Wednesday, March 26, 2008

என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் (பாடல் 85)


காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று தொடங்கி பாரதியார் பாடிய பாடல் நிறைய பேருக்குத் தெரியும். வாசுதேவ ஸர்வமிதி ச மஹாத்மா சுதுர்லப என்று கண்ணன் கீதையில் சொல்லிய படி இறைவனே எல்லாம் இங்கு என்று இருக்கும் மகாத்மாக்கள் ஒரு சிலரேனும் உண்டு இங்கே. 'உண்ணும் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாமும் கண்ணனே' என்று சொல்லுவார் நம்மாழ்வார். பார்க்கும் திசை தொறும் இறைவியின் திருக்காட்சியையே காண்கிறார் அபிராமி பட்டர். தான் கண்ட காட்சியை நாம் எல்லாம் காண இந்தப் பாடலில் வடித்துத் தருகிறார்.

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே


பார்க்கும் திசைதொறும் - நான் பார்க்கின்ற திசையிலெல்லாம் தெரிவது

பாசாங்குசமும் - அன்னை ஏந்திய பாசமும் அங்குசமும்

பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் - பனியைப் போன்ற மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகளால் மொய்க்கப்பட்டிருக்கும் வாடாத ஐந்து மலர்க்கணைகளும்

கரும்பும் - கரும்பு வில்லும்

என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் - என் அல்லல்களை எல்லாம் தன் கருணையால் தீர்க்கும் திரிபுரசுந்தரியின் திருமேனியும்

சிற்றிடையும் - சிறு இடையும்


வார்க்குங்கும முலையும் - கச்சை அணிந்த குங்குமம் அப்பிய முலைகளும்


முலைமேல் முத்து மாலையுமே - அந்த முலைகளின் மேல் அணிந்த முத்து மாலைகளுமே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பார்த்திருமே என்று நிறைய இந்தப் பாடல் பார்க்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் மாலையுமே என்று நிறைய அடுத்தப் பாடல் மாலயன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பார்க்கும், ஆர்க்கும், தீர்க்கும், வார்க்குங்கும

மோனை: பார்க்கும் - பாசாங்குசமும் - பனிச்சிறை, ஆர்க்கும் - ஐந்தும் - அல்லல், தீர்க்கும் - திரிபுரையாள் - திருமேனியும், வார்க்குங்கும - முலையும் - முலை - மேல் - முத்து - மாலையுமே.

Sunday, March 23, 2008

வஞ்சகர் நெஞ்சு அடையாள்! (பாடல் 84)



உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே


உடையாளை - உலகங்களையும் உயிர்களையும் உடைமைகளாகக் கொண்டவளை


ஒல்கு செம்பட்டுடையாளை - ஒளிவீசும் சிவந்த பட்டு உடையை அணிந்தவளை


ஒளிர்மதிச் செஞ்சடையாளை - ஒளிரும் நிலவை அணிந்த செம்மையான சடையை உடையவளை


வஞ்சகர் நெஞ்சு அடையாளை - வஞ்சகர்களின் நெஞ்சில் தங்காதவளை


தயங்கு நுண்ணூல் இடையாளை - தயங்கித் தயங்கி அசையும் நுண்ணிய நூல் போன்ற இடையை உடையவளை


எங்கள் பெம்மான் இடையாளை - எங்கள் தலைவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் இருப்பவளை


இங்கு என்னை இனிப் படையாளை - இந்த உலகத்தில் இனி என்னைப் படைக்காதவளை



உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே - உங்களையும் இனிப் பிறக்காமல் செய்யும் வண்ணம் வணங்குங்கள்

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் உடையவரே என்று நிறைய இந்தப் பாடல் உடையாளை என்று தொடங்கியது. இந்தப் பாடல் பார்த்திருமே என்று நிறைய அடுத்தப் பாடல் பார்க்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: உடையாளை, சடையாளை, இடையாளை, படையாளை

மோனை: உடையாளை - ஒல்கு - உடையாளை - ஒளிர்மதி, சடையாளை - தயங்கு, இடையாளை - எங்கள் - இடையாளை - இங்கு - என்னை - இனி, படையாளை - படையாவண்ணம் - பார்த்திருமே.

