Monday, April 16, 2007

பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே (பாடல் 45)



தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே

தொண்டு செய்யாது - உனக்கும் உன் அடியார்களுக்கும் தொண்டு செய்யாமல்

நின் பாதம் தொழாது - உன் திருவடிகளை வணங்காமல் (உன் திருவடிகளான அடியார்களை வணங்காமல்)

துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ - துணிவுடன் தங்கள் மனம் விரும்பியதையே பழங்காலத்தில் செய்தவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ (அவர்கள் உன் அருளைப் பெற்று என்றும் நிலையான வாழ்வை அடைந்தார்களோ இல்லையோ)

அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ - அவர்கள் செய்ததை அடியேன் கண்டு அதனைப் போல் செய்தால் அது நல்லதோ கெட்டதோ

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே - அப்படியே நான் உன் மனம் விரும்பாததைச் செய்தாலும் என்னை வெறுக்காமல் பொறுத்தருள வேண்டும்.

***

பக்தி வழியில் நிற்காமல் ஞானவழியிலும் கர்மவழியிலும் நின்று கடமைகளைச் செய்த முன்னோர்கள் பலர் உண்டு; அவர்களை 'தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ' என்கிறார். இங்கே இச்சை என்றது அவளது இச்சைவழி வந்த கடமைகளை. கடமை புரிவார் இன்புறுவார்; அவற்றை மட்டுமே தவறாமல் செய்தால் போதும்; இறைவியை வணங்கத் தேவையில்லை - என்று அந்த கர்ம மீமாம்சை வழி நின்றவர்கள் முன்னொரு காலத்தில் இருந்தார்கள். அவர்கள் உன் அருள் பெற்று நிலையான வாழ்வு அடைந்தார்களோ இல்லையோ. அதனை நான் அறியேன் என்கிறார்.

உன் அடியவன் ஆன நான் அவர்களைக் கண்டு உன்னை விட என் கடமைகளே பெரியது என்று எண்ணிச் செயல்பட்டால் அது நல்லதோ கெட்டதோ; அதனைத் தவமாகக் கொள்வாயோ குற்றமாகக் கொள்வாயோ; அதனை அறியேன். ஆனால் எப்போதாவது அப்படி நான் செய்தால் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்; குற்றம் செய்தேன் என்று என்னைத் தள்ளிவிடாதே என்கிறார்.

***

அந்தாதித் தொடை: தொண்டு செய்தே என்று சென்ற பாடல் நிறைவுற்றது. இந்தப் பாடல் தொண்டு செய்யாது என்று தொடங்கிற்று. வெறுக்கை அன்றே என்று நிறைந்தது இந்தப் பாடல். அடுத்தப் பாடல் வெறுக்கும் தகைமைகள் என்று தொடங்கும்.

எதுகை: தொண்டு செய்யாது, பண்டு செய்தார், கண்டு செய்தால், மிண்டு செய்தாலும் என்று இரண்டிரண்டு எதுகைகள் அமைந்திருக்கின்றன.

மோனை: தொண்டு - செய்யாது - தொழாது - துணிந்து, பண்டு - பரிசு, கண்டு - கைதவம், மிண்டு - பொறுக்கை - பின் (பகரமும் மகரமும் மோனைகளாக அமையும்)

உளரோ இலரோ, கைதவமோ செய்தவமோ, நன்றே அன்றே - இந்த இடங்களில் முரண் தொடை அமைந்திருக்கிறது.

21 comments:

said...

//கைதவமோ அன்றிச் செய்தவமோ//
//அது நல்லதோ கெட்டதோ//

கைதவம், செய்தவம்
சொற்களுக்குக் கொஞ்சம்
மேல் விளக்கம் தாருங்கள் குமரன்.

இரண்டுமே தவம் என்று தானே வருகிறது - அதை ஏன் நல்லது இல்லை கெட்டது என்று கூற வேண்டும்?

