
தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே
தங்கச் சிலை கொண்டு - பொன்மலையாம் மேரு மலையே வில்லாகக் கொண்டு
தானவர் முப்புரம் சாய்த்து - திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும் சிரித்தெரி கொளுத்தி
மத வெங்கண் கரி உரி போர்த்த - மதத்தால் சிவந்த கண்களைக் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட
செஞ்சேவகன் - சிவந்தவனாம் சிவபெருமானின்
மெய்யடையக் - திருமேனியை அடைய
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி - கொங்கையெனும் அம்பினைக் குறி வைத்த தலைவியே!
கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே - சிறந்த பொன்னைப் போல் சிவந்தத் திருக்கையில் இருக்கும் கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் எப்போதும் என் தியானத்தில் இருக்கின்றன.
***
திரிபுர அசுரர்களின் முப்புரத்தை மேரு எனும் பொன் வில் கொண்டு சிரித்தெரிக் கொளுத்தியும் கஜமுகாசுரனைக் கொன்று தோலை உரித்து அணிந்தும் பெருமை கொண்ட சிவந்தவன் உன் கையில் இருக்கும் மதனின் கரும்பு வில்லிலும் மலர் அம்புகளிலும் அந்த அம்புகளை விட மென்மையான உன் கொங்கைகள் எனும் மலர்க் கணையால் உன்னை தன் திருவுடலின் பாதியாகக் கொண்டான். அப்படிப் பெருமை கொண்ட உன் கையில் இருக்கும் கரும்பிலும் மலரிலும் என் மனம் நிற்கிறது.
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் தங்கச்சியே என்று நிறைய இந்தப் பாடல் தங்கச்சிலை என்று தொடங்கியது. இந்தப் பாடல் சிந்தையதே என்று நிறைய அடுத்தப் பாடல் தேறும்படி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை.
எதுகை: தங்கச்சிலை, வெங்கண், கொங்கை, செங்கை
மோனை: தங்கச்சிலை - தானவர், கொங்கை - குரும்பை - குறியிட்ட - கோகனக, செங்கை - சிந்தையதே.