Wednesday, December 28, 2005

91: நான் முன் செய்த புண்ணியம் ஏது? (பாடல் 12)

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

கண்ணியது உன் புகழ் - நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ்

கற்பது உன் நாமம் - நான் எப்போதும் கற்பது உன் நாமம்

கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாத அம்புயத்தில் - என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில் (அம்புயம் - அம்புஜம் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு; அம்பு - நீர், ஜம் - பிறந்தது; நீரில் பிறந்த மலர் அம்புஜம்)

பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து - நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன்.

நான் முன் செய்த புண்ணியம் ஏது - இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் என்ன புண்ணியம் செய்தேன்?

என் அம்மே - என் தாயே

புவி ஏழையும் பூத்தவளே - ஏழு உலகையும் பெற்றவளே.

ஏழு உலகையும் பெற்ற என் தாயே. அபிராமி அன்னையே. எப்போதும் என் பாடல்களின் பொருளாய் இருப்பது உனது புகழே. எப்போதும் நான் சொல்லுவதும் உனது நாமமே. என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில். நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன். இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் அதற்கு என்ன புண்ணியம் செய்தேன்?

89: ஆனந்தமாய் என் அறிவாய் நிற்பவள் நீ (பாடல் 11)

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே

ஆனந்தமாய் - எனக்கு இயற்கையாய் அமைந்த இன்பமாய்

என் அறிவாய் - உன் அருளால் எனக்குக் கிடைத்த நல்லறிவாய்

நிறைந்த அமுதமுமாய் - அந்த இன்பத்திற்கும் நல்லறிவுக்கும் காரணமாய் என்னுள் நிறைந்த அமுதமுமாய்

வான் அந்தமான வடிவுடையாள் - மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்று வானைக் கடைசியாய்க் கொண்டுள்ள ஐம்பூதங்களின் வடிவானவளே.

மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் - வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள்

தவள நிறக் கானம் - சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட காட்டைத்

தம் ஆடரங்காம் - தன் திருநடனத்திற்கு அரங்கமாய்க் கொண்ட

எம்பிரான் முடிக் கண்ணியதே - என் தலைவனாம் ஈசன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.

அபிராமி அன்னையே! நீயே என் ஆனந்தமாய் என் அறிவாய் விளங்கி என்னுள் நிறைந்த அமுதமுமாய் விளங்குபவள். மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களின் வடிவானவள். வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள். அவை சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட சுடுகாட்டைத் தன் திருநடனத்திற்கு உரிய அரங்கமாய்க் கொண்ட என் தலைவனாம் ஈசன் தன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.

Saturday, December 24, 2005

86: எங்கும் என்றும் நினைப்பது உன்னை (பாடல் 10)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை - நான் நிற்கும் போதும் அமரும் போதும் கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் - நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே

எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே - யாராலும் எழுதப்படாமல் உணர்வால் அறியப்பட்ட வேதங்களில் ஒன்றி நிற்கும் அறிதற்கரிய பொருளே

அருளே உமையே - அருள் வடிவான உமையே

இமயத்து அன்றும் பிறந்தவளே - இமயமலைக்கரசன் மகளாய் அன்று பிறந்தவளே

அழியா முத்தி ஆனந்தமே - என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே

அருள் வடிவான உமையே. இமயமலைக்கரசன் மகளே. எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே. நான் நிற்கும் போதும் அமரும் போதும் கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே. நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே.

Friday, December 09, 2005

78: அம்மே வந்து என் முன் நிற்கவே (அபிராமி அந்தாதி பாடல் 9)

கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே

கருத்தன எந்தைதன் கண்ணன - கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கருத்திலும் கண்ணிலும் நின்று விளங்குவன.

வண்ணக் கனகவெற்பின் பெருத்தன - வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பன.

பால் அழும் பிள்ளைக்கு நல்கின - நீ உயிர்களுக்கு எல்லாம் தாய் என்பதைக் காட்டுவது போல் திருஞான சம்பந்தராம் அழும் பிள்ளைக்கு நல்கி நின்றன.

