Sunday, October 28, 2007

கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே (பாடல் 62)


தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே

தங்கச் சிலை கொண்டு - பொன்மலையாம் மேரு மலையே வில்லாகக் கொண்டு

தானவர் முப்புரம் சாய்த்து - திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும் சிரித்தெரி கொளுத்தி

மத வெங்கண் கரி உரி போர்த்த - மதத்தால் சிவந்த கண்களைக் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட

செஞ்சேவகன் - சிவந்தவனாம் சிவபெருமானின்

மெய்யடையக் - திருமேனியை அடைய

கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி - கொங்கையெனும் அம்பினைக் குறி வைத்த தலைவியே!

கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே - சிறந்த பொன்னைப் போல் சிவந்தத் திருக்கையில் இருக்கும் கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் எப்போதும் என் தியானத்தில் இருக்கின்றன.

***

திரிபுர அசுரர்களின் முப்புரத்தை மேரு எனும் பொன் வில் கொண்டு சிரித்தெரிக் கொளுத்தியும் கஜமுகாசுரனைக் கொன்று தோலை உரித்து அணிந்தும் பெருமை கொண்ட சிவந்தவன் உன் கையில் இருக்கும் மதனின் கரும்பு வில்லிலும் மலர் அம்புகளிலும் அந்த அம்புகளை விட மென்மையான உன் கொங்கைகள் எனும் மலர்க் கணையால் உன்னை தன் திருவுடலின் பாதியாகக் கொண்டான். அப்படிப் பெருமை கொண்ட உன் கையில் இருக்கும் கரும்பிலும் மலரிலும் என் மனம் நிற்கிறது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தங்கச்சியே என்று நிறைய இந்தப் பாடல் தங்கச்சிலை என்று தொடங்கியது. இந்தப் பாடல் சிந்தையதே என்று நிறைய அடுத்தப் பாடல் தேறும்படி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தங்கச்சிலை, வெங்கண், கொங்கை, செங்கை

மோனை: தங்கச்சிலை - தானவர், கொங்கை - குரும்பை - குறியிட்ட - கோகனக, செங்கை - சிந்தையதே.

9 comments:

said...

அருமையாக இருக்கு விளக்கம்.
நன்றி.

said...

"சதுர்பாஹீ ஸமன்விதா" என்கிறது சஹஸ்ரநாமம். இங்குதான் அன்னையின் ரூப லாவண்ய வர்ணனை ஆரம்பம். இதை செளந்தர்ய லஹரி 4ஆம் ஸ்லோகத்தில் விளக்கியிருக்கிறார் சங்கரர்.

அன்னையின் கையில் இருக்கும் நான்கு ஆயுதங்களை சொல்லும்போது பின்வருமாறு கூறுகிறது சஹஸ்ர நாமம்.

மனோரூபேக்ஷீ கோதண்டா
பஞ்சதன்மாத்ர ஸாயகா.

இதனை தனிப்பதிவாக இடுகிறேன் குமரன்.

said...

//கோகனகச் செங்கைக் கரும்பும்//

கோகனகம்=கொஞ்சம் விளக்கம் தாங்க குமரன்!

//செஞ்சேவகன்//
அது என்ன செஞ்சேவகன்
செம்மை+செம்மை+அகன்?
இரண்டு செம்மைகளா?

said...

கட்டாயம் தனிப்பதிவாக இடுங்கள் மௌலி. சௌந்தர்யலஹரி, லலிதா சஹஸ்ர நாமம், அபிராமி அந்தாதி மூன்றையும் ஒரே நேரத்தில் படித்தால் ஒருவர் சாக்தராகி விடுவார் என்று நினைக்கிறேன். அன்னையின் பெருமைகளை இரு மொழிகளிலும் படித்து இரசிக்கலாம்.

said...

இரவிசங்கர்,

இவை அறிந்தே கேட்கும் கேள்விகளா? :-)

கோ கனகம் - மிக உயர்ந்த பொன்

செஞ்சேவகன் - சிவந்த, சேவை செய்பவன்; சிவந்த வீரன்;

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'எத்தகைய அச்சமும் அகலும்'.

said...

நன்றி சிவமுருகன்.

said...

குமரா!
அம்பிகையின் சிவனை செங்சேவகன்-
சேவகன் அதாவது சேவை செய்பவன்
என்பதற்கு சிறப்புக் காரணம் ஏதாவது
உண்டா??

said...

யோகன் ஐயா. சேவகன் என்பதற்குப் படைவீரன்; சேவை செய்பவன் என்று இரண்டு பொருள் உண்டு. இங்கே சேவை செய்பவன் என்பதை விட வீரன் என்ற பொருள் பொருந்தும் என்று நினைக்கிறேன். மேரு என்னும் வில்லைக் கொண்டு முப்புரம் எரித்து மதயானையின் தோலைப் போர்த்திய சிவந்த சேவகன் என்னும் போது வீரன் என்பது பொருந்தும் பொருள்.

அடுத்த வரிகளில் அம்மையின் திருமேனி அழகையும் காமன் அம்புகளையும் பேசியதால் அம்மைக்குச் சேவை செய்யும் செஞ்சேவகன் என்றாலும் சரியே.