Tuesday, March 13, 2007
அவளைப் பணிமின் கண்டீர் (பாடல் 38)
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் - பவளக் கொடியில் பழுத்த பவளம் போல் இருக்கும் செவ்விதழ்களும்
பனி முறுவல் தவளத் திருநகையும் - குளிர்ந்த முறுவலும் முத்து போன்ற பற்கள் தெரிய செய்யும் புன்னகையும்
துணையா - துணையாகக் கொண்டு
எங்கள் சங்கரனைத் - எங்கள் (தலைவனாம்) சங்கரனைத்
துவளப் பொருது - துவண்டு போகும்படி போரிட்டு
துடியிடை சாய்க்கும் - உடுக்கையைப் போன்ற இடையை கீழே சாய்க்கும்
துணை முலையாள் - ஒன்றிற்கு ஒன்று துணையான முலைகளை உடையவள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே - அவளைப் பணியுங்கள் தேவருலகாம் அமராவதியை ஆளுவதற்கு.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'வேண்டிய பொருளை வேண்டியபடியே அடையலாம்'.
அன்புக் குமரா!
படித்தேன். கண்ணதாசனும் ஒரு பாடல் எழுதியுள்ளார்;" பவளக்கொடியிலே முத்துக்கள் சேர்த்தால் புன்னகை என்றே பேராகும்.
இவரைத் தழுவியதே!!
'அமராவதி ஆளுகைக்கே' என்றதால் 'வேண்டிய பொருளை வேண்டிய படியே அடையலாம்' என்ற பயன் பொருத்தமானது. நன்றி சிவமுருகன்.
பவளக்கொடியில் முத்துகள் சேர்த்தால் புன்னகை என்றே பெயராகும்.
ம்ம்ம். நல்ல வரி. கண்ணதாசன் இந்த மாதிரி நிறைய செய்திருக்கிறார் யோகன் ஐயா. பழைய இலக்கியங்களில் இருப்பவற்றை மிக எளிமையாகத் தன் பாடல்வரிகளில் சொல்லியிருக்கிறார். நல்ல பணி அது.
Post a Comment