கைதவம் = கர்ம தவமா?
செய்தவம் = பக்தி தவமா??

said...

கைதவம் (p. 1106) [ kaitavam ] n kaitavam . < kaitava. 1. Cunning, craftiness; கபடம். மைதவழ் கண்ணி கைதவந் திருப்பா (பெருங். மகத. 15, 18). 2. Falsehood; பொய். கைதவம் புகலேன் (கந்தபு. வரவுகேள். 4). 3. Affliction, suffering; துன்பம். கைதவமே செய்யு மதுவின்களி (பிரமோத். சிவராத்திரி. 17).

செங்கோல் (p. 1581) [ cengkōl ] n ceṅ-kōl . < id. +. [M. ceṅkōl.] 1. Sceptre, a symbol of sovereignty; அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல். சேயுயர் விற் கொடிச் செங்கோல் வேந்தே (சிலப். 26, 139). 2. Kingly justice, impartial administration of justice, one of six nāṭṭamaiti, q.v., opp. to koṭu ṅ-kōl; அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லர சாட்சி. செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த (மணி. 18, 82). 3. Red-hot rod; பழுக்கக் காய்ந்த சலாகை. தீத்துறு செங்கோல் (மணி. 18, 2).

செங்கோல்கோடு-தல் (p. 1581) [ cengkōlkōṭu-tal ] v. intr ceṅ-kōl-kōṇu. < id. +. To fail in justice, rule unright eously, as the sceptre slanting; அரசநீதி தவறு தல். செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ (மணி. 28, 188).

இரவிசங்கர். கைதவம், செய்தவம் இரண்டையும் முன்பொரு முறை படித்திருந்தேன். அதனை வைத்துப் பொருள் சொன்னேன். உங்கள் கேள்வியைப் பார்த்தப் பின் இணைய அகராதியில் தேடினேன். கைதவத்திற்கு கபடம், துன்பம், பொய் போன்ற பொருட்களும் செய்தவத்திற்கு நீதி என்ற பொருளும் சொல்லப்பட்டிருக்கிறது.

said...

கைதவம் என்றால் வஞ்சனை, பொய், சூது எனவும்,

செய்தவம் என்றால் செய்கின்ற தவம், தவம் செய்தல் என்வும் வரும்.

இதை ஔவையார் அழகாகச் சொல்லியிருக்கிறார், கொன்றைவேந்தனில்!

"32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்."

நல்ல செயல்கள், தவம் செய்வதை மறந்தால், வஞ்சனையும், சூதும் மேலோங்கும்.

"செய்தவம் ஈண்டு முயலப்படும்" என வள்ளுவரும் சொல்லுகிறார்[265]

said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி எஸ்.கே.

said...

குமரன் இப்போது,
செய்த தவத்தால்தான் அன்னையைத் தொழமுடியும்
என்றே நம்புகிறேன்.
அவள் நினைவே வாராதபடி

கைதவம் செய்துவிட்டால் பின் காப்பாற்றுவது யார்?
கைதவமும் செய்யாமலும் அவள்தான் காக்க வேண்டும்.

said...

ஆமாம் அம்மா. அவள் அருளாலே தான் அவள் தாள் வணங்கமுடியும்.

said...

இது மிகவும் கருத்தாழமிக்க பாடல்.

//தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ //

இந்த வரிகளுக்கு நீங்கள் கூறியதுபோல ஞான வழியிலும், கர்ம வழியிலும் நின்று கடமைகளை செய்த பெரியோர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அல்லது பக்தி மார்க்கத்தில் சென்று, சரியை, கிரியைகளைக் கடந்து அனுபூதியடைந்து அன்னையை "நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர்" என்று அல்லும் பகலும் பூசிக்கும் முக்தர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

ஆன்மசமர்ப்பண பாவனையால் அவர்கள் இயல்பாகப் பேசும் பேச்செல்லாம் அவள் துதிகள் ஆகின்றன. அவர்கள் நடக்கும் நடையெல்லாம் அவள் ஆலயத்தை வலம் வருதல் ஆகின்றன. அவர்கள் செய்யும் செயல்களெல்லாம் பூசை முறைகளாகின்றன. படுப்பதும் அவளை விழுந்து வணங்குவதாகிறது.