Thursday, March 13, 2008

இந்திரன் ஆகும் வழி (பாடல் 83)


உலகத்தில் இருக்கும் எல்லா இயற்கை சக்திகளும் தேவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தேவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்திர பதவி இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்களுக்கெல்லாம் உயர்ந்த இன்பம் என்பது வெள்ளிடைமலை. அப்படிப்பட்ட இந்திர பதவியை வேண்டி அடைய வேண்டாதபடி என்றைக்கும் உடையவராக ஒருவர் இருந்தால் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை இந்தப் பாடலில் சொல்கிறார் அபிராமி பட்டர்.

விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே


விரவும் புது மலர் இட்டு - தேன் சிந்தும் புதிய மலர்களை இட்டு

நின் பாத விரைக்கமலம் - மணம்மிக்க உன் திருவடித் தாமரைகளை

இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் - இரவும் பகலும் வணங்கும் வல்லமையுடையவர்கள்


இமையோர் எவரும் பரவும் பதமும் - தேவர்கள் எல்லாம் போற்றி வணங்கும் இந்திர பதவியையும்

அயிராவதமும் - வெள்ளையானையாம் ஐராவதத்தையும்

பகீரதியும் - ஆகாய கங்கையையும்

உரவும் குலிசமும் - வலிமையுடைய வஜ்ஜிராயுதத்தையும்

கற்பகக் காவும் -வேண்டியதை எல்லாம் தரும் கற்பகச் சோலையையும்

உடையவரே - இயல்பாகவே உடையவர்கள் (வருந்தி அடைய வேண்டாம்).

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் விரகே என்று நிறைய இந்தப் பாடல் விரவும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் உடையவரே என்று நிறைய அடுத்தப் பாடல் உடையாளை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: விரவும், இரவும், பரவும், உரவும்

மோனை: விரவும் - விரைக்கமலம், இரவும் - இறைஞ்ச - இமையோர், பரவும் - பதமும் - பகீரதியும், உரவும் - உடையவரே.

Sunday, March 09, 2008

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே (பாடல் 82)


இறைச்சக்தி உருவமற்றது. அதற்கு உருவம் ஏற்படுத்திக் கொண்டு வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பக்தர்கள். என்னே இவர்களின் அறிவீனம்? - இப்படியெல்லாம் தத்துவ ஆராய்ச்சி செய்து மிகப்பெரியவர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்பவர்கள் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ உருவமற்ற இறைசக்தியை வணங்குவது உயர்கல்வியைப் போன்றது; உருவத்தில் இறைசக்தியை வணங்குதல் தொடக்கக் கல்வியைப் போன்றது; அவரவர் ஆன்மிக முன்னேற்றத்திற்கு ஏற்ப இறைசக்தியை வணங்கிக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். இது சரி தானா, உண்மை தானா என்று எப்படி எனக்குத் தெரியும்? இந்தப் பாடலில் அபிராமி பட்டரோ வேறு மாதிரி சொல்கிறார். அன்னையின் திருவுருவத்தை நினைக்கும் போதெல்லாம் ஆன்மிக அனுபவங்களில் மிக உயர்ந்த அனுபவம் கிட்டுகிறதாம். உருவத்தை வணங்கும் இவர் தொடக்ககல்வி நிலையில் இருக்கிறாரா உயர்கல்வி நிலையில் இருக்கிறாரா அனைத்துக் கல்வியையும் கற்று மிகத் தேர்ந்தவராக இருக்கிறாரா தெரியவில்லை.

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு
வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே


அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே - வண்டுகள் தேனினை உண்ண மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே.

அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற - எல்லா உலகங்களும் உன்னிலிருந்து வீசும் ஒளியாக நின்றது.

ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும் - அப்படிப்பட்ட ஒளி வீசும் உன் திருமேனியை நினைக்கும் போதெல்லாம்

களியாகி - பெருமகிழ்ச்சி பெருகி

அந்தக்கரணங்கள் விம்மி - உள்ளுறுப்புகள் எல்லாம் விம்மி

கரை புரண்டு - உள்ளே பெருகிய மகிழ்ச்சி கரை புரண்டு

வெளியாய்விடில் - வெளியேயும் பெருகி நிற்கின்றது.

எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே - உனது பேரறிவினை எப்படி மறப்பேன்

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பேரளியே என்று நிறைய இந்தப் பாடல் அளியார் என்று தொடங்கியது. இந்தப் பாடல் விரகே என்று நிறைய அடுத்தப் பாடல் விரவும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: அளியார், ஒளியாக, களியாகி, வெளியாய்

மோனை: அளியார் - ஆரணங்கே - அகிலாண்டமும், ஒளியாக - ஒளிர் - உள்ளுந்தொறும்,
களியாகி -கரணங்கள் - கரைபுரண்டு, வெளியாய் - விரகினையே.

அருஞ்சொற்பொருள்:

அளி - கருணை (சென்ற பாடலில் பயன்படுத்திய பொருள்), வண்டு (இந்தப் பாடலில் பயன்படுத்திய பொருள்)
விரகு - பேரறிவு.

***

Wednesday, March 05, 2008

வஞ்சகரோடு இணங்க மாட்டேன்! (பாடல் 81)


சில நேரங்களில் சில மனிதர்கள் வஞ்சகர்கள் என்று தெரிந்திருந்த போதிலும் அவர்களுடன் இணங்கி இருக்க வேண்டிய நிலைமை உண்டாகிறது. சுயநலத்தால் எல்லோருமே அப்படி செய்வது அவரவர் அனுபவமாக இருக்கும். அன்னையின் அருளிருந்தால் அப்படி வஞ்சகரோடு இணங்கியிருக்க வேண்டிய தேவையிருக்காது என்பதை அபிராமி பட்டர் அருமையாகக் கூறுகிறார்.

அறிவு ஒன்றும் இல்லாதவன் நான். என் மேல் நீ வைத்த பெருங்கருணையை என்ன என்று சொல்லுவேன்? தெய்வங்களில் சிறந்தவளே. எல்லா தெய்வங்களும் நின் பரிவாரங்கள். நீயே என் மேல் கருணை கொண்டு விட்டதால் எதற்காகவும் எந்த நோக்கத்திற்காகவும் உலகத்தில் உன்னையன்றி மற்றவரை நான் வணங்க வேண்டியதில்லை; அதனால் வணங்கேன். அவர்களை நெஞ்சில் வாழ்த்தவும் தேவையில்லை; அதனால் வாழ்த்துகிலேன். வஞ்சகர்களோடு இணங்க வேண்டிய தேவையும் இல்லை; அதனால் இணங்கேன். தம்முடையது எல்லாம் அன்னையே உன்னுடையது என்று இருக்கிறார்களே சில மெய்யடியார்கள் அவர்கள் வெகு சிலரே; அப்படிப்பட்டவர்களோடு எந்தக் காரணத்தாலும் சண்டை போட மாட்டேன். பிணங்கேன்.

அணங்கே அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்றும் இலேன் என் கண் நீ வைத்த பேரளியே


அணங்கே - ஒரே தெய்வமே


அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால் - எல்லாத் தெய்வங்களும் உன் பரிவாரங்கள் ஆகையினால்


வணங்கேன் ஒருவரை - இன்னொருவரை வணங்க மாட்டேன்


வாழ்த்துகிலேன் நெஞ்சில் - நெஞ்சிலும் மற்றவரை வாழ்த்த மாட்டேன்


வஞ்சகரோடு இணங்கேன் - வஞ்சகர்களோடு இணங்க மாட்டேன்


எனது உனது என்று இருப்பார் சிலர் - தங்களுடையது எல்லாம் உன்னுடையது என்று இருப்பார்கள் சிலர்


யாவரொடும் பிணங்கேன் - அவர்கள் யாராயிருந்தாலும் அவர்களோடு பிணக்கு கொள்ள மாட்டேன்.


அறிவு ஒன்றும் இலேன் - அறிவு ஒன்றுமே இல்லாதவன் நான்

என் கண் நீ வைத்த பேரளியே - என் மேல் நீ வைத்தப் பெருங்கருணையை என்ன என்று போற்றுவேன்?

***


அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஆரணங்கே என்று நிறைய இந்தப் பாடல் அணங்கே என்று தொடங்கியது. இந்தப் பாடல் பேரளியே என்று நிறைய அடுத்தப் பாடல் அளியார் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: அணங்கே, வணங்கேன், இணங்கேன், பிணங்கேன்

மோனை: அணங்கே - அணங்குகள் - ஆகையினால், வணங்கேன் - வாழ்த்துகிலேன் - வஞ்சகரோடு, இணங்கேன் - எனது - என்றிருப்பார் - யாவரொடும், பிணங்கேன் - பேரளியே