Tuesday, April 24, 2007
படரும் பரிமளப் பச்சைக்கொடி (பாடல் 48)
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றி
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் - சுடர் வீசும் நிலாத்துண்டு தங்கி வாழும் சடைமுடியை உடைய சிறு குன்று போன்ற சிவபெருமானின் மேல்
ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் - ஒன்றிப் படர்கின்ற மணம்வீசும் பச்சைக் கொடியைப் போன்ற அம்மையை
பதித்து நெஞ்சில் - மனத்தில் நிலையாகக் கொண்டு
இடரும் தவிர்த்து - இன்ப துன்பங்கள் என்ற இடர்களைத் தவிர்த்து
இமைப்போது இருப்பார் - இமைப்பொழுதாகிலும் தியானத்தில் இருப்பார்
பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே - குடலும் இறைச்சியும் குருதியும் தோயும் இந்த உடம்பை மீண்டும் எய்துவார்களா? மாட்டார்கள்.
***
ஐயன் சிவந்தவன். உயர்ந்தவன். சடைமுடியை உடையவன். நிலவை அணிந்தவன். இவற்றை எல்லாம் பார்த்தவுடன் அபிராமிபட்டருக்கு கொடுமுடியில் நிலாப்பிறையைக் கொண்ட சிறு குன்று நினைவிற்கு வந்தது போலும். அந்தக் குன்றில் படர்ந்த மணம்வீசும் பச்சைக் கொடி போல் அம்மை இருக்கிறாள். பொருத்தமான உவமைகள்.
அழகிய காட்சிகளை மனத்தில் நிறுத்துவது எளிது. சிறு குன்றில் படர்ந்த பச்சைக் கொடி என்பது மிக அழகிய காட்சி தானே. அந்த அழகிய காட்சியை ஒரு நொடியேனும் மனச்சலனமின்றி மனத்தில் நிறுத்த வல்லார்கள் மீண்டும் பிறப்பிறப்பு என்ற சுழலில் அகப்பட மாட்டார்கள் என்பது பட்டரின் அறிவுரை. செவி சாய்ப்போம்.
***
அருஞ்சொற்பொருள்:
துன்றும் - தங்கும்
பரிமளம் - நறுமணம்
குடர் - குடல்
கொழு - இறைச்சி
குருதி - இரத்தம்
குரம்பை - உடல்
அந்தாதித் தொடை: சுடர்கின்றதே என்று நிறைந்தது சென்ற பாடல். சுடரும் என்று தொடங்கிற்று இந்தப் பாடல். குரம்பையிலே என்று முடிந்தது இந்தப் பாடல். குரம்பை அடுத்து என்று தொடங்கும் அடுத்தப் பாடல்.
எதுகை: சுடரும், படரும், இடரும், குடரும்
மோனை: சுடரும் - துன்றும் - சடைமுடி, படரும் - பரிமள - பச்சைகொடி - பதித்து, இடரும் - இமைப்போது - இருப்பார் - எய்துவரோ, குடரும் - கொழுவும் - குருதியும் - குரம்பையிலே.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
////அழகிய காட்சிகளை மனத்தில் நிறுத்துவது எளிது. சிறு குன்றில் படர்ந்த பச்சைக் கொடி என்பது மிக அழகிய காட்சி தானே. அந்த அழகிய காட்சியை ஒரு நொடியேனும் மனச்சலனமின்றி மனத்தில் நிறுத்த வல்லார்கள் மீண்டும் பிறப்பிறப்பு என்ற சுழலில் அகப்பட மாட்டார்கள் என்பது பட்டரின் அறிவுரை. செவி சாய்ப்போம்.///
கேட்ட பாடல்தான் என்றாலும் பொருள் விளக்கத்துடன் படிக்கும்போது நன்றாக - மனதைத் தொடும்படி உள்ளது!
பட்டரின் அறிவுரை. செவிசாய்ப்போம்
என்று நீங்கள் சொன்னதும் சிறப்பாக
இருக்கிறது நண்பரே!
சுடருக்குள் ஒளிரும்
ஒளிச்சுடர் போல்
சிவலிங்கத்துள் ஒளிரும்
அன்னை ஒளிச் சக்தி.
