
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
நாயகி - உலகனைத்துக்கும் தலைவி
நான்முகி - நான்முகனான பிரம்மதேவரின் சக்தி
நாராயணி - நாராயணனின் சக்தி
கை நளின பஞ்ச சாயகி - தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்
சாம்பவி - சம்புவான சிவபெருமானின் சக்தி
சங்கரி - இன்பம் அருள்பவள்
சாமளை - பச்சை வண்ணமுடையவள்
சாதி நச்சு வாய் அகி - கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள்
மாலினி - பலவிதமான மாலைகளை அணிந்தவள்
வாராகி - உலகங்கள் காக்கும் வராக ரூபிணி
சூலினி - திரிசூலம் ஏந்தியவள்
மாதங்கி - மதங்க முனிவரின் திருமகள்
என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - என்று பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும்.
அம்மையின் திருப்பெயர்கள் பலவற்றைக் கூறி அவளைத் துதித்து அவள் திருவடிகளே நமக்குக் காவல் என்கிறார்.
***
அருஞ்சொற்பொருள்:
நளினம் - வடமொழியில் தாமரை
பஞ்ச - வடமொழியில் ஐந்து
சாயகம் - வடமொழியில் அம்பு
சம்பு, சங்கர - சம் = இன்பம்; பு = பிறப்பிடம்; கர = செய்பவன்; ஆக சம்பு, சங்கரன் என்னும் போது இன்பத்தின் பிறப்பிடம், இன்பத்தைத் தருபவன் என்று பொருள்; சாம்பவி, சங்கரி அவற்றிற்குப் பெண்பால். இவையும் வடசொற்களே.
சாமளை - ஷ்யாமளை என்னும் வடசொல் - பச்சைநிறத்தவள்
கியாதி - க்யாதி என்னும் வடசொல் - புகழ்.
அந்தாதித் தொடை: நாயகியே என்று சென்ற பாடல் நிறைவடைந்தது. நாயகி என்று இந்தப் பாடல் தொடங்கியது. அரண் நமக்கே என்று இந்தப் பாடல் நிறைகிறது. அரணம் என்று அடுத்தப் பாடல் துவங்கும்.
எதுகை: நாயகி, சாயகி, வாயகி, ஆயகியாதி
மோனை: நாயகி - நான்முகி - நாராயணி - நளின, சாயகி - சாம்பவி - சங்கரி - சாதி, வாயகி - வாராகி - மாதங்கி, ஆய - அரண்.