Saturday, April 14, 2007
எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் (பாடல் 44)
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் - நமக்குத் தாயான இவளே எங்கள் சங்கரனாரின் மனை மங்கலம் - இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவள்.
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் - அவளே ஆதிபராசக்தி என்னும் உருவில் சங்கரனாருக்கு அன்னையும் ஆயினள்.
ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் - ஆதலால் இவளே கடவுளர் எல்லாருக்கும் மேலான தலைவியானவள்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே - இனி மேல் வேறு தெய்வங்களைத் தொழுது தொண்டு செய்து அயர்சி அடையமாட்டேன்.
***
அன்னை ஆதிபராசக்தியே ஆதிப்பரம்பொருள்; அவளே மும்மூர்த்திகளையும் படைத்து அவர்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்யும் வண்ணம் அவர் தம் சக்தியராய் தானே அமர்ந்தாள் என்பது சாக்த மரபு. அதனை இங்கே சொல்கிறார் பட்டர். ஒரே நேரத்தில் அன்னை சங்கரனாருக்கு மனைவியாகவும் அன்னையாகவும் இருக்கிறாள். அவள் எல்லா தெய்வங்களுக்கும் மேலை இறைவியும் ஆவாள்.
வேறு தெய்வங்கள் தரும் பயன்கள் எல்லாவற்றையும் அவர்களுக்கு ஆதியான அன்னை அருள்வாள்; அவற்றிற்கு மேலாக முக்தியையும் அவள் அருள்வாள் என்பதால் வேறு தெய்வங்களைப் பணிய வேண்டிய தேவை இல்லை என்பதையும் கடைசி அடியினில் சொல்கிறார்.
***
அந்தாதித் தொடை:
இருந்தவளே என்று சென்ற பாடல் நிறைவுற்றது. இந்தப் பாடல் தவளே என்று தொடங்கியது. இந்தப் பாடல் தொண்டு செய்தே என்று நிறைவுறுகிறது. அடுத்தப் பாடல் தொண்டு செய்யாது என்று தொடங்கும்.
எதுகை: தவளே, அவளே, இவளே, துவளேன் என்று அமைந்திருக்கிறது.
மோனை: தவளே - சங்கரனார் (தகரமும் சகரமும் மோனைகளாக அமையும்), அவளே - அவர் - அன்னை - ஆயினள் - ஆகையினால், இவளே - யாவர்க்கும் - இறைவியும் (இகரமும் யகரமும் மோனைகளாக அமையும்), துவளேன் - தெய்வம் - தொண்டு - செய்தே.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
தவளே என்பதற்குச் சரியான பொருள் தெரியவில்லை. தாயான இவளே என்று பொருள் கொண்டுள்ளேன். சரியான பொருள் என்ன என்பதை அறிந்தவர் சொல்லுங்கள்.
தாயான இவளே என்பதே சரியாகத் தோன்றுகிறதெ.
'தவ' என்று தனிச்சொல்
இருக்கிறதா.
சங்கரனார் மனை மங்கலம்//
சங்கரனும் மங்களம்
அவன் மனையாளும் மங்கலம்.
தவளே என்ற பெயருக்குப் பொருள் சொல்லல் மிக எளிது. சால உறு தவ நனி கூறு களி. தவளே என்பது பெரியவளே என்று பொருள்படும் இங்கு. ஆகையால்தான் அடுத்தடுத்த வரிகளில் அவள் எவ்வளவு பெரியவள் என்றும் கூறுகிறார் அபிராமி பட்டர்.
1. சங்கரனார் மனைவி
2. சங்கரனார்க்கும் தாய்
3. யாவர்க்கும் மேலை இறைவி
ஆகையால்தான் தொடங்குகையிலேயே தவளே என்றழைக்கிறார்.
சுக்கு, மிளகு, திப்பிலி என்பதை சுக்கிமி, ளகுதி, ப்பிலி என்று சொன்னது போல்தான் இதுவும்!
இருந்தவளே என்பது இருந்த அவளே எனப் பிரியும்.
இப்போது ,
"அவளே இவள்'
எனப் பாடிப் பாருங்கள்!
தவளே அல்ல; அவளே என்பது விளங்கும்!
செய்தே என்பது செய்யாதே என அடுத்த பாடலில் தொடங்குதல் போல!
குமரன்,
பாடலிற்கும் விளக்கத்திற்கும் நன்றி.
நானும் தவளே எனும் சொல்லுக்கு உங்களிடம் விளக்கம் கேட்க இருந்தேன்.
இப் சொல்லிற்கு மற்றவர்களின் விளக்கத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.
ஆமாம் வல்லியம்மா. சங்கரனும் மங்கலம். அவர் மனையாளும் மங்கலம்.
நல்ல விளக்கம் இராகவன். மிக்க நன்றி.
உரிச்சொற்களான சால, உறு, தவ, நனி, கூர், கழி எனக்கு நினைவிற்கு வரவில்லை. நினைவூட்டியதற்கு நன்றி.
எஸ்.கே. நான் இரண்டு மூன்று புத்தகங்களைப் பார்த்துவிட்டேன். அனைத்திலும் தவளே என்ற பாடமே இருக்கிறது. அவளே என்று தொடங்கினால் மோனை வரவே இல்லை. அதனால் தவளே என்பதே சரியான சொல் என்று தோன்றுகிறது.
நன்றி வெற்றி.
http://www.chennaionline.com/toursntravel/placesofworship/abiramianthathi.asp
இதைப் பாருங்கள்.
தவளே எனத் தொடங்கும் படிமங்களையும் பார்த்திருக்கிறேன்.
எனக்கு இதுவே [அவளே] சரியெனப் பட்டது.
கற்பித்து 'தவளே' என்பதற்கும் ஒரு பொருள் சொல்லிக் கொள்ள முடியும்.
அந்தாதி எழுதியவருக்கு இருந்த அவளே எனவோ இருந் தவளே எனவோ எடுத்துக் கொண்டு அடுத்த பாடலை எழுத வாய்ப்பிருக்கிறது!
எப்படியும் அறிஞர்கள் வந்து பொருள் சொல்லப் போகிறார்கள்!
சுட்டிக்கு நன்றி எஸ்.கே.
//தமக்கு அன்னையும் ஆயினள்//
படியளக்கும் ஈசனுக்கே அன்னமிட்ட கை என்பதால் அன்னபூரணியாய், அன்னையாகவும் ஆனாள்!
அருளில் தாயாகவும்
அன்பினில் மனைவியாகவும்
இருப்பதனால் தான் மனைமங்கலம் என்று சொன்னாரோ! குறளின் மனைமாட்சி தான் நினைவுக்கு வருகிறது!
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பேதபுத்தி நீங்கும்'.
நல்ல விளக்கம் இரவிசங்கர். நன்றி.
மற்றைத் தெய்வங்களைத் தொழத் தேவையில்லை என்றதால் பேத புத்தி நீங்கும் என்றார்கள் போலும். நன்றி சிவமுருகன்.
Post a Comment