Monday, April 30, 2007

நாயகி நான்முகி நாராயணி (பாடல் 50)நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

நாயகி - உலகனைத்துக்கும் தலைவி

நான்முகி - நான்முகனான பிரம்மதேவரின் சக்தி

நாராயணி - நாராயணனின் சக்தி

கை நளின பஞ்ச சாயகி - தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்

சாம்பவி - சம்புவான சிவபெருமானின் சக்தி

சங்கரி - இன்பம் அருள்பவள்

சாமளை - பச்சை வண்ணமுடையவள்

சாதி நச்சு வாய் அகி - கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள்

மாலினி - பலவிதமான மாலைகளை அணிந்தவள்

வாராகி - உலகங்கள் காக்கும் வராக ரூபிணி

சூலினி - திரிசூலம் ஏந்தியவள்

மாதங்கி - மதங்க முனிவரின் திருமகள்

என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - என்று பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும்.

அம்மையின் திருப்பெயர்கள் பலவற்றைக் கூறி அவளைத் துதித்து அவள் திருவடிகளே நமக்குக் காவல் என்கிறார்.

***

அருஞ்சொற்பொருள்:

நளினம் - வடமொழியில் தாமரை
பஞ்ச - வடமொழியில் ஐந்து
சாயகம் - வடமொழியில் அம்பு
சம்பு, சங்கர - சம் = இன்பம்; பு = பிறப்பிடம்; கர = செய்பவன்; ஆக சம்பு, சங்கரன் என்னும் போது இன்பத்தின் பிறப்பிடம், இன்பத்தைத் தருபவன் என்று பொருள்; சாம்பவி, சங்கரி அவற்றிற்குப் பெண்பால். இவையும் வடசொற்களே.
சாமளை - ஷ்யாமளை என்னும் வடசொல் - பச்சைநிறத்தவள்
கியாதி - க்யாதி என்னும் வடசொல் - புகழ்.

அந்தாதித் தொடை: நாயகியே என்று சென்ற பாடல் நிறைவடைந்தது. நாயகி என்று இந்தப் பாடல் தொடங்கியது. அரண் நமக்கே என்று இந்தப் பாடல் நிறைகிறது. அரணம் என்று அடுத்தப் பாடல் துவங்கும்.

எதுகை: நாயகி, சாயகி, வாயகி, ஆயகியாதி

மோனை: நாயகி - நான்முகி - நாராயணி - நளின, சாயகி - சாம்பவி - சங்கரி - சாதி, வாயகி - வாராகி - மாதங்கி, ஆய - அரண்.

15 comments:

said...

அன்னைக்கு வழிபாடு நிறைந்து - அதனால்
அனைவார்க்கும் நெஞ்சங்கள் நிறைந்ததா?

அருமையான தொடர் குமரன்...
உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தொடரும் கூட! :-)

இனி அடுத்து ஐயனுக்கு அடுத்த 50ஆ?

said...

அண்ணா,

மிகவும் பரிச்சயமான தினமும் பாராயணம் செய்யும் ஒரு பாடல்.

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அம்பிகையை நேரில் தரிசிக்கலாம்'.

said...

//கை நளின பஞ்ச சாயகி//
திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்.

அன்னையின் கரத்தில் மலர் கண்டுள்ளோம். ஆனால் மலர் அம்புகளைப் படங்களில் கண்டதில்லை.
இதற்கு ஏதேனும் கதை உள்ளதா குமரன்?

பெண் குழந்தைப் பெயர்கள், இப்பாடலில் கொட்டிக் கிடக்கின்றனவே! தற்காலத்துக்கு ஏற்றாற் போல் உள்ள பெயர்களும் தான் உள்ளன!

இறைவியின் நாம சங்கீர்த்தனாமாய் அமைந்து நிறைந்ததே, நிறைவாக உள்ளது குமரன்!

said...

ஆமாம் இரவிசங்கர். அம்மையின் பாகம் நிறைவு பெற்றது. அடுத்து ஐயனின் பாகத்தை எழுத வேண்டும்.

மலர்களையே அம்பாக எய்கிறாள் அம்பிகை. அவை கூர்மையான அம்புகள் இல்லை இரவிசங்கர். அதனால் அவற்றை 'அம்பு' வடிவில் நாம் காண்பதில்லை.

ஆமாம். நாம சங்கீர்த்தனமாகத் தான் அமைந்திருக்கிறது.

said...

அம்பிகையின் திருப்பெயர்களை எல்லாம் சொல்லி அவள் திருவடிகளே நமக்கு அரண் என்றதால் 'அம்பிகையை நேரில் தரிசிக்கலாம்' என்பது பொருத்தம். நன்றி சிவமுருகன்.

said...

//'அம்பு' வடிவில் நாம் காண்பதில்லை.//
அவற்றை அன்பு வடிவில் காண்கிறோம் :)

said...

ஆமாம் சிவமுருகன். :-)

said...

You are invited by சர்வேசன் for the 'எட்டு' play!

Click here for details and respond!

நன்றி!

said...

அழைப்பிற்கு நன்றி சர்வேசன். விரைவில் இடுகிறேன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

குமரா!
அம்பிகையின் திருநாமத் தொகுப்பிந்தப் பாடல்.
பெண்குழந்தைகளுக்குச் சூட்ட அழகிய பெயர்கள்.

said...

ஆமாம் ஐயா. மிக எளிதாக மக்கள் நாவில் புழங்கும் சந்தமிகுந்த பாடலும் கூட. திரைப்படத்தாலும் நன்கறியப்பட்ட ஒன்றாகிவிட்டது.

இறைவன் திருப்புகழைப் பாடிப் பரவும் போதும் திருப்பெயர்களால் ஆன பாடல்கள் என்றால் மக்கள் எளிதாகக் கற்றுக் கொண்டு பாடுவதைப் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் இந்தப் பாடலும் எளிதாக மக்கள் கற்றுக் கொண்டு பாடலாம்.

நீங்கள் சொன்னது போல் பெண்குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட இந்தப் பாடலைப் போன்ற பாடல்கள் பெரிதும் உதவி செய்யும். எனக்குத் தெரிந்து நிறைய பேர்கள் லலிதா சகஸ்ரநாமத்தைப் பார்த்துப் பெயரிட்டிருக்கிறார்கள்.

said...
This comment has been removed by a blog administrator.