அருள் நிறைந்த அழகிய படம். நன்றி.
பாராட்டிற்கு நன்றி வாத்தியார் ஐயா.
ஐயா. அருமையான பின்னூட்டங்கள் இடும் நீங்கள் தங்கள் பெயரையும் சொல்லுங்கள் ஐயா. அனானிமஸ் முறையில் தங்கள் பின்னூட்டத்தை இட்டாலும் தங்கள் பெயரையும் சொன்னால் நன்றி கூறுவதற்கும் மேற்கொண்டு பேசுவதற்கும் எளிதாக இருக்கும்.
எனக்கும் இந்தப் படம் ரொம்ப பிடித்தது. குன்றும் பச்சைக்கொடியும் என்று படித்தவுடன் நினைவிற்கு வந்த படம் இது தான்.
நல்ல விளக்கம் குமரன். அருமையான பாடல். இங்கு "சடைமுடிக் குன்றில் ஒன்றி படரும்" என்று இருக்கிறதே. ப் விடுபட்டதா?
இந்தப் பாடலில் ஒன்று கவனிக்க வேண்டும். பிறப்பு இறப்பு தவிர்ப்பது என்று வருகையில் ஐயனையும் ஐயையையும் இணைத்துச் சொல்லியிருக்கிறார்கள். பொதுவில் அப்படிச் சொல்லும் வழக்கம் உண்டு. அப்படியில்லாமல் அம்மையை மட்டும் வைத்து பிறவியறுக்கும் பாடல் உண்டா? முருகனை மட்டும் வைத்து உண்டு. ஏனென்றால் அம்மையப்பனுக்கும் அவருக்கும் வேறுபாடில்லை என்கிறது தமிழ்.
நல்ல கேள்வி இராகவன். செய்யுட்களில் ஒரு அடியிலிருந்து மறு அடிக்கு ஒற்று மிகாமலேயே பாடங்கள் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். பல பாடல்களில் அதனைப் பார்த்திருக்கிறேன். இங்கேயும் அப்படியே இருந்தது. அப்படியே எழுதிவிட்டேன். பொருள் சொல்லும் போது ஒற்று மிகும்படி பார்த்துக் கொண்டேன்.
அம்மையை மட்டும் வைத்துப் பிறப்பறுக்கும் பாடலோ ஐயனை மட்டுமே வைத்துப் பிறப்பறுக்கும் பாடலோ இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது இராகவன். ஆனால் வைணவத்தில் பெருமாளும் திருமகளும் இருவருமே இணைந்தே இருந்து பிறவிப்பிணி தீர்ப்பார்கள் என்று சொல்வதையும் மாலவனை அதனாலேயே திருமால் என்றே எப்போதும் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் அழைப்பார்கள் என்று சொல்வதையும் அறிவேன். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் அது நினைவிற்கு வந்தது.
அம்மையப்பனுக்கும் தம்பிக்கும் வேறுபாடு இல்லை என்று சொன்னதை அண்ணன் அறியார் போலும். இல்லையேல் தம்பியைச் சுற்றியே பழத்தைப் பெற்றிருப்பாரே; தம்பியும் கோவணாண்டி ஆகவேண்டியிருந்திருக்காது. :-)
//தங்கள் பெயரையும் சொன்னால் நன்றி கூறுவதற்கும் மேற்கொண்டு பேசுவதற்கும் எளிதாக இருக்கும்.//
குறை எண்ண வேண்டாம். அருவ அனானியாகவே இருக்க விரும்புகிறேன்,
ஆண்டவன் பெருமை பேச பெயர் அவசியமில்லை அன்றோ!
மன்னிக்க வேண்டும்.
இறைவன் திருப்பெயரைக் கூற பெயர் அவசியம் இல்லை தான் நண்பரே. தங்கள் எண்ணத்தைக் கூறியதற்கு நன்றி.
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'சரீரப் பற்று நீங்கும்'.
பின்னும் எய்துவரோ என்றதால் 'சரீரப் பற்று நீங்கும்' என்ற பயன் பொருத்தமானது. நன்றி சிவமுருகன்.
Post a Comment