Friday, March 30, 2007
புண்ணியம் செய்தனமே மனமே (பாடல் 41)
புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே
புண்ணியம் செய்தனமே மனமே - ஆகா. என்ன பாக்கியம். என்ன பாக்கியம். புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே.
புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி - இப்போதே மலர்ந்த கருங்குவளைப்பூவைப் போன்ற கண்களை உடைய நம் அன்னையும் சிவந்த அவளது கணவரும் இணைந்து
நம் காரணத்தால் நண்ணி - நம்மை ஆண்டு அருள்வதற்காக விரும்பி
இங்கே வந்து - நாமிருக்கும் இடமான இங்கே வந்து
தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி - தம் அடியவர்களின் கூட்டத்தின் நடுவே நம்மை இருக்கும்படி அருள் செய்து
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே - நம் தலையின் மேல் தங்களின் தாமரைத் திருவடிகளை நிலையாக நிறுத்திடவே.
***
அம்மையும் அப்பனுமாக இணைந்து இருப்பதே நிலையானது. அதுவே அருள் செய்யும் நிலை. இதனை புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி என்று சொல்கிறார்.
அம்மையின் அடியவர் என்பதால் அம்மையை முன்னிலைப் படுத்தி அவளின் கணவர் என்று பெருமானைச் சொல்கிறார். என்னை அறிந்தவர்கள் என் தந்தையைக் குமரனின் தந்தை என்பதும் என் தந்தையை அறிந்தவர்கள் என்னை நடராஜன் மகன் என்பதும் போல.
தாமே நமக்காக விரும்பி வந்தார்கள் என்பது நாம் செய்த ஏதோ ஒரு நல்வினைக்காக என்று இல்லாது அவர்களின் கருணையாலே நமக்கு அருள் செய்ய விரும்பி வந்தார்கள் என்று காட்டுவதற்காக.
இங்கே வந்து என்றது நல்லதும் தீயதும் நிறைந்து இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இந்த உலகத்தில் இருக்கும் நமக்காக அவர்கள் கீழிறங்கி வந்தார்கள் அவர்களின் கருணையால் என்று சொல்வதற்காக.
அடியவர்கள் குழுவுடன் இணைந்து காலத்தைப் போக்கினால் பந்த பாசங்கள் நீங்கும்; பந்த பாசங்கள் நீங்கினால் மயக்கம் தீரும்; மயக்கம் தீர்ந்தால் நிலை தடுமாறா மனநிலை கிடைக்கும்; அந்த மனநிலை கிடைத்தால் இங்கேயே விடுதலை கிடைக்கும்; என்று ஆன்றோர் சொன்ன நிலை கிடைக்கும் படி அடியவர் கூட்டத்தின் நடுவில் இருக்கப் பண்ணினாள்.
இதெல்லாம் அவள் திருவடிகளின் பெருமை. அம்மையப்பர்களின் பொற்றாமரைத் திருவடிகள் நம் சென்னியில் பதித்திடவே என்ன தவம் செய்தோமோ மனமே என்று வியக்கிறார்.
***
அந்தாதித் தொடை: முன் செய் புண்ணியமே என்று சென்ற பாடல் முடிந்தது. இந்தப் பாடல் புண்ணியம் செய்தனமே மனமே என்று தொடங்கி புண்ணியம் என்ற சொல்லைக் கொண்டு அந்தாதித் தொடையைத் தொடுக்கிறார். பதித்திடவே என்று இந்தப் பாடல் நிறைந்து அடுத்தப் பாடல் இடம் கொண்டு என்று தொடங்கி 'இடம்' என்ற சொல்லைக் கொண்டு தொடுக்கப்பட்டிருக்கிறது.
அணி நலம்:
புண்ணியம், கண்ணியும், நண்ணி, பண்ணி என்று நான்கு அடிகளிலும் எதுகையை அமைத்திருக்கிறார்.
புண்ணியம் - புது - பூங்குவளை, கண்ணி - கணவர் - காரணம், நண்ணி - நடு, பண்ணி - பத்ம - பாதம் - பதித்திடவே என்று நான்கு அடிகளிலும் மோனைச் சுவையைக் காட்டுகிறார்.
செய்தனமே மனமே என்ற இடத்தில் ஒன்று போல் ஒலிக்கும் சுவைநலத்தையும் காட்டுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
குமரன்,
பாடலுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி.
முதல் வரியைப் பாத்ததும் மனசுக்குள்ள குணா அபிராமி..அபிராமி... என ஊனுருக உயிருருக அழைப்பது கேட்க ஓடி வந்து பார்த்தேன். :-)
நன்றி (கமலுக்கும் சேர்த்து)
ஆமாம் சுந்தர். அபிராமி அந்தாதியை பலருக்கும் அறிமுகம் செய்தது கமலின் குணா திரைப்படம் தான். இந்தப் பாடலும் அடுத்த பாடலும் பலருக்கு குணா படத்தை நினைவுறுத்தியிருக்கிறது. :-)
//அம்மையின் அடியவர் என்பதால் அம்மையை முன்னிலைப் படுத்தி அவளின் கணவர் என்று பெருமானைச் சொல்கிறார்.//
குமரா!
சரியாகச் சொன்னீர்! சிலருக்கு மனைவியால் தான் பெயர் வெளியே தெரியும். நற்பெயரோ;கெட்டதோ அவர்கள் கையில் தான் உண்டு.
யோகன் ஐயா. ஈசனின் மனை மங்கலம் என்று அபிராமி பட்டர் அம்மையைச் சொல்வார். எல்லோருக்கும் அவரவர் மனைவியரே அவரவர் மனைமங்கலம்.
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அடியார் உறவு பெறலாம்'
பாடலின் பலன் மிக வெளிப்படை சிவமுருகன். நன்றி.
அபிராமி அந்தாதி பற்றி ஓரளவு தெரியும் என்றாலும்,, குணாவை பார்த்து விட்டுத் தான் இங்கு ஓடி வந்தேன்...
Post a Comment