Saturday, March 17, 2007

ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு (பாடல் 39)




ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே


ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு - என்னை ஆள்வதற்கு உந்தன் திருவடித்தாமரைகள் உண்டு

அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு - எமனிடமிருந்து மீள்வதற்கு உந்தன் கடைக்கண்ணின் கருணைப்பார்வை உண்டு

மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று - இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையே; அது உன் குறை இல்லை

முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே - முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!


(கடைசி இரண்டு அடிகளுக்கு வேறு வகையிலும் பொருள் சொல்வதுண்டு.

மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே - இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையாக இருக்கலாம்; ஆனால் அது உன் குறையும் கூட (ஏனெனில் நான் உன் பிள்ளை; உன் அடியவன்/அடியவள். என்னைக் காப்பது உன் கடன்)

அன்று முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே - முன்பு முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!
)

17 comments:

said...

எங்க வீட்ல இந்த படம் இருக்கு.

said...

குமரன்,
நல்ல விளக்கம். பல தமிழ்ச் சொற்களை அறிந்து கொண்டேன்.

அந்தகன் = யமன்[எமன்] ??

said...

கிஷோர். படத்தைப் பத்தி மட்டும் சொல்லியிருக்கீங்க. இடுகையைப் பத்தி ஒன்னும் சொல்லலையா?

said...

ஆமாம் வெற்றி. அந்தகன் என்றால் இறுதியில் வருபவன் என்று பொருள். அது எமனைக் குறிங்கும். அந்தகன் என்றால் கண்ணில்லாதவன் என்றும் ஒரு பொருள் உண்டு.

யமனை இயமன் என்றும் எமன் என்றும் எழுதுவதுண்டு. அந்த முறையில் எமன் என்று நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

said...

இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையாக இருக்கலாம்; ஆனால் அது உன் குறையும் கூட (ஏனெனில் நான் உன் பிள்ளை; உன் அடியவன்/அடியவள். என்னைக் காப்பது உன் கடன்)//
இந்தப் புரிதல் வர எத்தனை நாளாகுமோ.

said...

குமரா!
நிச்சயம் - அது நம் குறை தான் அவர் குறையில்லை.
அடுத்து ,அந்தத்தில் வருபவன் அந்தகன் . நல்லாயிருக்கு.

said...

//நின் குறையே//

இங்கே நின் குறையே என்று சொல்லியதால் குற்றத்திற்க்கு ஏவியவளே இது என் குறையல்ல உன் குறையே என்று பாடுகிறார். முதல் ஐம்பது பாடல் வரை தன்னால் முடிந்த வரை என்ன என்ன சொல்லி அவளை வரவழைக்க முடியுமோ (ஸாம, தான, பேத, தண்டம்) எல்லாம் சொல்லி பார்க்கிறார். கடைசியில் வெற்றியும் பெறுகிறார். (தனம் தரும்...).

ஆகவே நீங்கள் சொன்ன இரண்டாவது பொருள் சரியாக பொருந்தும்.

முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே என்பதால் இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்துவர 'ஆயுதப் பயிற்சியில் தேர்ச்சிபெறலாம்'.

said...

// குமரன் (Kumaran) said...
ஆமாம் வெற்றி. அந்தகன் என்றால் இறுதியில் வருபவன் என்று பொருள். அது எமனைக் குறிங்கும். //

குமரன்..இந்த விளக்கத்தில் பாதிதான் சரி. இறுதியில் எல்லாருக்கும் எமன் வரமுடியாது. இறைவனே வருவதும் உண்டு. அந்தம் என்றால் முடிவு. அந்தத்தைச் செய்கிறவன் அந்தகன். ஆண்டவன் அருளினால் வீடுபேறு கொள்கிறவர்களுக்கு முடிவு இல்லை. அதற்குப் பிறகு இறையருள் எனும் தொடர்ச்சியே. ஆகையால் அந்தகன் என்ற சொல் எமனுக்கு மட்டுமே பொருந்தும்.

இன்னொரு ஐயம். வாணுதல் என்பது எப்படி ஓளி பொருந்திய நெற்றியாகிறது? வாணுதல் எப்படிப் பிரியும்? நுதல் என்றால் நெற்றி என்று தெரியும். வானுதல் என்ற சொல்லாடலும் தெரியும். மதிவாள்நுதல் என்ற சொல்லாடலும் தெரியும். ஆனால் வாணுதல் என்பது?

said...

வல்லி அம்மா. அவள் அருளால் அவள் தாள் வணங்குவோம். சில நேரம் கோதையைப் போல் வம்பிற்குச் சென்று எழுப்பி அவன்/அவள் கடமையை நினைவூட்டவும் தேவைப்படலாம்.

said...

நன்றி யோகன் ஐயா.

said...

நன்றி சிவமுருகன். எனக்கு வேலையின்றிச் செய்துவிட்டீர்கள். :-)

அம்பு வில் என்று சொன்னதால் 'ஆயுதப் பயிற்சியில் தேர்ச்சி பெறலாம்' என்ற பயன் நன்றாக இருக்கிறது. அந்தகன் பால் மீளுகைக்கு கடைக்கண் பார்வை என்ற ஆயுதமும் உண்டல்லவா? அதனையும் சொல்லியிருப்பார்கள்.

said...

