Sunday, January 28, 2007

சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே (பாடல் 27)




உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே

உடைத்தனை வஞ்சப்பிறவியை - என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான ஆசை, சினம், மயக்கம், பேராசை, செருக்கு, வெறுப்பு ஆகியவற்றை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணிப்பை உடைத்தாய்.

உள்ளம் உருகும் அன்பு படைத்தனை - உன்னையும் உன் அன்பையும் எண்ணி எண்ணி உருகும் அன்பினை என்னுள் உண்டாக்கினாய்.

பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை - தாமரை போன்றை உன் இரு திருவடிகளையே பணிந்து கொண்டிருக்கும் பணியே பணியாய் எனக்கு அளித்தாய்.

நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை - என் உள்ளத்தே இருந்த அழுக்குகளை எல்லாம் உன் அருள் எனும் நீரால் துடைத்தாய்.

சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே - அழகியே! இப்படி அடியேனை தானாக வந்து ஆட்கொண்ட உன் அருளை என்னவென்று புகழுவேன்?

கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே (பாடல் 26)



ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம் - உன்னை என்றும் போற்றிப் புகழ்பவர்கள் யார் என்று கேட்டால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிகின்ற மும்மூர்த்திகளான பிரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள்.

கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே - மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே!

மணம் நாறும் நின் தாளிணைக்கு - தேவர்களில் எல்லாம் சிறந்தவர்களான மும்மூர்த்திகளாலும் போற்றிப் புகழப்பட்டு அந்தப் புகழ் மணம் கமழும் உன் இணைத்தாள்களுக்கு

என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே - என் நாவில் இருந்து தோன்றிய கீழான சொற்கள் புகழ்ச்சியாகப் போனது நல்ல நகைச்சுவை.

முதல் மூவரும் போற்றும் திருவடிகளுக்கு கீழான எனது பாடல்களும் அணிகலன்களாகப் போனது தான் என்ன வியப்பு? அன்னையின் எளிவந்த தன்மை தான் என்னே? என்று வியக்கிறார் பட்டர்.

Wednesday, January 10, 2007

இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே! (பாடல் 25)



பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் - உன் அடியவர்களின் பின்னால் திரிந்து அவர்களை அடி பணிந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து என் பிறப்பிறப்புத் துன்பத்தை அறுத்துக் கொள்ளும் பாக்கியத்தை பலகாலமாக செய்தத் தவங்களின் பயனால் அடைந்தேன்.

முதல் மூவருக்கும் அன்னே - முதல் மூவரான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே!

உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே - அபிராமி அன்னை என நிற்கும் உலகத் துன்பங்களுக்கெல்லாம் கிடைத்தற்கு அரிய மருந்தே
என்னே - என்னே உன் பெருமைகள்.

இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே - இனியும் உன்னை நான் மறக்காமல் தொழுது கொண்டிருப்பேன்.

மணியே! மணியின் ஒளியே! (பாடல் 24)



மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

மணியே - மாணிக்க மணியே!

மணியின் ஒளியே - மாணிக்க மணியின் ஒளியே!

ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி வீசும் அந்த மாணிக்கங்கள் இழைத்த அணிகலனே!

அணியும் அணிக்கு அழகே - அணியும் அந்த அணிகலனுக்கு அழகாகத் திகழ்பவளே!

அணுகாதவர்க்குப் பிணியே - நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!

பிணிக்கு மருந்தே - உன்னை வணங்குபவர்களுக்கு அவரவர் வினைப்பயனால் ஏற்படும் பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகி நிற்பவளே!

அமரர் பெருவிருந்தே - அமரர்கள் என்றும் வணங்கி ஏத்தி மகிழும் படி அமைந்தவளே!

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - உன் திருமலர்ப் பாதங்களைப் பணிந்த பின் வேறெந்த உலக இன்பத்தையும் வேண்டி நில்லேன்.

***

உலக இன்பம் வேண்டி அல்லவா இறையை அன்றி மற்றவற்றையும் மற்றவர்களையும் பணிவது? உன்னைப் பணிந்த பின் மற்றவரைப் பணியேன் என்றது உலக இன்பங்கள் உன்னைப் பணிந்தததால் தானே கிடைக்கும்; அதனால் இறையைத் தவிர மற்றவரைப் பணியும் தேவை இல்லை என்பதைச் சொல்லியது.