பேர் அருள்கூர் திருத்தன பாரமும் - இப்படிப் பெரும் கருணை கொண்ட உன் கனமான திருமுலைகளும்

ஆரமும் - அதில் பொருந்தி நிற்கும் மாலைகளும்

செங்கைச் சிலையும் அம்பும் - சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும்

முருத்தன மூரலும் - பூவின் மொட்டு அவிழ்வதைப் போல் இருக்கும் உன் அழகிய புன்னகையும் கொண்டு

நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - தாயே நீ வந்து என் முன் நின்று காட்சி தரவேண்டும்.

அபிராமி அன்னையே. கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கண்ணிலும் கருத்திலும் என்றும் நீங்காமல் நிற்பனவும், வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பனவும், பால் வேண்டி அழுத திருஞான சம்பந்தருக்கு நல்கி நின்றனவும் ஆன உன் கருணையைப் போல் கனமான உன் திருமுலைகளுடனும் அதில் பொருந்தி இருக்கும் மாலைகளுடனும் உன் சிவந்த திருக்கரங்களில் ஏந்திய வில்லுடனும் அம்புடனும் உன் அழகிய புன்னகையுடனும் என் முன்னே வந்து காட்சி தர வேண்டும்.

Saturday, November 26, 2005

66: சுந்தரி எந்தை துணைவி (பாடல் 8)

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

சுந்தரி - அழகில் சிறந்தவளே

எந்தை துணைவி - என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே

என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி - என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

சிந்துர வண்ணத்தினாள் - சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே

மகிடன் தலைமேல் அந்தரி - அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே

நீலி - நீல நிற மேனியைக் கொண்டவளே

அழியாத கன்னிகை - இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே

ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் - வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே

மலர்த்தாள் என் கருத்தனவே - உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.

அழகில் சிறந்து என் தந்தையாம் சிவபெருமானின் துணைவியாய் நின்றவளே. சிந்துரம் அணிந்ததால் சிவந்த திருமேனியைக் கொண்டவளே. அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே. நீல நிற மேனியைக் கொண்ட காளியே. இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே. பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே. உன்னுடைய திருவடி மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன. என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

Thursday, November 17, 2005

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி (பாடல் 7)

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி - தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு மயங்குகிறது.

தளர்விலது ஓர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் - அப்படி நான் மயங்காத வண்ணம் ஒரு நல்ல கதியை அடையும் வண்ணம் அருள் புரிவாய்.

கமலாலயனும் - தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும்

மதியுறு வேணி மகிழ்நனும் - நிலவை தன் முடியில் அணிந்திருக்கும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும்

மாலும் - திருமாலும்

வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் - என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே

சிந்துரானன சுந்தரியே - சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே!

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், நிலவை தன் முடியில் சூடும் உன் மகிழ்நனும், திருமாலும் என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே! சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே! தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலையும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு துன்புறுகிறது. அப்படி நான் வருந்தாத வண்ணம் ஒரு நல்ல கதியைக் கொடுத்து அருள் புரிவாய்.

Sunday, November 06, 2005

சென்னியது உன் திருவடித்தாமரை (பாடல் 6)

சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!

சென்னியது உன் திருவடித்தாமரை - எப்பொதும் என் தலையில் உள்ளது உன் தாமரை மலர்கள் போன்ற அழகிய திருவடிகள்.

சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம் - என்றும் என் நினைவினில் நிலைத்து நிற்பது உன் திருமந்திரம்.

சிந்துர வண்ணப் பெண்ணே! - செந்தூரம் போன்ற நிறமுடைய அழகிய தேவியே!

முன்னிய நின் அடியாருடன் கூடி - நான் எப்போதும் கூடியிருப்பது உன் அடியார்களையே. என் எல்லா செயல்களையும் அவர்களை முன்னிட்டு செய்கிறேன்.

முறை முறையே பன்னியது - தினந்தோறும் நான் முறையுடன் பாராயணம் செய்வது

உந்தன் பரமாகமப் பத்ததியே - உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே

செந்தூரம் எனச் சிவந்த திருமேனியைப் பெற்ற அபிராமி அன்னையே! உன் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நான் எப்போதும் என் தலையின் மேல் வைத்துள்ளேன். உன் திருமந்திரமே எப்போதும் என் நினைவில் நிலை நிற்பது. என் எல்லா செயல்களும் உன் அடியார்களை முன் வைத்தே அவர்களுக்காகவே நடக்கின்றன. நான் எப்போதும் கூடியிருப்பதும் உன் அடியார்களையே. தினந்தோறும் நான் முறையுடன் படிப்பதும் உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே.