Friday, April 20, 2007

யானுன்னை வாழ்த்துவனே (பாடல் 46)



வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் - வெறுக்கும் செயல்களைச் செய்துவிட்டாலும்

தம் அடியாரை - தம் அடியவர்களை

மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே - பெரியவர்கள் பொறுத்துக் கொள்ளும் செயல் புதியது இல்லையே.

புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே - அப்போதே தோன்றிய ஆலால விடத்தை உண்டு அதனால் கறுக்கும் திருத்தொண்டையை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் கலந்த பொன்மகளே

மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே - நான் தகாத வழியில் செல்பவன்; ஆயினும் யான் உன்னை எப்போதும் வாழ்த்துவேனே.

***

பொருள் விளக்கம் தேவையில்லை. மிக எளிமையான பாடல் இது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வெறுக்கை அன்றே என்று முடிந்தது. இந்தப் பாடல் வெறுக்கும் தகைமைகள் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வாழ்த்துவனே என்று முடிகின்றது. அடுத்தப் பாடல் வாழும்படி என்று தொடங்கும்.

எதுகை: வெறுக்கும், பொறுக்கும், கறுக்கும், மறுக்கும்.

மோனை: வெறுக்கும் - மிக்கோர், பொறுக்கும் - புதியது - புது, கறுக்கும் - கலந்த, மறுக்கும் - வாழ்த்துவனே.

23 comments:

said...

இன்றுதான் சமயபுரம் அம்மாவை நினைத்தேன்.

நீங்கள் படம் போட்டுவிட்டீர்கள்.
நன்றி குமரன்.
அடித்தாலும் அணைக்கும் தாய்.

அவள் வெறுக்கும்படியான காரியங்கள் செய்யாமல் பிழைக்க வேண்டும்.

said...

சமயபுரத்தாளைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளம் சிலிர்க்குமே. நானும் நேற்று தான் அன்னையை நினைத்துக் கொண்டு அவள் திருவுருவத்தைப் பார்க்க இணையத்தில் தேடினேன் அம்மா. அப்போது தரிசனம் தந்தவள் தான் இந்த இடுகையில் இருக்கிறாள்.

said...

நல்லதொரு பாடல். நல்லதொரு விளக்கம். இந்தப் பாடலைப் படிக்கையில் ஏன் புது நஞ்சை உண்டு என்று எழுதியிருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன். இப்படித் தோன்றியது. நஞ்சு என்பது கொல்வது. அதாவது நமக்குத் தீயது. நமக்குத் தீயவைகள் ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக வருகிறதல்லவா. அந்தப் புதிய நஞ்சுகளைத் தானுண்டு எப்பொழுதும் நமைக் காக்கத் தானுண்டு என்கிறாரே அந்தப் பெருந்தகை. ஆகையால் புது நஞ்சை உண்டு என்று சொல்வது பொருத்தமே என்று முடிவுக்கு வந்தேன்.

said...

அபிராமி தாயின் குணத்தைப்பற்றிய அழகிய பாடலுக்கு நன்றி குமரன்.

கோழி மிதித்து குஞ்சு சாகுமா? அம்மா அடித்து பிள்ளை கெடுமா?

said...

அபிராமி பட்டரே 'வெறுக்கும் தகைமைகள்" செய்பவர் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு!!

அவள்தான் காப்பாற்றணும்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'எல்லாவிதமான நடத்தை தோஷங்களும் தீரும்'.

said...

நல்லதொரு விளக்கம். நன்றி இராகவன்.

said...

உண்மை செல்வன். கோழி மிதித்து குஞ்சிற்கு ஒன்றும் ஆகாது தான். ஆனால் அவள் அதே நேரத்தில் உலகங்களுக்கெல்லாம் உயர்தலைவியாக இருக்கிறாளே. மனு நீதி காத்த சோழனைப் போல் ஏதாவது செய்துவிட்டால்?

said...

எஸ்.கே. ஆழ்வார்களும் இப்படி மற்றவர் குறைகளைத் தம் மேல் ஏற்றிக் கூறிக் கொள்வார்கள். அப்படி அவர்கள் பாடும் போது நமக்காக இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள் என்று வியாக்கியானம் செய்வார்கள் பெரியோர்கள். அதே முறை தான் இங்கும் என்று நினைக்கிறேன். அவர் அடியவர் - வெறுக்கும் தகைமைகள் செய்யாதவர். ஆனால் அடியாரல்லாத, வெறுக்கும் தகைமைகள் செய்யும் என் போன்றோர் மேல் கருணை கொண்டு எனக்காக இறைவியிடம் இறைஞ்சுகிறார் பட்டர்.

said...

வெறுக்கும் தகைமைகளைப் பற்றி பேசியதால் 'நடத்தை தோஷங்கள் தீரும்' என்ற பலன் பொருத்தம். நன்றி சிவமுருகன்.

said...

சமயபுரம் அம்மாவை முதல் தரம் பார்த்தபோது பயந்தேன்.

பிறகு பார்க்கப் பார்க்க அவள் அசைவது போலவும், அருள் புன்னகை சிறிதே அளவு சிந்துவதும்
மறுக்க முடியாதபடி நடக்கும்.
அந்த நினைவை
மாயை,சாம்பிராணிப் புகை,கற்பூரத்தின் தோற்றம் என்று யார் என்ன சொன்னாலும் எனக்கு அவள் நிதரிசனமான தாய்.

said...

உண்மை தான் அம்மா. பெரிய உருவுடன் தலை மாலை அணிந்து நெருப்புத் திருமுடியுடன் செந்தூரத் திருமுகத்துடன் அவளைப் பார்க்கும் போது ஒரு பயம் கலந்த மரியாதை வரும். ஆனால் அவள் கண்களைப் பார்த்தபின் அவள் திருவுருவம் கருணையின் முழு உருவமாகி நம்மிடம் பேசுவாள். அடியேனுக்கும் அந்த அனுபவங்கள் உண்டு. அண்ணனைப் பார்த்துவிட்டு நேரே தங்கையைப் பார்க்கத் தான் போவேன். :-)

said...

///அபிராமி பட்டரே 'வெறுக்கும் தகைமைகள்" செய்பவர் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு!!
அவள்தான் காப்பாற்றணும்.
///

சத்தியமான வார்த்தைகள்!

பதிவிற்கும், பாடலை அழகியதொரு விளக்கத்துடன் தந்தமைக்கும் நன்றி உரித்தாகுக குமர்ரனாரே!

said...

சமயபுரத்தாளின் திருவுருவப் படத்தோடு அருமையான பாடலும் விளக்கமும்.

அம்மா, உன் கணவன் கொதிக்கக் கொதிக்க ஆலகால நஞ்சைத் தான் உண்டு தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கச் செய்தவன். அப்படிப்பட்டவனது இடப்பாகத்தில் நிற்கும் நீ என் தவறுகளுக்காக என்னை வெறுக்கலாகுமோ ?
அது உனக்கு அழகா ? அரிசினத்தால் ஈன்ற தாய் அடிப்பதுண்டு, ஆனால் தன் பிள்ளையை வெறுப்பதுண்டோ ?

said...

நன்றி வாத்தியார் ஐயா.

said...

நல்ல விளக்கம் ஜெயஸ்ரீ

said...

குமரன்,
நல்ல நல்ல பாடல்களாக அறிமுகப்படுத்தி வருகிறீர்கள். மிக்க நன்றி. உங்களின் விளக்கமும் பின்னூட்டங்கள் மூலம் சக பதிவர்கள் சொல்லும் விடயங்களும் சுவையாக இருக்கின்றது.

said...

நன்றி வெற்றி. ஆமாம். பின்னூட்டம் இடும் நண்பர்களின் கருத்துகளின் மூலம் பல செய்திகளை அறிய முடிகிறது. அது நம் அதிட்டமே.

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

குமரா!
தாயிலும் சாலப் பரிவுடைவள், பொறு
ப்பாளா?? எம் தவறுகளை...பிழைத்தோம்..
நன்று

said...

உண்மை தான் ஐயா. இல்லையேல் என்னைப் போன்றவர்களுக்கு ஏது கதி?