும்பின் சுவை. அதாவது இனிமை.

அம்மையின் கையில் ஏன் கன்னலும் பூவும்? மலரைக் கையில் வைத்து வாழ்க்கையை மலர வைப்பேன் என்கிறார் அம்மை. அந்த மலர்ச்சி இனிமையானது என்பதற்காக அப்படிக் கன்னலையும் பூவையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

said...

ஆமாம் ஜெயஸ்ரீ. நீங்கள் சொல்வதைப் போல் மனம் கரும்பு என்றும் ஐந்து புலப்பொருட்கள் ஐந்து மலரம்புகள் என்றும் படித்திருக்கிறேன். அன்னையில் கரங்களில் இருந்து இவற்றைப் பெற்றுத் தானே அனங்கனும் உலகில் ஆட்சி செய்கிறான்.

லலிதா சகஸ்ரநாமத்தில் இருந்து அபிராமி அந்தாதிக்கு இணையைக் காட்டுவது வைணவ ஆச்சாரியர்கள் வேதங்களை விளக்க பிரபந்தத்தையும் பிரபந்தத்தை விளக்க வேதங்களையும் காட்டுவார்களே அது போல் இருக்கிறது. இரண்டு மொழிகளையும் அதில் உள்ள இலக்கியங்களையும் அறிவது எவ்வளவு சுவையைக் கூட்டுகிறது! மிக்க நன்றி ஜெயஸ்ரீ.

said...

இராகவன்.

மலரைக் கையில் வைத்துக் கொண்டு வாழ்வை மலரச் செய்ய அம்மையிடம் ஒரு வேலைக்காரர் இருக்கிறார் - அவருக்குப் பெயர் மன்மதன். அவரும் இந்த மாதிரி கரும்பு வில்லும் ஐந்து மலர்க்கணைகளையும் வைத்திருபபார். :-)