
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி - உடலை அடிப்படையாகக் கொண்டு அதனில் குடிவந்த உயிர்
வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது - வெம்மையுடைய கூற்றுவன் (யமன்) வரும் கால அளவினை அடையும் போது
வளைக்கை அமைத்து - வளையல்கள் அணிந்த உன் திருக்கரங்களை அசைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து - அரம்பையைப் போன்ற பெண்கள் சூழ வந்து
அஞ்சல் என்பாய் - அஞ்சாதே என்று கூறுவாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே - நரம்பைக் கொண்டு இசை எழுப்பும் வீணையைப் போன்ற இசைக்கருவிகளின் இசை வடிவாய் நிற்கும் தலைவியே.
***
உடலில்லாமல் உயிர் இல்லை; உயிரில்லாமல் உடல் இல்லை. உடலை அடிப்படையாகக் கொண்டே உயிர் இயங்குகிறது. அந்த உடலும் உயிரும் இணைந்திருக்க ஒரு கால அளவு விதிக்கப்படுகிறது. அந்தக் கால வரம்பு வரை காலன் வருவதில்லை. அந்தக் கால வரம்பு முடிந்தவுடன் காலன் வரும் நேரத்தில் உயிர் இந்த உடலை விட்டுச் செல்ல பயந்து மறுகுகிறது. அந்த நேரத்தில் ஒரு நல்ல இசை கேட்டால் உயிருக்கு அந்த மரண வேதனை குறையும். இசையே வடிவாய் நிற்கும் அபிராமி அன்னை அந்த நேரத்தில் அழகில் சிறந்த மகளிர் சூழ வந்து தன் திருக்கரங்களை அசைத்து அஞ்சாதே என்று சொன்னால்? அந்த மரண பயமும் மரண வேதனையும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுமில்லையா? அதனால் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார் அபிராமி பட்டர்.
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் குரம்பையிலே என்று முடிந்தது. இந்தப்பாடல் குரம்பை அடுத்து என்று தொடங்கியது. இந்தப் பாடல் நாயகியே என்று முடிகிறது. அடுத்தப் பாடல் நாயகி என்று தொடங்கும். அடுத்த பாடல் பலருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான பாடல்.
எதுகை: முதல் இரண்டு சொற்களும் எதுகையாக அமைத்திருக்கிறார். குரம்பை அடுத்து - வரம்பை அடுத்து - அரம்பை அடுத்த - நரம்பை அடுத்து.
மோனை: குரம்பை - குடி - கூற்றுக்கு, வரம்பை - மறுகும் - வளைக்கை, அரம்பை - அடுத்த - அரிவையர் - அஞ்சல், நரம்பை - நின்ற - நாயகியே.
9 comments:
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மரணாவஸ்தை இல்லது ஒழியும்'.
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கும் இந்தப் பாடலுக்கு 'மரணாவஸ்தை இல்லாது ஒழியும்' என்ற பயன் பொருத்தமானது சிவமுருகன். மிக்க நன்றி.
குமரா!
இசைவடிவாகிய நாயகி....கலைமகளின் ஒரு உருவம் தானே அன்னை மிகப் பொருத்தம்.
ஆமாம் யோகன் ஐயா. நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே என்றவுடன் வீணையைத் தாங்கிய கலைமகள் தான் நினைவிற்கு வந்தாள். அதனால் தான் கலைமகளின் படம் இந்த இடுகையில்.
Post a Comment