Thursday, October 18, 2007

சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே (பாடல் 60)


பாலினும் சொல் இனியாய் பனி மாமலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே

பாலினும் சொல் இனியாய் - பாலை விட இனிமையான பேச்சினை உடையவளே!

பனி மாமலர்ப் பாதம் வைக்க - உன் குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளை வைக்க

மாலினும் - திருமாலை விட
தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின் மேலினும் - எல்லாத் தேவர்களும் வணங்க நின்றவனாம் சிவபெருமானின் கொன்றை மலர் அணிந்த அழகிய சடை முடியை விட

கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு நாலினும் - கீழே நின்று உன் புகழ் பாடும் நான்கு வேத பீடங்களை விட

சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே - நாயேனாகிய அடியேனின் முடை நாற்றம் வீசும் தலை சால நன்றாகியதோ? (விரும்பி என் தலை மேல் உன் திருவடிகளை வைத்தாயே?!)

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பாலரையே என்று நிறைவு பெற்றது. இந்தப் பாடல் பாலினும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் நாய்த்தலையே என்று நிறைய நாயேனையும் என்று அடுத்தப் பாடல் தொடங்குகிறது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பாலினும், மாலினும், மேலினும், நாலினும்

மோனை: பாலினும் - பனி - பாதம், மாலினும் - வணங்க - வார்சடையின், மேலினும் - மெய்ப்பீடம், நாலினும் - நன்றோ - நாய்த்தலையே

9 comments:

said...

//மாலினும் - திருமாலை விட

தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின் மேலினும் - எல்லாத் தேவர்களும் வணங்க நின்றவனாம் சிவபெருமானின் கொன்றை மலர் அணிந்த அழகிய சடை முடியை விட //

குமரன்,

'விட' என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா ?

said...

//குமரன்,

'விட' என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா ?//

அபிராமி அன்னையைப் புகழும் இந்தப் பாடலைப் பொறுத்த வரை எனக்கு உடன்பாடு உண்டு. பிரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் (பிரம்மனாலும் திருமாலாலும் தேவர்களாலும் அர்ச்சிக்கப்படும் லிங்கம்) என்று லிங்காஷ்டகத்தில் வரும் போதும் எனக்கு உடன்பாடு உண்டு. ச சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌலிமணே (நான்முகன், அறுமுகன், ஐந்துமுகன் - சிவன், தேவர்களில் முதன்மையான இந்திரன் என்று எல்லா தேவர்களின் திருமுடியிலும் இருக்கும் மணி போன்றவனே) என்று வெங்கடேச ஸ்தோத்திரத்தில் வரும் போதும் எனக்கு உடன்பாடு உண்டு.

அந்த அந்த தெய்வங்களைப் புகழும் போது அப்படி புகழுவது மரபு என்பதால் எனக்கு உடன்பாடு உண்டு. அதெல்லாம் புரிந்து கொள்ளாமல் சமயச் சண்டைகள் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லவே இல்லை.

நன்றி கோவி. கண்ணன்.

said...

விளக்கத்துக்கு நன்றி !

திருமாலைவிட சிவன் உயர்ந்தவன் என்ற இருப்பதால் கேட்டேன்.

said...

கோவி.கண்ணன். பாடலை இன்னொரு முறை படியுங்கள். திருமாலை விட சிவபெருமானை விட வேதங்களை விட அன்னை அபிராமி உயர்ந்தவள் என்ற கருத்து இருப்பதாகத் தான் தெரிகிறது. இம்மூன்று உயர் நிலைகளை விட அடியேன் நாற்றமெடுத்த முடைத்தலையை விரும்பித் திருவடிகளை அங்கே வைத்தாயே உன் கருணை தான் என்னே என்ற வியப்பும் தோன்றுகிறது. அபிராமி பட்டர் அபிராமி அன்னையைப் போற்றும் போது இப்படித் தான் சொல்ல வேண்டும். எல்லாத் தேவர்களையும் பெற்றவளே என்று சொல்லவேண்டும். அப்படி அவர் சொல்வதில் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை.

சாரே ஜஹாங் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா என்னும் போதும், பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்னும் போதும், செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்னும் போதும், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்னும் போதும், யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமி தனில் யாங்கணுமே கண்டதில்லை என்னும் போதும் இதே போன்ற உணர்வுகள் தான் சொல்லப்பட்டிருக்கின்றன.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மெய்யுணர்வு தோன்றும்'.

said...

//அந்த அந்த தெய்வங்களைப் புகழும் போது அப்படி புகழுவது மரபு என்பதால் எனக்கு உடன்பாடு உண்டு.//

உடன்படுகிறேன். ஆனால்...

//அதெல்லாம் புரிந்து கொள்ளாமல் சமயச் சண்டைகள் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லவே இல்லை.//

... சமய சண்டை செய்யும் சமயம் தான் பல கருத்துக்கள், சம்பவங்கள் வெளிவருகின்றன. சமய போர் செய்தவர்கள் இன்று ஆழ்வார்களாக, நாயன்மார்களாக, தீட்சிதர்களாக புகழுடல் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

நான்கு யுகங்களிலும் பிறந்த ஸ்ரீராகவேந்திரரும் பாண்டி நாட்டில் "சமய சொற்போர்" புரிந்ததாக படித்துள்ளேன். (சகலகலா வித்தகர் என்ற பட்டமும் பெற்றார்.)

said...

அவளின் பெருமையை நோக்க நாம் எவ்வளவு சிறியவர்கள் என்ற மெய்யுணர்வு தோன்றும் என்ற பயன் இந்தப் பாடலுக்கு மிக்கப் பொருத்தம் சிவமுருகன். மிக்க நன்றி.

said...

குமரா!
நாற்ற மெடுக்கும் தலையானாலும் பெற்ற தாய்க்குப் பிள்ளையின் தலையே பிரியமான தலை..
இவளோ உலக மாதா...
ஆச்சரியமில்லை

said...

உண்மை தான் ஐயா. உலகன்னை என்ற வகையில் அவள் கருணை நம் தலையில் அவள் திருவடிகளை வைக்க அனுமதிக்கிறது. ஆனால் அவள் பெருமையை நோக்க நம் தலை எத்தனை தாழ்வானது என்று தன் தாழ்வை முன்வைக்கிறார் அபிராமி பட்டர்.