இந்த தாயுமானவர் பாடலைப் பாருங்கள்

"துள்ளுறியா மனது பலிகொடுத்தேன் கர்ம
துட்டதேவதைகளில்லை
துரியநிலை சாந்ததேவதையாம் உனக்கே
தொழும்பன் அன்பு அபிடேக நீர்
உள்ளுறையில் என் ஆவி நைவேத்தியம் பிராணன்
ஓங்குமதி தூபதீபம்
ஒருகால மன்றிது சதாகால பூசையா ஒப்புவித்தேன்"

//அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ //

அன்னையின் ஓளிமயமான உருவத்தை அல்லும் பகலும் மனக்கண்ணில் காணும் மயக்கத்தால் மன்னன் என்ன திதி என்று கேட்டபோது அமாவாசை அன்று "பௌர்ணமி" என்று கூறிய பட்டர் அன்னையை இவ்வாறு கேட்கத் தேவையே இல்லை. 10 ஆவது பாடலிலேயே

"நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்" என்று சொல்லிவிட்டாரே.

இதை நமக்காகக் கேட்கிறார் என்று கொள்ளலாம்.

said...

ஆஹா. மிக நல்ல விளக்கம் ஜெயஸ்ரீ. மிக்க நன்றி. மிக மிக நன்றி.

said...

குமரன்,
அருமையான பாடல். உங்களின் விளக்கமும் சுவையாகவும் சுருக்கமாகவும் இருந்தது. அத்துடன் சக பதிவர்களின் பின்னூட்டங்கள் மூலமும் பல விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. மிக்க நன்றி.

இன்னும் தொடருங்கள்.

said...

நன்றி வெற்றி. ஆமாம். பின்னூட்டம் இடும் நண்பர்களின் கருத்துகளின் மூலம் பல செய்திகளை அறிய முடிகிறது. அது நம் அதிட்டமே.

said...

http://sankarmanicka.blogspot.com/2007/04/blog-post_25.html

said...

வஜ்ரா, உங்கள் இடுகையை முன்பே பார்த்தேன். கூகுள் ரீடரில் உங்கள் பதிவு இருப்பதால் என்னால் தொடர்ந்து உங்கள் இடுகைகளைப் படித்துவர முடிகிறது; இனிமேலும் அது நடக்கும்.

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

குமரா!
கைதவம் போன்ற புதிய சொல் அறிந்தேன்.
விளக்கங்களுடன் கூடிய பின்னூட்டங்களும் நன்று.

said...

ஆமாம் ஐயா. நண்பர்கள் மிக நல்ல விளக்கங்கள் தந்திருக்கிறார்கள்.

said...

//மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே//

ஜெயஸ்ரீ அவர்கள் சொல்வது போல எல்லாமே நமக்காகத்தான் பட்டர் அன்னையைக் கேட்பது போல் இருக்கிறது. எனக்கு ஜெயஸ்ரீ அவர்கள் பேசிக் கேட்க வேணும் போல் இருக்கிறது :) அவர்கள் தொடர்பு முகவரி கிடைக்குமா?

said...

என்னிடம் ஜெயஸ்ரீயின் முகவரியோ தொடர்பு எண்ணோ இல்லையே கவிநயா. அவருடைய மின்னஞ்சல் முகவரி இருக்கலாம். தேடி அனுப்புகிறேன்.

said...

Intha paadalai parayanam seithaal 'ulagoar paliyil irunthu vidupadalaam'

said...

நன்றி திரு.கன்பூசியஸ்.