இராகவன். விளக்கத்திற்கு நன்றி. நான் சொன்னது பெரும்பான்மையாக நடக்கும் 'விதி'. நீங்கள் சொல்வது 'விதிவிலக்கு'. பெரும்பான்மையானவருக்கு இறுதியில் வருபவன் என்பதால் அந்தகன் என்ற பெயர் எமனுக்குப் பொருந்தும். இறையருளால் விடுதலை பெறுபவருக்கு எமன் அந்தகன் இல்லை தான்.

வாள்+நுதல் வாணுதல் ஆகிறதாக பள்ளியில் என் தமிழாசிரியர் சொல்லித் தந்தார். மதிவாள்நுதல் என்பதனையே மதிவாணுதல் என்றும் படித்திருக்கிறேன். அதற்கு நீங்கள் கூர்மையான வாள் போன்ற நெற்றி என்று விளக்கம் சொன்னதும் அதற்கு இரவிசங்கர் கண்ணபிரான் வாணுதல் என்று சொல்லி ஒளி பொருந்திய நெற்றி என்று சொன்னதும் நினைவில் இருக்கிறது. அப்போதே அங்கு வந்து இதனைச் சொல்ல முடியவில்லை - ஏனெனில் எந்த வகையில் வாள் என்பதற்கு ஒளி என்ற பொருள் என்று தெரியவில்லை; இப்போதும் தெரியாது.

இந்த அகராதியையும் பாருங்கள்.

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+&display=utf8&table=tamil-lex

said...

வாள் என்ற சொல்லுக்கு ஓளி, புகழ், கூர்மை, கொல்லுதல், கொடுமை,கலப்பை, கத்தி, கத்தரிக்கோல் என்று பல பொருட்கள்
உண்டு.கொல்லுதலோடும்,கூர்மையோடும் தொடர்புடையதால் ஆகுபெயராக கொல்லும் ஆயுதத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

வாள்+நுதல் - வாணுதல்

ணள முன் டண வும் ஆகும் தந க்கள்" - நன்னூல் விதி

இரு சொற்கள் சேரும் போது

ண+த(அ)ந = ட
ள+த(அ) ந = ண

(தண்+தமிழ் = தண்டமிழ்)

வாள் - ஒளி என்ற பொருளில் பற்பல இடங்களில் பயின்று வந்துள்ளது

கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
- பாரதியின் சூரிய தரிசனம்

வாண்முகம் - ஒளி பொருந்திய முகம்

திருநாவுக்கரசர் ஒரு பதிகத்தின் அனைத்துப் பாடல்களின் முதலடியிலும் 'வாண்முக மாதர்பாட '
எனப் பயின்று வரும்படி பாடியிருக்கிறார்

1.நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட

2.மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட

3.நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட

4.கதிரார் திங்கள் வாண்முக மாதர்பாட

5.வானார்திங்கள் வாண்முக மாதர்பாட

7.பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட

8.கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாட

9. சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாட

said...

அருமையான பாடல் குமரன்.

நீங்கள் சொல்வதுபோல் இப்பாடலுக்கு இருவிதமாகவும் பொருள் கூறுவர்.

உலக நாயகியல்லவா அவள் ? குழந்தை தாயின் காலை கட்டிக்கொள்வதைப்போல் அவள் சரணங்களைப் பற்றிக்கொண்டால், அள்ளியெடுத்துக் காத்திட மாட்டாளா? அதற்குப் பின் கவலைதான் எதற்கு?

அவள் வீற்றிருக்கும் தலம் திருக்கடவூரல்லவா? யமனைக் காலால் உதைத்துத் தள்ளிய இறைவனின் ஒரு பாதியல்லவா அவள்? யமன் பாசக்கயிற்றோடு வரும்போது அவள் தன் கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தால் போதுமே. அவன் அலறியடித்துக்கொண்டு ஓடிவிட மாட்டானா ?

இம்மையில் துன்பங்களிலிருந்து காக்க அவள் திருவடிகள் உண்டு. காலன் கையகப்படாமல் இருக்க அவள் கடைக்கண் அருட்பார்வை உண்டு.

முப்புரம் எரித்த சிவனுக்கே உடலின் ஒரு பாதியாய் நின்று துணை செய்பவள், என்னைக் காப்பது அவளுக்கு ஒரு பெரிய செயல் அல்லவே?

இருந்து "தன் செயல் செய்து தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்னம் நின்னைச் சரணடைந்தேன்" என்று சரண் புகாமல் இருப்பது நம் குறை அன்றி அவள் குறை அல்லவே ?

said...

அருமையான பாடல். அழகான விளக்கங்கள். அவளைச் சரணடையாமல் இருப்பது நம் குறைதான். ஆனால் அவளை நினைக்கவும் அவள் அருள்தானே வேண்டியிருக்கிறது? அவளைப் பற்றிப் படிக்கப் படிக்க, கேட்கக் கேட்க சுகமாக இருக்கிறது.

said...

கவிநயா இங்கே பின்னூட்டம் இட்டதால் உங்களின் பின்னூட்டங்களுக்கு ஒரு வருடம் கழித்துப் பதில் இடுகிறேன் ஜெயஸ்ரீ. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

வாள் என்பதற்கு ஒளி என்ற பொருள் இருப்பதையும் அது எங்கெல்லாம் பயின்று வந்திருக்கிறது என்பதையும் அழகாக விளக்கினீர்கள். மிக்க நன்றி.

பாடலின் விளக்கத்தையும் நன்கு சொன்னீர்கள். நன்றிகள்.

said...

நன்றாகச் சொன்னீர்கள் கவிநயா. மிக்க நன்றி.