Saturday, October 13, 2007

தஞ்சம் பிறிது இல்லை (பாடல் 59)


தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே


தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று - உன் திருவடிகளைத் தவிர்த்து வேறு கதி இல்லை என்று அறிந்திருந்தும்


உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் - உன் திருவடிகளைப் பற்றி உய்யும் தவநெறிக்கே நெஞ்சத்தைப் பயிற்றுவிக்க நான் நினைக்கவில்லை.


ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் - பெருமை மிக்க (நிகரில்லாத) நீண்ட வில்லாக்க கரும்பையும் ஐந்து அம்புகளாக மலர்களையும் கொண்டு நின்றவளே!


அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே - பஞ்சைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய தாய்மார்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகள் அறியாமல தவறு செய்தாலும் அவர்களை தண்டிக்க மாட்டார்கள் (அடிக்க மாட்டார்கள்) அல்லவா? அது போல் நீயும் என்னை தண்டிக்காதே.

***

அபிராமி அன்னையிடம் நான் எத்தனை தவறு செய்திருந்தாலும் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார். மானிடப் பெண்களே தங்கள் குழந்தைகளிடம் இவ்வளவு கருணையுடன் இருக்கும் போது எல்லா உலகிற்கும் தாயான அன்னையே நீ எவ்வளவு கருணையுடன் இருப்பாய் என்று தெரிகிறதே என்கிறார்.

***

அருஞ்சொற்பொருள்:

சிலை: வில்

ஒற்றை நீள்சிலை: நிகரில்லாத என்று சொல்ல ஒற்றை என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். ஏகம் அத்விதீயம் (ஒன்றே இரண்டில்லாதது - தனக்கு நிகராக இன்னொன்று இல்லாதது) என்று வேதங்களும் சொல்கின்றன.

அஞ்சு அம்பும் - மற்றவர் அஞ்சுகின்ற படி இருக்கும் அம்புகளும் எனலாம்; ஐந்து அம்புகளும் எனலாம். ஐந்து மலர்க்கணைகளை அன்னை தாங்கியிருக்கிறாள் என்பது மற்ற இடங்களில் சொல்லப்பட்டது. ஐந்து என்பதன் பேச்சு வழக்கான அஞ்சு என்ற சொல்லை இங்கே புழங்குகிறார் அபிராமி பட்டர்.

இக்கு - கரும்பு

அலர் - மலர்

மெல்லடியார் அடியார் - சிலேடை; மெல்லிய பாதங்களை உடையவர் என்று முதற்சொல்லிலும் அடிக்க மாட்டார்கள் என்று இரண்டாம் சொல்லிலும் அடியார் என்ற சொல்லைப் புழங்குகிறார்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தஞ்சமுமே என்று நிறைய இந்தப் பாடல் தஞ்சம் பிறிதின்றி என்று தொடங்கியது. இந்தப் பாடல் பாலரையே என்று முடிய அடுத்தப் பாடல் பாலினும் என்று தொடங்குகிறது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தஞ்சம், நெஞ்சம், அஞ்சம்பும், பஞ்சஞ்சு

மோனை: தஞ்சம் - தவநெறிக்கே, நெஞ்சம் - நினைக்கின்றிலேன் - நீள்சிலையும், அஞ்சம்பும் - அலராகி - அறியார், பஞ்சஞ்சு - பாலரையே.

5 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'துர்நடத்தை உள்ள பிள்ளை நல்லவனாக'.

said...

குமரன்
அன்னையின் கரும்பு வில்,
ஐந்து மலர்க் கணைகள் பற்றிய வைபவம்/கதை இருக்கா?

said...

பஞ்சஞ்சு மெல்லடியாரின் பாலரைப் பற்றிச் சொன்னதால் துர்நடத்தை உள்ள பிள்ளை நல்லவனாக இந்தப் பாடலைப் பாராயணம் செய்யச் சொன்னார்கள் போலும். நன்றி சிவமுருகன்.

said...

இரவிசங்கர். கதைகள், வைபவங்களைச் சொல்ல உங்களை விட வேறு யார் பொருத்தமானவர்கள்? நீங்களே சொல்லுங்கள் இரவிசங்கர். அப்படியே மன்மதனின் கரும்பு வில், பஞ்சபாணங்களைப் பற்றியும் சொல்லுங்கள். :-)

said...

அன்புக் குமரா!
அவள் கருணை மிக்கவளான படியால் தான் பல தவறு செய்தும் நம்மையும்
அணைக்கிறாள் தாயுள்ளத்துடன்..
அதனால் வேறு தஞ்சமில்லைதான்..