Thursday, March 22, 2007
முன் செய் புண்ணியமே (பாடல் 40)
வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே
வாணுதற் கண்ணியை - ஒளி பொருந்திய நெற்றிக்கண்ணை உடையவளை,
விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை - விண்ணில் வாழும் தேவர்கள் யாவரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு விருப்படும் எங்கள் தலைவியை,
பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை - ஒன்றுமறியா பேதை நெஞ்சில் காணுவதற்கு எளிதில்லாத கன்னியை
காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய்
புண்ணியமே - காணும் அன்பு கொள்ளவேண்டும் என்று எண்ணினேனே. அந்த எண்ணம் நான் முன்பு செய்த புண்ணியப் பயன் தானே.
அருஞ்சொற்பொருள்:
அண்ணியள் - அண்மையில் இருப்பவள்; எளிதானவள்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பூர்வ புண்ணியம் தடையின்றிப் பலன்தரும்'.
குமரன்
அன்னியள் என்பதற்க்கும் அன்னியன் என்பதற்க்கும் பொருள் வேறுபடுகிறதே...
அன்னியன் என்றால் தொலைவில் இருப்பவன் / அனுக இயலாதவன் என்று அல்லவா பொருள் கொடுக்கிறது... அதன் பெண் பால் போல் உள்ள அன்னியள் என்ற வார்த்தை எப்படி எதிர்ப்பதமான பொருள் தரும் ??
செந்தழல் இரவி. முதலில் நீங்கள் அபிராமி அந்தாதிப் பதிவைப் படிக்கிறீர்கள் என்று காட்டும் வண்ணம் பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி. உங்கள் பெயரைக் கண்டு வியப்படைந்தேன். மகிழ்ச்சி. :-)
இங்கே அன்னியள் என்று சொல்லவில்லை. அண்ணியள் என்று சொல்லியிருக்கிறார். அது தான் வேறுபாடு. அன்னியன் என்றால் நீங்கள் சொன்னது போல் பொருள் வரும். அண்ணியள் என்றால் அண்மையில் இருப்பவள் என்ற பொருள் வருகிறது.
முன் செய் புண்ணியமே என்றதால் நீங்கள் சொன்ன பயன் மிகப் பொருத்தம் சிவமுருகன்.
குமரன், நான் நீண்ட நாட்களாக படித்துவருகிறேன்...
இறைநம்பிக்கையோடல்ல...பாடல்களுக்காகவும் உங்கள் சொற்சுவைக்காகவும்...
:))
அன்புடன்.
செந்தழல் ரவி
பாடல்களுக்காகவும் பாடல்களின் சொற்சுவைக்காகவும்ன்னு சொல்லுங்க இரவி. :-)
நன்றி.
கூட ஒரு டிஸ்கியும் மறக்காமப் போட்டீங்களா...தப்பிச்சீங்க. :-)
//முன்பு செய்த புண்ணியப் பயன் //
குமரா!
இதைத்தான் "நல்லூழ்" என்பதோ!!
அண்ணியள் என்பதில் மயக்கமிருந்து தீர்ந்தது.
நன்றி
ரவி!
உங்கள் ஆர்வம் போற்றுதற்குரியது.இதுதான் தமிழின் சிறப்பு!!
யோகன் ஐயா.
இராம.கி. ஐயாவின் பின்னூட்டத்தைப் படிப்பதற்கு முன் 'ஆமாம். இது தான் நல்லூழ்' என்று சொல்லியிருப்பேன். ஆனால் ஊழ், நல்லூழ் போன்ற சொற்களை வினைப்பயன் என்ற பொருளில் வள்ளுவர் பயன்படுத்தவில்லை என்று அவரும் மற்றவரும் சொல்லுவதால் இது தான் நல்லூழா என்று தெரியவில்லை.
ஒவ்வொரு பாடலிலும் பல சிறப்புகள் இருக்கின்றன. இந்தப் பாடலில் என்னை மிகவும் கவர்ந்தது வழக்கமாக முதல் சீரில் இருக்கும் எதுகையோடு இரண்டாவது சீரிலும் எதுகை வரும்படி இருக்கிறதே அது தான்.
வாணுதல், பேணுதல், காணுதல், பூணுதல் என்று முதல் சீரில் எதுகையோடும்
கண்ணியை, எண்ணிய, அண்ணியள், எண்ணிய என்று இரண்டாவது சீரில் எதுகையோடும் அமைந்திருக்கிறது.
மோனையின் எடுத்துக்காட்டு விரும்புபவர்களுக்கு: வாணுதல் - விண்ணவர் - வந்து, யாவரும் - இறைஞ்சி, பேணுதல் - பேதை, எண்ணிய - எம்பெருமாட்டி, காணுதல் - கன்னியை - காணும், அண்ணியள் - அல்லாத - அன்பு, பூணுதல் - புண்ணியம், எண்ணிய - எண்ணம். இப்படி ஒவ்வொரு வரியை மட்டுமின்றி ஒவ்வொரு சொல்லையும் சுவையோடு அமைத்திருக்கிறார். அபிராமி அந்தாதி முழுவதையுமே இப்படி இரசிக்கலாம்.
படிக்கப் படிக்கச் சுவைக்கிறது. உங்கள் விளக்கம் அதற்கு மேலும் இனிமை கூட்டுகிறது, குமரன்!
நன்றி கவிநயா.
Post a Comment