Friday, December 29, 2006

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது! (பாடல் 23)


கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது - உன் திருவுருவத்தை அன்றி வேறு உலக விதயங்களை என் மனத்தில் கொள்ளேன்

அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் - உன் அன்பர்கள் கூட்டத்தை விலகமாட்டேன் (விலக்கமாட்டேன்)

பரசமயம் விரும்பேன் - உன்னைத் துதிப்பதன்றி உலக விதயங்களைத் துதிக்கும் பர சமயங்களை விரும்ப மாட்டேன்.

வியன் மூவுலகுக்கு உள்ளே - மூன்று உலகங்களுக்கும் உள்ளே நின்று அனைத்தையும் இயக்குபவளே

அனைத்தினுக்கும் புறம்பே - இவற்றையும் தாண்டி இந்த பிரபஞ்சம் எல்லாம் தாண்டியும் இருப்பவளே

(அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவளே)

உள்ளத்தே விளைந்த கள்ளே - உள்ளத்தில் விளைந்த அமுதமே

களிக்கும் களியே - எல்லாவிதமான இன்பததையும் அனுபவிக்கும் ஆனந்தவடிவானவளே

அளிய என் கண்மணியே - எளியேன் மேல் கருணை கொண்ட என் கண்மணி போன்றவளே

கொடியே இளவஞ்சிக் கொம்பே (பாடல் 22)



கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

கொடியே - கொடி போன்றவளே!

இளவஞ்சிக் கொம்பே - இளமையான வஞ்சிக் கொம்பே!

எனக்கு வம்பே பழுத்த படியே - தகுதியில்லாத எனக்குத் தானே காலமில்லாத காலத்தில் பழுத்த பழம் போல் அருள் செய்தவளே!

மறையின் பரிமளமே - வேதங்களின் மணமே!

பனி மால் இமயப் பிடியே - பனி உருகும் இமயத்தில் இருக்கும் பெண் யானையே!

பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே - பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற அன்னையே!

அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே - அடியேன் இப்பிறவி முடிந்து இறந்த பின் மீண்டும் இங்கே வந்து பிறக்காத படி உன் அடி நிழலைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்.

Sunday, October 01, 2006

மங்கலை செங்கலசம் முலையாள் (பாடல் 21)



மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே

மங்கலை - மங்கல உருவானவளே. என்றும் சுமங்கலியே.

செங்கலசம் முலையாள் - செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவளே.

மலையாள் - மலைமகளே. இமயத்தரசன் மகளே.

வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில் - வருணனின் இருப்பிடமான கடல் தந்த சங்குகளால் ஆன வளையல்கள் அணிந்து அவை அங்கும் இங்கும் அலையும் செம்மையான கைகளை உடைய எல்லா கலைகளும் அறிந்த மயிலே

தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் - பாய்கின்ற கங்கையின் பொங்குகின்ற அலைகள் தங்கும் மேல்தூக்கி முடித்த சடையை உடையவனின் பகுதியானவளே

உடையாள் - எல்லோருக்கும் தலைவியே. எல்லோரையும் எல்லாவற்றையும் உடையவளே.

பிங்கலை - பொன்னிறத்தவளே.

நீலி - நீல நிறத்தவளே. கரு நிறத்தவளே.

செய்யாள் - சிவந்தவளே.

வெளியாள் - வெண்மை நிறம் கொண்டவளே.

பசும் பெண்கொடியே - பச்சை நிறம் கொண்ட பெண் கொடியே.

***

இந்தப் பாடல் முழுக்க முழுக்க தோத்திரமாகவே அன்னையில் புகழைப் பாடுவதாகவே அமைந்திருக்கிறது.

உலகத்தில் எத்தனையோ குணநலன்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிறம் தந்து உருவகித்துப் பேசுவது மரபு. அந்த எல்லா குணநலன்களும் அன்னையே; அவளிடமிருந்து தோன்றியவையே என்று குறிப்பால் உணர்த்தும் முகமாக அபிராமி பட்டர் அன்னையை 'பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே' என்கிறார் போலும்.