Thursday, May 08, 2008

முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே (பாடல் 92)


பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே


பதத்தே உருகி - உன் திருப்பெயர்களையும் உன் புகழையும் கூறும் சொற்களிலே ஒரு சொல் சொன்னவுடனேயே உருகி

நின் பாதத்திலே மனம் பற்றி - உன் திருவடிகளிலே மனத்தை நிலைபெறச் செய்து

உந்தன் இதத்தே ஒழுக - உந்தன் திருவுளத்திற்கு இதமான படி செயல்பட

அடிமை கொண்டாய் - என்னை அடிமையாகக் கொண்டாய்.

இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன் - இனி மேல் நான் வேறொருவர் கருத்திலும் அறிவினை இழக்க மாட்டேன்.

அவர் போன வழியும் செல்லேன் - அவர்கள் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்.

முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே - மும்மூர்த்திகளும் மற்ற எல்லோரும் போற்றும் அழகான புன்னகையை உடையவளே

தேவரும் யாவரும் போற்றும் அழகிய புன்னகையை உடையவளே! உன் பெயரைச் சொன்னாலே உருகி, உன் திருவடிகளிலேயெ மனத்தை வைத்து, உன் மனத்திற்கு இசைந்தபடி நான் நடந்து கொள்ளுமாறு என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டாய். எல்லோருக்கும் அடிப்படையான நீயே என்னை ஏற்றுக் கொண்ட பின்னர் இந்த உலகத்தில் வாழும் யாருடைய கருத்தையும் நான் கேட்டு அவர்கள் வழி செல்லவும் வேண்டுமோ? தேவையில்லை. நீயே முதல் மூவருக்கும் யாவருக்கும் முதன்மையான பொருள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பதந்தருமே என்று நிறைய இந்தப் பாடல் பதத்தே என்று தொடங்கியது. இந்தப் பாடல் முகிழ்நகையே என்று நிறைய அடுத்தப் பாடல் நகையே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பதத்தே, இதத்தே, மதத்தே, முதத்தேவர்

மோனை: பதத்தே - பாதத்திலே - பற்றி, இதத்தே - இனி, மதத்தே - மதி - மயங்கேன், முதல் - மூவரும் - முகிழ்ந்கையே.

12 comments:

said...

தேவரும் யாவரும் போற்றும் அழகிய புன்னகையை உடையவளே! உன் ////பெயரைச் சொன்னாலே உருகி, உன் திருவடிகளிலேயெ மனத்தை வைத்து, உன் மனத்திற்கு இசைந்தபடி நான் நடந்து கொள்ளுமாறு என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டாய். எல்லோருக்கும் அடிப்படையான நீயே என்னை ஏற்றுக் கொண்ட பின்னர் இந்த உலகத்தில் வாழும் யாருடைய கருத்தையும் நான் கேட்டு அவர்கள் வழி செல்லவும் வேண்டுமோ? தேவையில்லை. நீயே முதல் மூவருக்கும் யாவருக்கும் முதன்மையான பொருள்.////

இப்படி அதீத பக்தி கொண்டு, ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை இறைவிடம்
ஒப்படைத்து விட்டால், அப்புறம் கவலை ஏது? கலக்கம் ஏது? கண்ணீர் ஏது?
அருமை!

said...

அருமை, குமரன்! பாடலும், படமும், விளக்கமும், ஒன்றையொன்று மிஞ்சுகின்றன...

பதத்தே உருகி அவள் பதம் ஒன்றையே மனம் பற்றுதல் வேண்டும்.

said...

//இப்படி அதீத பக்தி கொண்டு, ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை இறைவிடம்
ஒப்படைத்து விட்டால், அப்புறம் கவலை ஏது? கலக்கம் ஏது? கண்ணீர் ஏது? அருமை!//

ரீப்பிட்டே...

said...

உண்மை தான் வாத்தியார் ஐயா. மிகப் பெரிய நிலை தான் அந்த நிலை.

said...

நன்றி கவிநயா அக்கா.

said...

நன்றி மௌலி அண்ணா.

said...

யான் எனதெனப் பற்றிய ஒன்றை விடாது பற்றி உணர்வதே அறிவு என உணர வைக்கும் பாடல்!

இதை எவரும் ஓதலாம்!

'நீ தண்ணீர் வேண்டுமன விரும்பினால் ஒரே இடத்தில் தோண்டு! இங்கே அங்கே என்று அலை பாயாதே!' என்னும் பாபாவின் வரிகள் நினைவுக்கு வந்தன.

said...

குமரன்,
அபிராமி அந்தாதியின் அழகை அனைவரும் அறியும் வண்ணம்
மிகச் சிறப்பாகச் சொல்லும் உங்கள்
எண்ணம் சிறக்க வாழ்த்துக்கள்..

said...

பாபாவின் அறிவுரை மிகச் சிறந்த அறிவுரை எஸ்.கே.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

said...

வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் ஜீவி ஐயா.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மனப்பக்குவம் உண்டாகும்'.

said...

பதத்தே உருகி உன் பாதத்தே மனம் பற்றி என்றதால் மனம் பதமடையும் என்ற பயன் பொருத்தமானது. நன்றி சிவமுருகன்.