Wednesday, May 14, 2008

தெய்வத்தைப் புகழ்வதெல்லாம் பெரும் நகைச்சுவை (பாடல் 93)


நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை மானே முதுகண் முடிவுயில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம்
மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே

நகையே இது - பெரும் நகைச்சுவை இது.


இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு - இந்த உலகங்களை எல்லாம் பெற்ற நாயகிக்கு

முகையே முகிழ் முலை - முகிழ்த்தெழுந்த முலை மலர் மொட்டு போல் இருக்கிறது என்றும்

மானே முதுகண் - அழகிய நீண்ட கண்கள் மானைப் போல் இருக்கிறது என்றும்

முடிவுயில் அந்த வகையே பிறவியும் - சொல்லி முடியாத அளவிற்கு இருக்கும் வடிவங்களை உடைய இவளை

மலைமகள் என்பதும் - மலையரசனுக்கு மட்டுமே பிறந்தவளைப் போல் மலைமகள் என்பது

வம்பே - இப்படி இவளைப் புகழ முயல்வதெல்லாம் தேவையில்லாத செயல்களே

மிகையே இவள் தன் தகைமையை நாம் நாடி விரும்புவதே - இப்படி இவளது அறிய இயலாத பெருங்குணங்களை நாடித் தெரிந்து கொள்ள விரும்புவதும் முயல்வதும் நம் தகுதிக்கு மிகையே.

இறைவியின் பெருமைகளைப் பேசப் புகுந்து போற்றுதலாகச் சொல்லும் சொற்களெல்லாம் அவளது பெருமையின் முன் எவ்வளவு சிறுமையானது என்பதை 'தன்னைத் தானே நகைத்துக் கொள்ளும்' வகையில் சொல்கிறார் பட்டர். உலகத்து அழகெல்லாம் அவள் அழகாக இருக்க அதில் ஏதோ ஒரு பூவின் மொட்டினைப் போல் அவள் திருமுலை இருக்கின்றது என்பதுவும், எல்லாக் கண்களும் அவள் கண்களாக இருக்க அதில் ஏதோ ஒரு வகைக் கண்களைப் போல் அவள் திருக்கண்கள் இருக்கின்றன என்பதுவும் எல்லாப் பிறவிகளாகவும் அன்னையே இருக்க அவள் மலைமகள் மட்டுமே என்பதுவும் உலகங்களை எல்லாம் ஈன்ற நாயகியின் திருக்குணங்களை சிறியோர்கள் அறிய விரும்பி முயல்வதும் மிகையானது தானே; நகைப்பதற்கு உரியது தானே.

அடியேன் சிறிய ஞானத்தன் என்று தொடங்கும் நம்மாழ்வாரின் பாசுர வரிகளை அடியேனின் பதிவு முகவுரையில் இட்டிருக்கிறேன். அங்கும் நம்மாழ்வார் சொல்லுவது இதே கருத்தினைத் தான்.

***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் முகிழ்நகையே என்று நிறைய இந்தப் பாடல் நகையே என்று தொடங்கியது. இந்தப் பாடல் விரும்புவதே என்று நிறைய அடுத்தப் பாடல் விரும்பி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: நகையே, முகையே, வகையே, மிகையே

மோனை: நகையே - நாயகிக்கு, முகையே - முகிழ் - முலை - மானே - முதுகண் - முடிவு, வகையே - வம்பே - மலைமகள், மிகையே - விரும்புவதே.

6 comments:

said...

ஆமாம், நிச்சயமாய். அவளுடைய பெருமைகளைச் சொல்ல அவளால் படைக்கப்பட்டவற்றை அவளுக்கே ஒப்பிடுதல் - "உங்க பிள்ளையைப் போலவே நீங்க இருக்கீங்க"ன்னு சொல்றதைப் போலத்தான்...

said...

சொல்லால் வரையுறுக்க இயலாத இயல்பினைக் கொண்டவளாம் எங்கள் தாய், எங்கள் தாய், எங்கள் தாய்!

said...

ஆகா. ரொம்ப நல்லா சொன்னீங்க கவிநயா அக்கா. உண்மை தானே.

said...

உண்மை ஜீவா. வேதங்களும் அதனைத் தானே சொல்கின்றன.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'உள்ளத்தே உண்மை ஒளி உண்டாகும்'.

said...

இறைவனை அறிந்தேன் என்பவன் அறியாதவனே; அறியேன் என்று சொல்பவனே உண்மையில் அறிந்தவன் என்று ஈசாவாஸ்ய உபனிடதம் சொல்வது போல் இந்தப் பாடல் அமைந்துள்ளதால் இதனைப் பாராயணம் செய்தால் உள்ளத்தே உண்மை ஒளி உண்டாகும் என்பது பொருத்தமான பயன். நன்றிகள் சிவமுருகன்.